

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com
மேலே உள்ள எண்ணிலிருந்து கீழே உள்ள என்ணை கழிக்கும் போது கீழே உள்ள எண் சிறியதாக இருந்தால் பக்கத்தில் இருக்கும் எண்ணிலிருந்து கடன் வாங்கு என்று எந்த முகூர்த்தத்தில் நமக்கு கற்றுத் தந்தார்களோ அன்றிலிருந்து அக்கம்பக்கம் கடன் வாங்குவது நமக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. பக்கத்திலிருந்து கடன் வாங்கத் தொடங்கி அதையே பழக்கமாக்கி படிப்படியாய் வளர்ந்து பாங்கிலிருந்து பணம் பீராயும் வரை பரந்து விரிந்திருக்கிறோம்.
வாங்குவதை விடுங்கள். கொடுப்பவர்கள் எதை நம்பி நமக்கு கடன் தருகிறார்கள்? நம்மிடம் பணம் இருக்கிறதா என்று பார்த்தா? அது இருந்து தொலைத்தால் நாம் ஏன் பாங்கில் போய் கையேந்தப் போகிறோம். இல்லை என்பதால் தானே ‘பவதிபிட்சாந்தேகி’ என்று பாங்கில் கடன் கேட்கிறோம்! பல பாங்குகள் கடன் கேட்பவர்களிடம் ஏன் கடன், எவ்வளவு கடன், எப்பொழுது எப்படி திருப்பித் தர உத்தேசம் போன்றவற்றை எழுதி வாங்கிக்கொள்கின்றனர். என்னதான் கேட்டவர் தகுதியை ஆராய்ந்து எழுதியதைப் படித்து கடன்தந்தாலும் கொடுத்த கடனில் சில திரும்பி வருவதில்லை.
நம் நாட்டில்தான் இந்த தலையெழுத்து என்று பார்த்தால் ஆளானப்பட்ட அமெரிக்காவில் கூட வராத கடன் பதிமூன்று சதவீதமாம். நம்மவர்களைப் போல கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டால் லண்டன் சென்று செட்டிலாகிறார்களா என்பது பற்றி தகவல் இல்லை! கொடுத்த கடனை ஒழுங்காய் திருப்பித் தருவாரா இல்லை வெளிநாடு ஷேத்ராடனம் செல்வாரா என்று கண்டுபிடிக்க முடியுமா? முடியும் என்றால் எதைக் கொண்டு தெரிந்துகொள்வது? கடன் கேட்பவர்களிடமே பேசிப் பார்க்கலாம். ஆனால் என்ன, வாங்கும் போது வக்கனையாய் பேசுகிறார்கள். வெண்ணெயாய் உருகுகிறார்கள். கடன் வாங்கிய பின் வந்த சுவடு தெரியாமல் வழக்கொழிந்து போகிறார்கள். அவர்களிடம் என்ன கேட்டு எப்படி தெரிந்துகொள்வது?
எதற்கு அநாவசியமாக பேசிக்கொண்டு, கடன் கேட்பவர்கள் தரும் விண்ணப்பத்தை படித்தால் எதேஷ்டம் என்கிறார்கள் ‘ஓடட் நெட்ஸர்’, ‘எலேயின் லிமெய்ர்’, ‘மைக்கேல் ஹர்ன்ஸ்டீன்’ என்ற பொருளாதார நிபுணர்கள். கடன் கேட்பவர்கள் உபயோகிக்கும் மொழி, பிரயோகிக்கும் வார்த்தைகள் மூலம் கடனைத் திருப்பித் தருவார்களா என்பதை ஈசியாக கண்டுபிடிக்கலாம் என்று நிரூபித்திருக்கிறார்கள். தங்கள் ஆய்வை ‘When Words Sweat’ என்ற ஆராய்ச்சி கட்டுரையாகவும் எழுதியிருக்கிறார்கள். ஆய்வு என்றால் உங்கள் வீட்டு ஆய்வு என் வீட்டு ஆய்வல்ல; ஆய்வோ ஆய்வு.
கடன் தரும் ஆன்லைன் சைட் ஒன்றை பிடித்து அதில் கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை ஆய்வுக்கு தேர்ந்தெடுத்தனர். அவர்கள் பிரயோகித்திருந்த வார்த்தைகளை டெக்ஸ்ட் மைனிங், மெஷின் லேர்னிங் போன்ற டெக்னிக்குகள் கொண்டு ஆராய்ந்தனர்.
ஏதோ பொழுது போகாமல் பத்து பதினைந்து விண்ணப்பங்களை எடுத்துப் படித்து நடத்தப்பட்ட ஆய்வல்ல. சுமார் 1,20,000 விண்ணப்பங்களை இன்கம் டாக்ஸ் அதிகாரிகள் போல் பூதக் கண்ணாடி வைத்து தேடாத குறையாக ஆராய்ந்தனர். விண்ணப்பித்துவிட்டு கடன் பெற்றவுடன் அதை ஒழுங்கு மரியாதையாய் திருப்பிக் கொடுத்தவர்கள், அப்படி கொடுக்காமல் டிமிக்கி கொடுத்தவர்கள் உபயோகித்த வார்த்தைகளில் ஏதேனும் பேட்டர்ன் தெரிகிறதா என்று பிரித்து மேய்ந்தனர்.
