

கீர்த்தி சனகசேத்தி
இஎஸ்ஓபி (ESOP) என்று சொல்லப்படும் ஊழியர்களுக்கான உரிமைப் பங்கு ஒதுக்கீடு திட்டமானது, நிறுவனத்துக்காக தங்களது உழைப்பை கொடுக்கும் ஊழியர்களுக்கு நிறுவனம் வழங்கும் சிறந்த மரியாதை வெகுமதியாகப் பார்க்கப்படுகிறது. இது ஒருவகையில் நிறுவனம்-ஊழியர்கள் என இருதரப்புக்கும் சாதகமான திட்டமாகும்.
இந்த இஎஸ்ஓபி திட்டத்தில் நிறுவனத்தின் பங்குகள் அதன் ஊழியர்களுக்கு ஒரு முன்முடிவு செய்யப்பட்ட விலையில் எதிர்காலத்தில் வாங்கிக்கொள்ள உரிமை வழங்கப்படுகிறது.
அந்தக் குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு ஊழியர்கள் அந்தப் பங்குகளை வாங்கிக்கொள்ளலாம். இதன் மூலம், ஊழியர்களுக்குச் சலுகை விலையில் நிறுவனத்தின் பங்குகள் கிடைப்பதால் ஊழியர்களும் நிறுவனத்தின் லாபத்தில் தங்களின் பங்கைப் பெறுகிறார்கள். அதேசமயம், நிறுவனமும் ஊழியர்களுக்கும் நிறுவனத்தின் வளர்ச்சியில் பங்கு உண்டு என்பதை இதன் மூலம் வெளிப்படுத்தி அவர்களை உற்சாகப்படுத்துகிறது.
இதன் மூலம் நிறுவனத்தின் இலக்குகளை நோக்கி ஊழியர்களை உந்தித்தள்ள முடியும். பங்குச் சந்தை தொடர்ந்து காளையின் போக்கில் இருக்கும்பட்சத்தில் இந்த இஎஸ்ஓபி திட்டத்தின் மூலம் பெற்ற பங்குகள் மூலம் ஊழியர்கள் நல்ல லாபத்தைப் பார்க்க முடியும். ஆனாலும், அந்த லாபத்துக்கு அதிகபட்ச வரியும் செலுத்த வேண்டியிருக்கும்.
எனவே இஎஸ்ஓபி திட்டத்தில் பங்குகள் பெறும் ஊழியர்கள் அதற்கான வரி விதிமுறைகளையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இந்தத் திட்டத்தில் பங்குகள் பெறுவது குறித்து முடிவுகள் எடுக்க இது உதவியாக இருக்கும்.
முதலில் இந்தத் திட்டத்தில் ஒதுக்கப்படும் பங்குகளை ஊழியர்கள் அந்த நிதி ஆண்டின் வருமானத்தில் சேர்க்க வேண்டும். அடுத்ததாக, ஒதுக்கப்படும் பங்குகளின் மதிப்பானது, வரி விதிப்புக்கு உட்படுத்தப்படும். ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை விலைக்கும், சந்தை விலைக்கும் உள்ள வித்தியாசத்துக்கு ஊழியர்கள் வரி செலுத்த வேண்டும். சந்தை விலையை அன்றைய வர்த்தக தொடக்க விலையையும், வர்த்தக நிறைவு விலையையும் சராசரியாகக் கணக்கிட்டு முடிவு செய்வார்கள்.
