Published : 11 Nov 2019 11:50 AM
Last Updated : 11 Nov 2019 11:50 AM

எண்ணித் துணிக: உங்கள் முதலீடே முதலாவதாய் இருக்கட்டும்!

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com

சென்ற வாரம் ஆரிய கூத்தாடினாலும் ஸ்டார்ட் அப் காரியத்தில் கண் வைத்திருந்தோம். செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்று பிசினஸ் துவங்க சில்லறை சேர்க்கும் வழி பற்றி செவி சாய்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இந்த வாரம் நடனம் தொடர்கிறது.

பரிட்சை எழுத பக்கத்து பையனிடம் பேனா கடன் வாங்கலாம் என்றாலும் பேப்பரில் பிள்ளையார் சுழி போடு வதற்காகவாவது ஒரு சின்ன பேனாவுடன் பரிட்சைக்கு செல்லவில்லை என்றால் ஆசிரியர் அசிங்கமாய் வைவார். ஸ்டார்ட் அப் தொடங்குவதும் அவ்வண்ணமே. உங்கள் ஐடியா, உங்கள் பிசினஸ், உங்கள் பணத்தோடு தொடங்கினால்தான் கடன் தருபவருக்கு உங்கள் மேல் நம்பிக்கை வரும். இதை பூட்ஸ்ட்ராப்பிங் என்பார்கள்.

பணம் இல்லை யென்பதால்தான் மற்றவரை கேட்டாலும், ‘உங்கள் பிசினஸ் ஐடியா மேல் உங்களுக்கே நம்பிக்கை இல்லையா, மொத்த பணத்தையும் நானே தரவேண்டுமா’ என்று முதலீட்டாளர் கேட்பார். ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் நாகேஷ் முத்துராமனிடம் படம் எடுக்க பணம் கேட்கும் போது ‘இருக்கற பணத்தை வச்சு எடுக்க ஆரம்பிங்க, அப்புறம் பார்ப்போம்’ என்பார். உங்களுக்கும் அதே அட்வைஸ்தான்!

பணம் கேட்டு முதலீட்டாளர்களிடம் செல்லும் முன் சொந்தபந்தங்களிடம் தேறுமா என்று தேடுங்கள். நண்பர்களிடம் உங்கள் ஐடியாவை கூறுங்கள். தெரிந்தவர்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை இல்லையெனில் முதலீட்டாளர்கள் மட்டும் இளிச்சவாயர்களா என்ன. தெரிந்தவர்களிடம் கேட்க கூச்சமாயிருக்கிறது என்றால் மற்றவரிடம் எப்படி கேட்கப் போகிறீர்கள்? எக்விடி வேண்டாம், தெரிந்தவரிடம் குறைந்த வட்டி கடன் கேளுங்கள். பணம் இருந்தும் தராதவர்களிடம் ‘உன் பேச்சு கா’ என்று ஒதுக்கித் தள்ளுங்கள். கிரவுட் ஃபண்டிங் தெரியுமா? கூட்டத்தில் கூச்சமில்லாமல் கடன் கேட்பதல்ல இது.

ஓரிருவரிடம் பணம் கேட்காமல் ஒரு பெரிய பட்டாளத்திடம் ஆளுக்கு கொஞ்சமாய் முதலீடு செய்யச் சொல்வது. மொய் விருந்து தந்து வீட்டு விசேஷத்திற்கு பணம் சேர்ப்பது போல. கல்லூரி நண்பர்கள், கிளப் உறுப்பினர்கள், உங்கள் காலனிவாசிகள் என்று கூட்டத்தைச் சேர்த்து அவர்களிடம் உங்கள் பிசினஸ் ஐடியாவை கூறி, ஸ்டார்ட் அப் பற்றி விளக்கி அவர்கள் சக்திக்கேற்ப முதலீடு தரச் சொல்லுங்கள். அதில் தொழில் தொடங்கி பிசினஸை விரிவாக்கி பிறகு முதலீட்டாளர்களிடம் செல்லுங்கள்.

முதலீட்டாளர்கள் பலவிதம். இருக்கும் பணத்தை வட்டிக்கு விட்டு சம்பாதிப்பவர்கள் ஒரு ஜாதி. அவர்களிடம் கடன் வாங்கிவிட்டு அடுத்த தேர்தலுக்கு முன் அரசாங்கம் கடன் தள்ளுபடி தராதா என்று ஏங்க முடியாது. இந்த வசூல் ராஜாக்கள் கொடுத்த காசை கறந்துவிடுவார்கள். அடுத்த முதலீட்டாளர் வகை வென்ச்சர் கேபிடலிஸ்ட். ஸ்டார்ட் அப்பில் முதலீடு செய்வதே இவர்கள் தொழில். இவர்களே வெற்றி ஸ்டார்ட் அப்புகளை தொடக்கியும் இருப்பார்கள். இவர்களிடம் பெறுவது கடன் அல்ல, முதலீடு. பெற்ற பணத்தை திருப்பித் தரவேண்டாம்.

