

டெல்லியில் சுற்றுச்சூழல் மாசு உச்சபட்சத்தை எட்டியுள்ளது. காற்று மாசு மிகப் பெரும் அச்சுறுத்தலாக மாறிவிட்டது. புவி வெப்பமடைவது சர்வதேச சமூகத்தில் மிகுந்த கலக்கத்தை உருவாக்கி வருகிறது. டெல்லியில் காற்று மாசுபாட்டுக்கு விவசாயிகள் காரணம் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்தாலும், உலகிலேயே மிகவும் அச்சுறுத்தலான மாசுபாட்டுக்கு காரணமாக விளங்கும் துறையை யாரும் கண்டு கொள்வதேயில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
அழகு, பல சமயங்களில் ஆபத்துக்கு வழிவகுத்துவிடுகிறது. உலக சமூகத்துக்கும் இனி அச்சுறுத்தலாக உருவாகி வருவதும் அழகு சார்ந்த துறை என்றால் நம்புவது சற்று கடினமான விஷயம். `ஃபேஷன் இண்டஸ்ட்ரி’ எனப்படும் அழகு சார்ந்த பொருள் தயாரிப்பு துறைதான் உலகிலேயே அதிக அளவிலான மாசுகளை வெளியிடுகின்றது. மக்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளவும், இளமையாக காட்டிக் கொள்ளவும் முயற்சிக்கும் அதேவேளையில் அது எதிர்கால சந்ததியை வெகுவாக பாதிக்கிறது என்பதை பலரும் உணர்வதேயில்லை.
வானில் பறக்கும் விமானங்கள் வெளியிடும் புகை மற்றும் கப்பல்கள் வெளியிடும் புகை இவற்றால் ஏற்படும் கரியமில வாயு பாதிப்புகளைக் காட்டிலும் ஃபேஷன் இண்டஸ்ட்ரி எனப்படும் அழகு சார்ந்த துறைகள் வெளியிடும் கரியமில வாயு மிக மிக அதிகம். உலகம் முழுவதும் அழகு சார்ந்த பொருள்களில் பிரதானமாயிருப்பது ஆடைகள்தான். 2000-வது ஆண்டு மக்கள் வாங்கிய ஆடைகளை விட தற்போது 60 சதவீதம் கூடுதலாக ஆடைகளை வாங்கிப் பயன்படுத்தியுள்ளனர். ஆடை சார்ந்த துறை வெளியிடும் கரியமில வாயு அளவு 10 சதவீதமாகும். அத்துடன் சாயக் கழிவுகளால் நீராதாரம் பாதிக்கப்பட்டு நீர்வளமும் கெடுகிறது.
ஒரு விநாடிக்கு ஒரு லாரி நிறைய ஜவுளி சார்ந்த குப்பைகள் எரிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுக்கு 85 சதவீத ஜவுளி கழிவுகள் வெளியேறுகின்றன. இந்த அளவானது சிட்னி துறைமுகத்தையே மூழ்கடித்துவிடும் அளவுக்கு உள்ளதாகும். துணிகளை துவைப்பதால் 5 லட்சம் டன் மைக்ரோ பைபர் வெளியேறி கடலில் கலக்கிறது. இது 5,000 கோடி பிளாஸ்டிக் பாட்டிலுக்கு சமமான கேடாகும்.
உலக அளவில் அதிகம் தண்ணீரை நுகரும் துறையாக இத்துறை விளங்குகிறது. ஒரு சட்டை உருவாக்க 700 கேலன் தண்ணீர் தேவைப்படுகிறது. இந்த அளவானது ஒரு மனிதன் நாளொன்றுக்கு 8 கோப்பை தண்ணீர் வீதம் சாப்பிட்டால் மூன்றரை ஆண்டுகளுக்குப் போதுமானதாகும். ஒரு ஜீன் பேண்ட் தயாரிப்பதற்கு 1,000 கேலன் தண்ணீர் தேவைப்படுகிறது. இந்த அளவானது ஒரு மனிதனுக்கு 10 ஆண்டுக்கான குடிநீர் தேவை அளவாகும்.
உஸ்பெகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட பருத்தி சாகுபடி காரணமாக 50 ஆண்டுகளில் ஏரல் கடலை முற்றிலுமாக வற்றச் செய்து விட்டது. இப்போது அங்கு வெறும் தண்ணீர் குட்டைகள்தான் உள்ளன. புவி வெப்பமடைவது குறித்து பேசிவரும் உலகத் தலைவர்கள் பெரிய தொழிற்சாலைகள்தான் கரியமில வாயு வெளியிடுவதாகவும், ஆட்டோமொபைல் துறையின் பங்களிப்பு கணிசமாக சூழலை பாதிப்பதாகவும் கருதுகின்றனர். ஆனால் உண்மையில் ஜவுளித்துறை சார்ந்த ஃபேஷன் இண்டஸ்ட்ரியின் பாதிப்பை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசர அவசியமானது.
இதில் பிரச்சினை என்னவெனில் இதை எங்கிருந்து தொடங்குவது, எதைக் கட்டுப்படுத்துவது என்பது யாருக்கும் புரியாமலிருப்பதுதான் பிரச்சினையின் தீவிரத்துக்கு முக்கிய காரணமாகும். இத்துறையால் ஏற்படும் பாதிப்புகளை படிப்படியாகத்தான் குறைக்க முடியும். இத்துறையில் உள்ள சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி பெரிய நிறுவனங்களும் சூழல் பாதிப்பில்லா எரிசக்திக்கு மாற வேண்டியது அவசியம். தங்கள் தொழில் மூலம் வெளியேறும் கழிவுகள் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை உணராதவரை பிரச்சினைக்கு தீர்வு காண்பது கடினமே. அழகு ஆபத்தானது என்பது அதை உணராதவரை புரியாது.