

நிசான் நிறுவனம் சமீபத்தில் சந்தையில் அறிமுகப்படுத்திய மாடல்தான் கிக்ஸ். எஸ்யுவி வகையிலான இந்த கிக்ஸ் தோற்றம், பெர்பாமென்ஸ், மைலேஜ் என எல்லா வகையிலும் சிறந்த தயாரிப்பாக வந்துள்ளது. இந்தியாவில் எஸ்யுவிகளுக்கான வரவேற்பு அதிகமாக உள்ள நிலையில், ரெனால்ட் டஸ்டர், நிசான் டெரானோ இரண்டின் பிளாட்பார்ம்களிலிருந்து இன்ஸ்பயர் ஆகி கிக்ஸ் உருவாகியிருக்கிறது.
இதன் துடிப்புமிக்க தோற்றம் வயது வித்தியாசமின்றி கார் பிரியர்கள் அனைவரையும் கன்வின்ஸ் செய்கிறது. பிளாக் குரோம் ஃபினிஷ் வி வடிவ கிரில் முகப்புப் பக்கத்தில் அழகாகப் பொருந்தியிருக்கிறது. எல்இடி டிஆர்எல் விளக்குகள், பனி விளக்குகள் ஆகியவை காரின் தோற்றத்துக்கு ஏற்ப பொருத்தப்பட்டிருக்கின்றன. வாகனத்தின் ரூஃப் இருவண்ண கலவைக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
டீசல், பெட்ரோல் இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன்களும் இதில் உள்ளன. பெட்ரோல் இன்ஜின் 1498 சிசி திறன் கொண்டது. டீசல் இன்ஜின் 1461 சிசி திறன் கொண்டது. கிக்ஸ் இடம்பெறும் எஸ்யுவி பிரிவில் முதல் முறையாக 360 டிகிரி வியு மானிட்டரிங் தொழில்நுட்பம் இதில் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்க்கிங் செய்வது மிகவும் எளிதாக இருக்கிறது. மேலும் கேட்ஜெட் கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் இருப்பதால் ஹேண்ட் ஃப்ரீ டிரைவிங் அனுபவம் எளிதாக உள்ளது.
காரின் கேபின் விளக்கு, வைப்பர் போன்றவற்றில் தானியங்கி வசதிகள் இருப்பது கூடுதல் அம்சமாக உள்ளது. கியர் எளிதில் மாற்றும் வகையில் முன்பக்க இருக்கைகளுக்கு இடையில் ஹேண்ட் ரெஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இது சமயங்களில் ஹேண்ட் பிரேக் போடுவதில் சிரமத்தைக் கொடுக்கிறது. காரின் உட்புறத் தோற்றமும், இருக்கைகளின் வடிவமைப்பும் பாராட்டத்தக்க வகையில் உள்ளன. மிக நீண்ட தூர பயணத்தின் போதும் எந்தவித அசவுகரியமும் இல்லாமல் பயணிக்கும் அனுபவத்துக்கு உத்தரவாதம் கிடைக்கிறது.
பாதுகாப்பைப் பொருத்தவரை வழக்கமான இரண்டு ஏர் பேக்குகளுடன் பக்கவாட்டிலிருந்தும் ஏர் பேக் வசதி வழங்கப்பட்டுள்ளது. சீட் பெல்ட் எச்சரிக்கை அலாரம், ஏபிஎஸ் இபிடி பிரேக்கிங் சிஸ்டம், ஹில் அசிஸ்ட் வசதி ஆகியவையும் இதில் உண்டு. மேலும், நிசான் கனெக்ட் என்ற கனெக்டிவிட்டி தொழில்நுட்பம் மூலம் வேக எச்சரிக்கை, சர்வீஸ் ரிமைண்டர் உள்ளிட்ட 50-க்கும் மேலான வசதிகளைப் பெற முடிகிறது. வாகனம் டோ செய்யப்பட்டாலும் அலர்ட் செய்யும் வசதி இதில் உள்ளது.
எல்லா வகையான சாலைகளுக்கும் ஏற்ற வகையில் கிக்ஸ் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் டர்னிங் ரேடியஸ், 5.2 மீட்டராக இருக்கிறது. அதிக பூட் ஸ்பேஸ். தாராளமான லெக் ரூம், ஹெட் ரூம் உட்புறத்தில் உத்தரவாதமாகக் கிடைக்கிறது. கிரவுண்ட் கிளியரன்ஸ் இந்திய சாலைகளுக்கு ஏற்ற வகையில் இருக்கிறது.
இதன் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஏசி உள்ளிட்டவற்றை இயக்கும் வகையில் டேஷ் போர்டு சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. கூலிங் கிளவ் பாக்ஸும் டேஷ்போர்டில் வழங்கப்பட்டுள்ளது. பெருநகர பரபரப்புகளிலிருந்து விலகி நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கான பர்ஃபெக்ட் சாய்ஸ் இந்த கிக்ஸ்.