Published : 04 Nov 2019 01:09 PM
Last Updated : 04 Nov 2019 01:09 PM

நடுக்காட்டுப்பட்டியும் எண்ணெய் அகழ்வும்

எம். ரமேஷ்
ramesh.m@hindutamil.co.in

நடுக்காட்டுப்பட்டி கிராமம் இன்று இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்ட பகுதியாகிவிட்டது. இதில் மிகுந்த வேதனையான விஷயம் என்னவென்றால் ஒரு பிஞ்சு உயிர் பலியான பிறகே அது இந்தியா முழுவதும் அறியப்பட்ட பகுதியானது என்பதுதான். இந்தச் சம்பவம் பல படிப்பினைகளை நமக்கு தந்துள்ளது. ஆனால், அதிலிருந்து நாம் கற்றுக் கொண்டோமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

எந்த ஒரு பிரச்சினையையும் குறிப்பிட்ட வழிமுறைகளோடுதான் அணுக வேண்டும், அப்போதுதான் தீர்வு கிடைக்கும் என்பதுதான் நாம் கற்றுக் கொண்ட முதலாவது பாடம். குழந்தையை மீட்பதற்காக எந்த வகைக் கருவிகளைக் கொண்டு வருவது என்பதில் தொடங்கி வரிசையாக பிரச்சினைகள் மட்டுமே அணி வகுத்து நிற்கின்றன. குழந்தை விழுந்த பகுதிக்கு அருகில் முதலில் ஆழ்துளை கிணறு தோண்டும் போர்வெல் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. பிறகு எண்ணெய் அகழ்வுக்கு பயன்படுத்தப்படும் ரிக் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இந்தப் பணிகள் ஐந்து நாட்களாக நீடித்ததற்கு காரணமே இதுபோன்ற பிரச்சினையை எப்படிக் கையாள்வது என்ற முறையான அணுகுமுறை இல்லை என்பது தான்.

இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களை மீட்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்ட பேரிடர் மேலாண்மைக் குழுவுக்கு இந்தப் பணி புதிது என்பது அனைவரும் அறிந்ததே. சரி ராணுவத் தினரை இதில் ஈடுபடுத்தியிருக்கலாம் என்றால், இதற்கு முன்பு ஆழ்துளை கிணற்றிலிருந்து உயிரை காப்பாற்றிய முன்அனுபவம் பெற்றவர்கள் ராணுவத்தில் இல்லை என்பதும் நிதர்சனமான உண்மை. மக்களின் கேள்விகளுக்கு ஆளாவதைத் தவிர்க்கும் பொருட்டே எல்லா வாய்ப்புகளையும் அரசு முயற்சித்தது. ஆனால், எந்த வகையிலும் எடுத்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. பாறை குறுக்கீடு, ரிக் இயந்திரம் பழுது எனப் பல சிக்கல்களை எதிர்கொண்டோம். இறுதியில் அனைத்து முயற்சிகளும் பலனற்றுப் போனதுதான் மிச்சம்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாக உள்ள நிலையிலும், அதற்கான தீர்வுகளை நாம் முறையாக வரையறுக்கவில்லை என்பது இன்றைய நவீனத்தின் தோல்வி என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நிலத்தடி அகழ்வு குறித்தும், அது சார்ந்த கருவிகள் குறித்தும் போதிய தெளிவு இருந்திருந்தால், ஓரளவேனும் வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்டு குழந்தையை மீட்டிருக்க முடியும். ஆனால், ஆழ்துளை கிணறுகளில் இருந்து குழந்தைகளை மீட்பதில் மட்டுமல்ல எண்ணெய், எரிவாயு அகழ்வுக்கு பயன்படுத்தப்படும் ராட்சத ரிக் இயந்திரங்கள் குறித்தும் அரசுகளுக்குப் போதிய தெளிவு இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

உலக அளவில் பெட்ரோலியம் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு வெறும் 0.92 சதவீதம் மட்டுமே. 1889-ம் ஆண்டில் முதல்முறையாக அசாம் மாநிலம் டிக்பாய் எனுமிடத்தில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டது. சுதந்திரமடைந்த பிறகு 1960-களுக்குப் பிறகுதான் எண்ணெய், எரிவாயு அகழ்வுப் பணியில் இந்திய அரசு தீவிரம் காட்டியது. இந்தியாவில் கிடைக்கும் கச்சா எண்ணெய் அளவு ஆண்டுக்கு 3.52 கோடிடன். ஆனால் ஆண்டு பயன்பாடு 20.49 கோடி டன். ஏறக்குறைய 84 சதவீதம் இறக்குமதியை நம்பியே உள்ளது. கடந்த ஆண்டில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு 11,200 கோடி டாலராகும். அதாவது சுமார் ரூ.8 லட்சம் கோடி.