உதாரணமாக, ஏபிசி நிறுவனத்தின் 1000 பங்குகள் ஊழியர் ஒருவருக்கு ஒரு பங்கு வீதம் ரூ.100 விலைக்கு வழங்கப்படுகிறது. சந்தை விலை ரூ.103 (தொடக்க விலை ரூ.101-நிறைவு விலை ரூ.105) எனில், இரண்டுக்குமான வித்தியாசம் ரூ.3. அதுவே 1000 பங்குகள் எனில் ரூ.3000. இந்தத் தொகைக்கு ஊழியர் வரிச் செலுத்த வேண்டும். பங்குச் சந்தை விடுமுறை நாளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் முந்தைய வர்த்தக நாளின் வர்த்தக நிறைவு விலையைக் கொண்டு இது கணக்கிடப்படும். சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்கள் எனில் அதன் சந்தை விலை ஒரு வணிக வங்கியினால் நிர்ணயிக்கப்படும்.
மூலதன ஆதாயம்
இஎஸ்ஓபி திட்டத்தின்கீழ் பெறப்பட்ட பங்குகளை விற்பனை செய்யும்போதும் வரி கணக்கிடப்படும். அந்தப் பங்குகள் மூலம் அடைந்த மூலதன ஆதாயம் வரி விதிப்புக்கு உட்படுத்தப்படும். எவ்வளவு காலத்துக்குப் பிறகு அந்தப் பங்குகள் விற்கப்படுகின்றன என்பதைப் பொறுத்து வரி விதிப்பு மாறுபடும். பங்குகள் பெறப்பட்டு ஒருவருடத்துக்குள்ளாக விற்பனை செய்தால், குறுகிய கால மூலதன ஆதாயமாகக் கருதி அதற்கு 15 சதவீதம் வரை வரி கணக்கிடப்படும். 12 மாதங்களுக்குத் தாண்டி விற்பனை செய்தால் நீண்டகால மூலதன ஆதாயமாகக் கருதப்படும். அத்தகைய மூலதன ஆதாயம் ரூ.1 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் 10 சதவீதம் வரி விதிக்கப்படும்.
ஊழியர்களுக்கு வழங்கப்படும் இஎஸ்ஓபி பங்குகள் லாபகரமானதா என்பது அதன் ஓனர்ஷிப் காஸ்ட் பொருத்தது. மேலே குறிப்பிட்ட உதாரணத்தின்படி, ஒரு பங்கின் செலவு ரூ.103. ஆனால், பிப்ரவரி 1, 2018-க்கு முன்பு பங்குகளை வாங்கியிருந்தால், அதன் நீண்டகால மூலதன ஆதாய வரி விதிமுறைகளின்படி கணக்கிடும்போது, ஓனர்ஷிப் காஸ்ட் என்பது அதிகமாக இருக்கும்.
பட்டியலிடப்படாத நிறுவனங்களின் பங்குகள் எனில், 24 மாதங்களுக்குள் விற்பனை செய்தால் குறுகிய கால மூலதன ஆதாயம் என்பது கணக்கிடப்படும். அதற்கு தனிநபர் வருமான வரி வரம்புக்குட்பட்டு வரி விதிக்கப்படும். 24 மாதங்களுக்குப் பிறகு விற்பனை செய்தால் 20 சதவீத வரி விதிக்கப்படும்.
நிபந்தனைக்குட்பட்ட பங்குகள்
நிறுவனங்கள் இந்த இஎஸ்ஓபி திட்டத்தில் Restricted Stock Unit (RSU) என்ற நிபந்தனைக்குட்பட்ட பங்குகளையும் வழங்குவதுண்டு. அதாவது ஊழியர் ஒருவர் தனது இலக்கை அடைந்திருந்தாலோ, நிறுவனம் தனது இலக்கை அடைந்திருந்தாலோ வெகுமதியாக இந்தப் பங்குகள் வழங்கப்படலாம்.
இதற்கு ஊழியர் எந்தவித பணமும் தரவேண்டியிருக்காது. முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் சமீபத்தில் இதுபோன்ற பங்குகளை தனது இடைநிலை ஊழியர்களுக்கு வழங்கியது. இந்த (RSU) பங்குகளுக்கும் மேற்சொன்ன இஎஸ்ஓபி பங்குகளைப் போலவே வரி நிர்ணயிக்கப்படும்.