

அரசு மேல்நிலைப் பள்ளி, பண்ருட்டி, கடலூர்.
பலாவுக்கும் முந்திரிக்கும் பெயர் பெற்ற நகரமான பண்ணுருட்டியில் 1907-ம் வருடம் துவங்கப்பட்ட இந்தப் பள்ளி, நூற்றாண்டுகளைக் கடந்து வெற்றிநடை போடுகிறது . சாரணர் இயக்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், மாணவர் ஓவிய நுண்கலை மன்றம், நூலகம் ஆகியவை சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
இந்தப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட இயக்கமானது தேசிய அளவில் சிறந்த இயக்கமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, டெல்லியில் விருது பெற்றிருக்கிறது.
மூன்று வருடங்களுக்கு முன்பு தமிழகத்தின் சிறந்த என்.எஸ்.எஸ். இயக்கமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 50 ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றது. என்.சி.சி. மாணவர்கள் இரு முறை டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு சார்பில் கலந்துகொண்டு பெருமை சேர்த்துள்ளனர். காந்திஜி சாரணர்படை தொடர்ந்து 9 ஆண்டுகளாக ஆளுநர் விருதைப் பெற்றுவருகிறது.
ராஜா ரவிவர்மா மாணவர் ஓவிய நுண்கலை மன்றம் மூலம் வருடம் இருமுறை மாணவர்களின் ஓவியக் கண்காட்சியும் ஒளிப்படக் கண்காட்சியும் நடத்தி, சிறந்த வல்லுனர்களைக் கொண்டு பயிற்சிப் பட்டறை நடத்தப்படுகிறது. தமிழ் இலக்கிய மன்றம் மூலம் கட்டுரை, கவிதை , வினாடி வினா போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றிபெற்று, பதக்கங்களையும் பரிசுகளையும் பெற்று வருகிறார்கள் இந்தப் பள்ளி மாணவர்கள்.
ஓவியம், போட்டோகிராபி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் 10-ம் வகுப்பு மாணவர் இ. அரிநாத் சிறந்த சாரணர் படைத் தலைவர், 12-ம் வகுப்பு மாணவர் யுவராஜ் சிறந்த என்.எஸ்.எஸ். வீரர், வினாடிவினா, பேச்சுப் போட்டிகளில் பரிசுகளைக் குவிக்கும் 12-ம் வகுப்பு மாணவர் பாலாஜி ஆகியோர் பள்ளிக்குப் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஸ்ரீ விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, அணைக்கட்டு, வேலூர் மாவட்டம்.
கிராமப்புற மாணவர்களுக்குத் தரமான கல்வியை, மிகக் குறைவான கட்டணத்தில் தர வேண்டும் என்ற உயர்வான நோக்கத்தில் 2003-ம் ஆண்டிலிருந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அரசு பொதுத் தேர்வுகளில் தொடர்ந்து 100% தேர்ச்சி பெற்று வருகிறது.
காற்றோட்டமான வகுப்பறைகள், பெரிய விளையாட்டு மைதானம், கணினி மற்றும் அறிவியல் ஆய்வுக்கூடங்கள், இங்கே இருக்கின்றன.
மாணவர்களின் நுண்ணறிவுத் திறனை வளர்க்கும் விதமாகச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அபாகஸ், மன ஒருமைப்பாட்டுக்குத் தியானம் போன்றவற்றுக்குப் பயிற்சியளிக்கப்படுகின்றன. எளிதாகப் படிக்கின்ற வகையில் காணொளி காட்சி முறையில் பாடங்கள் விளக்கப்படுகின்றன. நடனம், கராத்தே போன்ற கலைகளும் கற்றுத் தரப்படுகின்றன. மாணவர்களின் எதிர்காலத்துக்கு உதவும் வகையில் இந்தி மொழி கற்றுத் தரப்படுகிறது.
விளையாட்டுத் துறையில் மாணவர்களை ஊக்கப்படுத்த தனிப்பயிற்சி அளிக்கப் பட்டு, மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்று வருகிறார்கள் இந்தப் பள்ளி மாணவர்கள். கல்வி மட்டுமல்லாமல் மாணவர்களின் தனித் திறமைகளையும் ஆளுமையையும் வளர்க்கும் விதமாக ஆண்டுதோறும் அறிவியல் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், குழந்தைகள் தின விழா, ஆசிரியர் தின விழா, சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, உலக யோகா தினம் மற்றும் அனைத்து தேச தலைவர்களின் பிறந்த நாள் ஆகியன சிறப்பாகக் கொண்டாடப் பட்டு வருகின்றன.
கிராமப்புற மாணவர்களும் மருத்து வம், பொறியியல் மற்றும் பிற உயர் கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற லட்சியத்துடன் இயங்கி வருகிறது, இந்தப் பள்ளி.
ஸ்ரீ விவேகானந்தா
மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி,
அணைக்கட்டு, வேலூர் மாவட்டம். விவேகானந்தா
மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி,
அணைக்கட்டு, வேலூர் மாவட்டம்.