

ஜாவா நிறுவனம் அதன் புதிய தயாரிப்பான ஜாவா பெராக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. செக் குடியரசைச் சேர்ந்த நிறுவனமான ஜாவா, 1961-ம் ஆண்டு இந்தியாவில் முதன் முதலாக மைசூரில் அதன் ஆலையை திறந்தது. அந்த காலகட்டத்தில் ராயல் என்பீல்டுக்கும், ஜாவாவுக்கும்தான் பெரும் போட்டி. பல திரைப்படங்களில் ஜாவா வாகனங்களை நீங்கள் பாத்திருக்கக் கூடும்.
அதை ராயல் என்பீல்டு என்று நினைத்திருப்பீர்கள். அந்த அளவுக்கு இரு நிறுவனத் தயாரிப்புகள் பார்ப்பதற்கு ஒரே மாதிரியான தோற்றம் தரும். 1971-க்குப் பிறகு யெஸ்டி என்ற பெயரில் புழக்கத்தில் இருந்தது. இவ்வாகனத்தின் புகை மாசுபாடு காரணமாக 1996 இந்தியாவில் இதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் ஜாவா பைக்குகளை இந்தியாவில் விற்பதற்கான உரிமையைப் பெற்றது. கடந்த ஆண்டு ஜாவா, ஜாவா42, ஜாவா பெராக் என்ற அதன் மூன்று மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. தற்போது வெளிவந்து இருப்பது அதன் மூன்றாவது மாடல்தான்.
இது பிஎஸ் 6 முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 334 சிசி கொண்டிருக்கும் பெராக், 30 ஹார்ஸ் பவரை 31 என்எம் டார்க்கில் உற்பத்தி செய்யக் கூடியது. முந்தைய இரு மாடல்களிலிருந்து தோற்ற அமைப்பில் முற்றிலும் மாறுபட்டது இந்த பெராக். இதன் விலை ரூ.1.95 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கான முன்பதிவு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தொடங்க உள்ளது. ஏப்ரல் முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. என்பீல்டுக்கு சரியான போட்டியாளானாக இந்த ஜாவா பெராக் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.