

ஆட்டோமொபைல் துறை மந்தமாக இருந்தாலும் இந்த வருடத்தில் புதிய அறிமுகங்களுக்கு குறைவே இல்லை. அந்த வகையில் வோல்வோ நிறுவனமும் மந்த நிலையைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த வருடத்தில் தனது இரண்டாவது மாடலை இந்தியக் கார் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. பெட்ரோலில் இயங்கக்கூடிய வோல்வோ எக்ஸ்சி40 டி4 என்ற இந்த மாடல் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினைக் கொண்டது. இந்த இன்ஜின் 190 ஹெச்பி பவரை 300 என்எம் டார்க் இழுவிசையில் வெளிப்படுத்தக்கூடியது.
இது எட்டு கியர்களைக் கொண்ட ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது டீசல் வேரியன்ட்டிலிருந்து சில வித்தியாசங்களைக் கொண்டுள்ளது. அதாவது ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் பெட்ரோல் மாடலில் இல்லை. முன்பக்க வீல் டிரைவ் ஆப்ஷன் மட்டுமே உள்ளது. இதில் பேடில் ஷிஃப்டிங், அடாப்டிவ் குரூயிஸ் கன்ட்ரோல், ஆட்டோமேடிக் பார்க்கிங், வயர்லஸ் சார்ஜிங், ஹேண்ட் ஃப்ரீ பூட் ஓப்பனிங் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இது தற்போது பிஎஸ் 4 தர நிர்ணய விதிகளின்படிதான் உருவாக்கப்பட்டுள்ளது. 2020-ல் பிஎஸ் 6 தரத்துக்கு அப்கிரேட் செய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விலை ரூ.39.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.