இரு சாராரும் உபயோகித்த வார்த்தைகளில் ஏதேனும் ஒரு பேட்டர்ன் தெரிந்ததா? பேஷாக. கடனை திருப்பித் தரும் எண்ணத்தோடு கடனுக்கு விண்ணப்பித்தவர்கள் பிரயோகித்த வார்த்தைகள் ஒரு குறிப்பிட்ட வகையில் இருந்ததாம். அதற்கு நேர் எதிர் `வாங்கிய கடனை திருப்பித் தர நான் என்ன கேனயனா’ என்ற எண்ணத்தோடு கடனுக்கு விண்ணப்பித்தவர்கள் உபயோகித்த வார்த்தைகள்.
இவர்கள் உபயோகித்த வார்த்தைகள் எல்லாமே சொல்லி வைத்தாற்போல் ஒரே மாதிரியாக ஒரு வித பேட்டர்னோடு இருந்ததாம். ஆழமான ஆய்வுக்கு பின் ஒருவரின் எண்ண ஓட்டத்தையும் அவர் குணாதிசயத்தையும் அவர் பிரயோகிக்கும் வார்த்தைகள் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று கடன் வாங்கியவர்கள் தலைமீது சத்தியமடித்துக் கூறுகிறார்கள். பொதுவாகவே லோன் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் பெரும்பாலும் உபயோகிக்கும் பத்து வார்த்தைகள் இவை:
கடவுள்
சத்தியம்
கடன் இல்லாத
மினிமம் பேமன்ட்
குறைந்த வட்டி விகிதம்
திருப்பித் தருவேன்
க்ராஜுவேட்
நன்றி
வரிக்கு பிந்தைய
ஆஸ்பத்திரி
பல்லாயிரம் விண்ணப்பங்களை படித்து கடனை திருப்பித் தந்தவர்கள் தராதவர்களை ஆராய்ந்து மேலே கூறிய லிஸ்ட்டில் ஐந்து வார்த்தைகளை பிரயோகிப்பவர்கள் பெரும்பாலும் கடனை திருப்பி தருவார்கள் அவர்களை நம்பலாம் என்கின்றனர். மற்ற வார்த்தைகளை பிரயோகிப்பவர்கள் அநேகமாக லண்டனுக்கு விசா வாங்கிக்கொண்டுதான் வங்கிக்கே வருகிறார்களாம். எந்த ஐந்து வார்த்தைகளை யார் சொல்வார்கள் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? அந்த வார்த்தைகளைப் படித்து கொஞ்சம் யோசித்துத் தான் சொல்லுங்களேன். பார்ப்போம் உங்கள் சாமர்த்தியத்தை!
‘கடவுள்’ என்கிற வார்த்தையை கூறுபவர் தெய்வ குத்தமாகிவிடும் என்று பயந்தாவது வாங்கிய கடனைத் திருப்பித் தருவார் என்பீர்கள். ‘திருப்பித் தருவேன்’ என்று கூறுபவர் சொன்ன வார்த்தையை காப்பாற்றவாவது கடைனை அடைப்பார் என்று கூறுவீர்கள். ‘சத்தியம்’ என்பவர் செய்த சத்தியத்தை காப்பாற்ற திருப்பித் தருவார் என்றும் நினைப்பீர்கள். ‘ஆஸ்பத்திரி’ செலவுக்கு வாங்குபவர்கள் அவசரத்துக்கு வாங்குவதால் ஏமாற்றாமல் தருவார்கள் என்று நம்பிக்கை தெரிவிப்பீர்கள். ‘நன்றி’ என்பவர்கள் மரியாதை தெரிந்தவர்கள், நாணயஸ்தர்கள், கண்டிப்பாய் திருப்பித் தருவார்கள் என்று கூறுவீர்கள். என்ன, இப்படித் தானே நினைத்தீர்கள்?
கையை கொடுங்கள். கங்ராஜுலேஷன்ஸ். நல்ல காலம் நீங்கள் பாங்கில் வேலை செய்யவில்லை. செய்திருந்தால் கன்ஃப்ர்ம்டாய் அந்த பாங்க் திவால்தான். இந்த வார்த்தைகளை கூறி கடன் கேட்பவர்கள் பெரும்பாலும் லண்டன் பார்ட்டிகளாம்.
கொடுத்த கடனைத் திருப்பித் தருவது டவுட்தானாம். கண்டிப்பாய், சத்தியமாய், கடவுள் ஆணையாய் என்று கூறுபவர்களுக்கு கடன் தருவதற்கு முன் செஃல்பி எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களை அடுத்த முறை பார்ப்பது சிரமம். கடன் விண்ணப்பத்தில் கடவுள் என்று சராசரியாக 2.2 தடவை கூறுபவர்கள் கடன் வாங்குவதே லண்டனுக்கு டிக்கெட் வாங்கத்தானாம்.