ரிஸ்க் எடுப்பதால் உங்கள் ஸ்டார்ட் அப்பின் ஒரு பெரிய பங்கை பெற்றுக்கொண்டு தான் பணம் தருவார்கள். உங்கள் பிசினஸ் வெற்றி பெற்றால் தங்கள் பங்கை பெரிய விலைக்கு விற்று பணம் பார்ப்பார்கள். நீங்கள் பணம் கேட்ட மாத்திரம் தரமாட்டார்கள். ஐடியாவின் தரம், ஸ்டார்ட் அப்பின் நிலை, உங்கள் திறமை, பணியாளர்களின் பங்களிப்பு என்று பிரித்து மேய்ந்து பாடாய் படுத்திவிட்டுத்தான் பணம் தருவார்கள். இதில் ஒரு உட்பிரிவு உண்டு – ஏஞ்சல் இன்வெஸ்டர்ஸ். பாரதிராஜா படம் போல் வெள்ளை ட்ரஸ்ஸில் பாடிக்கொண்டு வந்து பண பட்டுவாடா செய்யும் பருவ மங்கைகள் அல்ல என்றாலும் ரொம்ப படுத்தாமல் ஐடியாவின் தரத்திற்கேற்ப முதலீடு செய்வார்கள்.

சில பெரிய தொழிலதிபர்கள் தாங்கள் தொழில் தொடங்க பட்ட கஷ்டத்தை மற்றவர்கள் படக்கூடாது என்று ஏஞ்சல் இன்வெஸ்டர்களாக இருப்பார்கள். நல்ல ஐடியா, நல்ல பிசினஸ் பிளான், நல்ல ஏஞ்சல் எல்லாம் அமைந்து உங்களுக்கு நேரமும் நல்லதாய் இருந்தால் சொட்ட சொட்ட நனைவீர்கள். அதான் உங்கள் காட்டில் மழையாயிற்றே!
இந்த சங்காத்தம் வேண்டாம் என்றால் உங்கள் வங்கியில் கேட்டு பாருங்கள்.

சரியான பிசினஸ் திட்டம், பேக்ட்ரி, இயந்திரம் என்று இருந்து, பாங்க் மேனேஜர் தூரத்து சொந்தமாய் அமைந்தால் சவுகரியமாய் நனையலாம். உங்கள் சட்னிக்கு அவர் தலையில் மிளகாய் அரைக்கலாம். வட்டியை ஒழுங்காய் கட்டினால் ஆபீஸ் பக்கம் வரமாட்டார்கள். கட்ட தவறினால் அனைத்தும் ஜப்திதான்.

வங்கி என்றதும் ஞாபகம் வருகிறது. மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களை கேட்டுப் பாருங்கள். Non-Banking Finance Corporations (NBFC) என்று அழைக்கப்படும் இவை வசதி இல்லாதவர்களுக்கு குறைந்த வட்டிக்கு கடன் தர தொடங்கப்பட்டவை. பெரிய லெவலில் கடன் தரமாட்டர்கள் என்றாலும் ஆளில்லா ஊருக்கு இவர்கள் இலுப்பைப்பூ சர்க்கரை மாதிரி. சின்னதாய் கடன் பெற்று சிக்கனமாய் தொழிலை விரிவாக்கலாம்.

அடுத்த ஸ்டாப் இன்குபேட்டர்ஸ். பணக்கார பல்கலைக்கழகங்கள், பெரிய நிறுவனங்கள் இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்க தொடங்கிய மேட்டர். உங்கள் ஐடியா புதியதாய் இருந்து, பெரிய வெற்றி பெறும் என்று நம்பினால் உங்களுக்கு பணம் தருவார்கள். அவர்கள் இடத்திலேயே தொழில்நுட்ப வசதி செய்து தந்து தொழில் தொடங்கவும் உதவுவார்கள். கூடவே இலவச அறிவுரைகள் தருவார்கள்.

பணம் இல்லார்க்கு இவ்வுலகில்லை என்பது பழைய மொழி. உங்களிடம் நல்ல ஐடியா இருந்து, சரியான செயல் திட்டமும் இருந்தால் பணம் தர பலர் ரெடி. ‘ஓலா’ முதல் ‘ஸ்விக்கி’ வரை இந்தியாவில் ஸ்டார்ட் அப்ஸ் பிறந்து வளர்வது இவ்வாறே. இதற்கு முதல் காரியமாய் சூப்பர் ஐடியாவும் சூடாய் எரியும் வைராக்கியமும் உங்களிடம் அபரிமிதமாக இருக்க வேண்டும். அதை யாரும் தரமாட்டார்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x