கச்சா எண்ணெய் இறக்குமதி அளவை 2022-ம் ஆண்டுக்குள் 67 சதவீதமாகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மரபு சாரா எரிசக்தி மற்றும் எத்தனால் எரிபொருள் உபயோகம் மூலம் இதை ஈடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரத்தின் ஜீவ நாடியாக திகழ்வது எரிசக்தியே. இப்போது சுற்றுச் சூழல் மாசுபாடு, புவி வெப்பமடைவது உள்ளிட்ட காரணங்களால் நாடுகள் பலவும் இப்போது மாற்று எரிசக்திகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் சூழலை பாதிக்கும் நிலக்கரிக்கு மாற்று எரிசக்தியை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

ஆனால் இந்தியாவிலோ இன்னமும் நிலக்கரி உபயோகத்தை அதிகரித்துக் கொண்டுதானிருக்கிறோம். நிலக்கரிக்கு மாற்றாக பெட்ரோலியம் அல்லது எரிவாயு பயன்பாட்டுக்கு மாறியதன் மூலம் வளர்ந்த நாடுகள் தங்களது சுற்றுச்சூழல் கேட்டை குறைக்க முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளன. ஆனால் இந்தியாவில் பேட்டரி வாகனங்களை முற்றிலுமாக உபயோகத்துக்குக் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும், இன்றளவிலும் பேட்டரி வாகனங்களுக்கான சார்ஜிங் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை உருவாக்கப்படவில்லை.

பேட்டரி வாகனங்களுக்கு ஃபேம் திட்டத்தின்கீழ் மானியம் அளித்தாலும், சார்ஜிங் வசதி இல்லாததால் பொதுமக்களிடம் பேட்டரி வாகன உபயோகம் மிகுந்த வரவேற்பு பெறாமலேயே உள்ளது. நிலக்கரிக்கு மாற்று எரிவாயு என்றாலும் அதை எடுப்பது பயன்படுத்துவது உள்ளிட்டவற்றில் மத்திய, மாநில அரசுகளிடம் போதிய ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு இருப்பதில்லை.

நெடுவாசல் சம்பவத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திட முடியாது. ஜல்லிக்கட்டு, நெடுவாசல், ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட சம்பவங்களில் மக்களின் எதிர்ப்பலையால் அடுத்த கட்ட முன்னேற்றம் எதுவுமே இல்லாமல் போனது. தமிழகத்தில் சமீப காலங்களில் வந்த மிகப்பெரிய முதலீடு எல்என்ஜி முனையம் மட்டுமே. ஏறக்குறைய ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டிலானது.

வெளிநாட்டிலிருந்து திரவ எரிவாயுவை இறக்குமதி செய்து, தற்போது டிரக் மூலமாக தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வருகிறது அரசுத்துறை நிறுவனமான ஐஓசி. மத்திய அரசோ சிட்டி கேஸ் டிஸ்ட்ரிபியூஷன் என்ற பெயரில் பல நிறுவனங்களுக்கு எரிவாயு விநியோக உரிமையை வழங்கியுள்ளது. அதானி, வில்மர், ஐஓசி போன்ற நிறுவனங்களும் உரிமையைப் பெற்றுள்ளன. ஆனால் அதை எப்படி செயல்படுத்துவது என்று தெரியாமல் தவிக்கின்றன. ஐஓசி நிறுவனம் ஏற்கெனவே எண்ணெய் சப்ளைக்காக அமைக்கப்பட்ட குழாய்ப் பாதை மூலமே எரிவாயுவை ஆலைகளுக்கு சப்ளை செய்யும் பணியில் இறங்கியுள்ளது.

சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத எரிவாயுவை கண்டறிவதில் தொடங்கி, அதை எடுப்பதற்கான தொழில்நுட்பத்திலும் இந்தியா பின்தங்கித்தான் உள்ளது. பெரும்பாலும் அகழ்வு கருவிகளுக்கு வெளிநாடுகளை நம்பியுள்ள சூழல்தான் இந்தியாவில் உள்ளது. சொல்லப்போனால் நமக்கு பிரச்சினைகள் குறித்தும் தெளிவில்லை, தீர்வுகள் குறித்தும் தெளிவில்லை. ஒன்றன் பின் ஒன்றான தொடர் நிகழ்வுகள்தான் எந்த ஒரு செயலுக்கும் வெற்றியை தேடித் தரும். அது மீட்பு பிரச்சினையாக இருந்தாலும் சரி, சூழல் காப்பு பிரச்சினையாக இருந்தாலும் சரி. நடுக்காட்டுப்பட்டி தந்த படிப்பினையும் இதுவே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x