ஆஸ்பத்திரியில் மனைவி, மச்சான் அட்மிட் ஆயிருக்கிறார்கள் மருத்துவ செலவுக்கு அவசரமாய் பணம் வேண்டும் என்று யாராவது உங்களிடம் அழுதுகொண்டே வந்து கடன் கேட்டால் பின்னங்கால் பிடரியில் பட படுவேகமாய் ஓடுங்கள். அவர்களுக்கு கடன் தந்தால் அது ஒன்வே டிக்கெட்தான், கண்டிப்பாய் திரும்பி வராது. பாவம் அவர்களுக்கு கடன் தந்து உதவுவோம் என்ற விபரீத ஆசை உங்களுக்கு இருந்தால் கடனோடு சேர்த்து நீங்களே அவர்களுக்கு வெளிநாட்டுக்கு டிக்கெட்டும் எடுத்து தந்துவிடுங்கள், எதற்கு குறை!
மற்ற ஐந்து வார்த்தைகளை பிரயோகிப்பவர்கள் பெரும்பாலும் உள்நாட்டில் மட்டுமே இருக்கும் எண்ணமுடையவர்கள். `வரிக்கு பிந்தைய’, ‘குறைந்த வட்டி விகிதம்’ போன்ற வார்த்தைகளை பிரயோகிப்பவர்கள் கொஞ்சத்துக்கு கொஞ்சம் ஃபைனான்ஸ், நிதி நுட்பவாதிகளாக இருப்பார்கள். பெரும்பாலும் கடனை திருப்பித் தருவார்கள். தான் ‘க்ராஜுவேட் என்பதை எழுதுபவர்கள், தங்களுக்கு வேறு கடன் இல்லாத நிலையை குறிப்பிட்டு விண்ணப்பிப்பவர்கள் கடனைத் திருப்பித் தரும் ஜாதியைச் சேர்ந்தவர்களாம். வாங்கிய கடனை எப்படி திருப்பித் தருவேன் என்பதை விளக்கிக் கேட்பவர்கள், ஏற்கனவே பெற்ற கடனை திருப்பித் தந்ததை விவரித்து புது கடன் கேட்பவர்களை பெரும்பாலும் நம்பலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இது போன்ற டெக்ஸ்ட் மைனிங் டெக்னிக் மூலம் கொடுத்த கடன் திருப்பி வருமா என்று தெரிந்துகொள்ள மட்டும் அல்ல, வேறு துறைகளில் கூட மனிதர்களின் ஆழ்மனதை அவர்கள் குணாதிசயங்களை அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் கொண்டு சப்ஜாடாய் புரிந்துகொள்ள முடியும் என்கிறார்கள்.
பல இடங்களில் இப்படி புரிந்துகொள்ளவும் தொடங்கியிருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்க. உதாரணத்துக்கு, கல்லூரியில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை கொண்டு அவர்கள் ஒழுங்காய் படிப்பார்களா இல்லை ‘பஸ் டே’ என்று ஒரு நாளை தேர்ந்தெடுத்து அன்று தாங்கள் பயனிக்கும் பஸ் மீது கூட்டமாய் ஏறி கூத்தடித்து பஸ்ஸை துவம்சம் செய்து சுக்கு நூறாக்குவார்களா என்று கண்டுபிடிக்க முடியும்.
வேலைக்கு மனு போடுபவர்கள் பிரயோகிக்கும் வார்த்தைகள் மூலம் அவர்கள் உண்மையானவர்களா, கடின உழைப்பாளிகளா இல்லை சேர்ந்த அடுத்த நாளே இல்லாத தாத்தாவை சாகடித்துவிட்டு இலவச மோதிரம், செயினுக்கு ஆசைப்பட்டு ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ சினிமா பார்க்கச் செல்லும் டைப்பா என்று புரிந்துகொள்ள முடியும்.
இப்படியே போய் மணமகள் தேவை விளம்பரத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் எழுதும் வார்த்தைகளை வைத்து பார்ட்டி ஒழுங்கானவரா, ஏற்கனவே நான்கைந்து திருமணம் செய்து அதையே தொழிலாய் செய்து பிழைப்பவரா என்று கூட கண்டுகொள்ளலாம். சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள், நம் கையெழுத்து நம் தலையெழுத்தை நிர்ணயிக்கும் என்று. கடன் கேட்டார் கையெழுத்தைப் பார்த்து கலங்கினான் இலங்கை வேந்தன் என்று நவீன கம்பர் எழுதலாம், ஒன்றும் சொல்வதற்கில்லை!
அது போகட்டும், உங்களை கேட்கவேண்டும் என்றிருந்தேன். என் நெருங்கிய உறவுக்காரர் ஆஸ்
பத்திரியில் அட்மிட் ஆகியிருக்கிறார். கொஞ்சம் பணம் தேவை. கடனாய் தர முடியுமா. உங்களைத் தான் கடவுள் போல் நம்பியிருக்கிறேன். சத்தியமாக திருப்பித் தருவேன்.
ஹலோ. சார். உங்களைத்தான். ஏன் ஓடுகிறீர்கள்!