

முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். அதிலும் சேலத்து மாம்பழத்துக்கு உலகம் முழுவதிலும் தீவிர ரசிகர்கள். குறிப்பாக அல்போன்சா மாம்பழத்தை விரும்பாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதன் சுவைக்கு அனைவரும் அடிமை என்பதில் சந்தேகமில்லை.
பொதுவாக அந்தந்த மாநிலத்தில் பிரபலமாக உள்ள தயாரிப்புகள் பிற மாநிலங்களில்தான் மிகுந்த வரவேற்பைப் பெறும். அந்த வகையில் அல்போன்சா மாம்பழங்களுக்கு மிகுந்த வரவேற்பு மகாராஷ்டிர மாநிலத்தில்தான்.
இம்முறை சீசன் முடிந்த பிறகும் மும்பையின் பல பகுதிகளிலும் மாம்பழம் தாராளமாகக் கிடைத்தது. இது மும்பை வாசிகளுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. விசாரித்த போது, தாங்கள் விரும்பி சாப்பிடும் அல்போன்சா மாம்பழம் இந்தியாவில் விளைந்தது அல்ல. தென்னாப்பிரிக்காவின் மலாவி பகுதியிலிருந்து வந்துள்ளது தெரியவந்தது. அளவில் சற்று சிறியதாக இருந்தாலும், சுவையில் அல்போன்சாவுக்கு இணையாக இருந்த மாம்பழங்கள் தற்போது மும்பை நகரில் கிடைக்கின்றன.
9 ஆண்டுகளுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவின் மலாவி பகுதியில் உள்ள பண்ணையில் வைக்கப்பட்ட மாமரங்கள் இப்போது பழங்காய்ச்சி (பணங்காய்ச்சி) மரங்களாக மாறியுள்ளன. இந்த மா மரங்கள் அனைத்தும் ரத்னகிரி பகுதியிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு மலாவி பகுதியில் 600 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டிலிருந்தே இந்த மாம்பழங்கள் மும்பைக்கு வந்த போதிலும் இப்போதுதான் இவை அனைத்தும் மலாவியிலிருந்து இறக்குமதி செய்யப்படுவது தெரியவந்துள்ளது. இந்தியாவில் மாம்பழங்கள் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை கிடைக்காது. ஆனால், மலாவியில் இந்த காலகட்டத்தில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்திய மாம்பழங்கள் ஜனவரி மாதம் தொடங்கி ஆகஸ்ட் வரை கிடைக்கும்.
தமிழ்நாடு, கொங்கன் பிராந்தியங்களிலிருந்து மாம்பழங்கள் மும்பை சந்தையை முற்றுகையிடும். ஆனால் சீசன் இல்லாத சமயங்களில் மலாவி மாம்பழங்கள் கிடைக்கத் தொடங்கி உள்ளன. மலாவி பகுதியில் மாமரங்கள் சாகுபடி செய்யலாம் என்பதை பிரிட்டன், ஜெர்மன் மற்றும் ஆப்பிரிக்க மேம்பாட்டாளர்கள் முடிவு செய்து முதலில் 26 ஹெக்டேரில் பயிரிட்டனர். தற்போது இது 600 ஹெக்டேர் அளவுக்கு பயிராகிறது. ஒரு அட்டைப்பெட்டியில் 3 கிலோ மாம்பழங்கள் உள்ளன. இவற்றின் விலை ரூ.1,400 முதல் ரூ.2,000 வரை விற்கப்படுகிறது.
மலாவியிலிருந்து நேரடி விமான சேவை இருந்தால் மாம்பழங்களின் விலை மேலும் குறையும் என்கின்றனர் மும்பை வர்த்தகர்கள். ஒரு கிலோவுக்கு ரூ.200 கூடுதலாகிறது. அதேபோல இறக்குமதி வரி 38 சதவீதம். இதனால் இதன் விலை அதிகமாக உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். கொங்கன் பிராந்தியத்தில் நிலவும் தட்ப வெப்ப நிலை மலாவியில் நிலவுவதால் இந்திய மாம்பழங்களைப் போன்று சுவையானதாக இவை உள்ளன.
பழங்கள் அனைத்தும் ஐரோப்பியஉணவு கட்டுப்பாட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதால் பிரச்சினையும் குறைவு. இந்த ஆண்டு 100 டன் மாம்பழங்களை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இனி ஆண்டு முழுவதும் மாம்பழம் சாப்பிடலாம். தென்னாப்பிரிக்காவின் மலாய் தயவில்.