Last Updated : 13 Jul, 2015 11:13 AM

 

Published : 13 Jul 2015 11:13 AM
Last Updated : 13 Jul 2015 11:13 AM

பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டது எப்படி?

1930-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடி எப்படி உருவானது என்பதை கடந்த வாரம் பார்த்தோம். வீழ்ச்சியில் இருந்து பொருளாதாரம் எப்படி மீண்டது என்பதை இப்போது பார்ப்போம்.

பொருளாதாரம் என்பது 4 கட்டங்களைப் பொருத்தது என்றே முதலில் நினைத்தார்கள். அவை முறையே 1.தேக்க நிலை 2.எழுச்சி 3.உச்ச நிலை 4.சரிவு. பொருளாதாரம் மந்த நிலையடைந்து வீழ்ச்சியை எட்டினாலும் தானாகவே மீண்டு உச்ச நிலைக்கு வந்துவிடும் என்பதே பொருளாதாரப் பழமைவாதிகளின் நம்பிக்கை. ஆனால் 1929 முதல் 1933 வரையில் நீடித்த உலகப் பொருளாதார வீழ்ச்சி மிகவும் தீவிரமாகவும் நெடிதாகவும் விரிவாகவும் இருந்தது.

உலகப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 30% அளவுக்குச் சரிவு ஏற்பட்டது. சுமார் ஒன்றரை கோடிப்பேர் வேலையிழந்தனர். 1929-ல் வீழ்ச்சியின் தொடக்கத்தில் 3% ஆக இருந்த வேலையில்லாத் திண்டாட்டம் 1933-ல் 25% ஆக உயர்ந்துவிட்டது. 85,000 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. லட்சக்கணக்கானோர் வருவாய் இல்லாததால் குடியிருந்த வீடுகளை விற்றுவிட்டு நடுத்தெருவுக்கு வந்தனர். அடமானம் வைக்கப்பட்ட வீடுகளில் 50% மீட்க முடியாததால் மூழ்கிவிட்டன.

இந்த வீழ்ச்சிக்கு முன்னால், 75 ஆண்டுகளில் 19 முறை இதே போலப் பொருளாதார வீழ்ச்சிகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றின் சராசரி ஆயுள் அதிகபட்சம் 2 ஆண்டுகள்தான். பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் தொழிலாளர்களின் ஊதியங்களிலும், பொருள்களின் விலைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தி சமநிலைக்குக் கொண்டுவந்துவிடும் என்று டேவிட் ரிக்கார்டோ உள்ளிட்ட பழமைவாதப் பொருளியல் அறிஞர்கள் கருதிவந்தனர்.

கீன்ஸின் புதிய தத்துவம்

பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ஜான் மேனார்ட் கீன்ஸ் என்ற பொருளியல் அறிஞரின் ஆலோசனையை அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் நாடினார். கீன்ஸின் பரிந்துரைகளை ஒவ்வொன்றாக அமல்படுத்தினார். அமெரிக்காவைச் சரிவிலிருந்து மீட்டார். அமெரிக்காவைப் போலவே பிற மேற்கத்திய நாடுகளும் செயல்பட்டு மீண்டன.

இந்தப் பிரச்சினையை முற்றிலும் புதிய கோணத்தில் அலசினார் கீன்ஸ். “ஒரு பொருளுக்குத் தேவை அதிகரித்தால் அதிகமாகத் தயாரித்து சந்தைக்கு அனுப்ப வேண்டும், தேவை குறைந்தால் தயாரிப்பைக் குறைக்க வேண்டும்” என்று தெருவோர ஆப்பக் கடைகளுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய ஒரு வாதம் அதுவரை கோலோச்சியது. பண்டத்தை ‘அளிப்பதை’ (Supply) பற்றிக் கவலைப்படாமல் அதற்கான ‘தேவை’யை (Demand) அதிகப்படுத்த வேண்டும் என்றார் கீன்ஸ்.

‘ஒரு துறைக்கு ஊதியமாகத் தரப்படும் மொத்தத் தொகை இவ்வளவுதான் (Wage Fund). தொழிலாளர்கள் அதிகம்பேர் வேலைக்கு வந்தால் கூலியைக் குறைத்தும், குறைவாக வந்தால் கூலியை அதிகரித்தும் உற்பத்தியைத் தொடரலாம்’ என்று பழமைவாதிகள் கூறினர்.

இதுவும் தவறு என்று கீன்ஸ் நிரூபித்தார். கூலியை உயர்த்திக் கொடுப்பதன் மூலம் பொருளாதாரத்தை விரிவுபடுத்த முடியும் என்றார். தொழிலாளர்களும் நுகர்வோர்களே என்பதால், அவர்களுடைய ஊதியம் உயர்ந்தால் நுகர்வு அதிகரித்து ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் மேம்படும் என்று கூறினார். இது நடைமுறையிலும் நிரூபனமானது.

அமெரிக்காவில் ஃபோர்டு கார் நிறுவனம் தன்னுடைய தொழிலா ளர்களுக்கு அதி நவீனப் பயிற்சி அளித்ததுடன் அதிக ஊதியமும் அளித்தது. அத்துடன் ஒவ்வொரு தொழிலாளரும் ஒரு கார் வாங்க வேண்டும் என்று வலியுறுத்தியது. அவர்கள் வாங்கிய காரைப் பார்த்து அக்கம் பக்கத்தாரும் கார் வாங்க முற்பட்டனர். தொழிலாளர்களின் சமூக அந்தஸ்தும் உயர்ந்தது. போர்டு கம்பெனியின் கார் விற்பனையும் பெருகியது.

தங்க அடிப்படையில் செலாவணி

பொருளாதார வீழ்ச்சிக்கு முன்னால் சர்வதேச வர்த்தகமானது அந்தந்த நாடுகளின் தங்கக் கையிருப்பை அடிப்படையாகக் கொண்டிருந்தது. தங்கக் கையிருப்புக்கு ஏற்பதான் கரன்ஸி நோட்டுகளை அச்சிட வேண்டும் என்பதால் தேவைக்கேற்ப செலவிட முடியாமல் நாடுகள் திணறின. அதனால் குழப்பமும் நடைமுறைச் சிக்கல்களும் ஏற்பட்டன. எனவே தங்கத்துக்குப் பதிலாக உலக வர்த்தகத்தில் அதிகம் புழங்கிய அமெரிக்காவின் டாலர் நோட்டை அடிப்படையாகக் கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது. இதனால் வியாபாரம் எளிமையானது. நடைமுறைச் சிக்கல்கள் தீர்ந்தன. ஒரு டாலருக்கு இத்தனை ரூபாய் அல்லது பவுண்ட் என்று நிர்ணயித்துக் கொண்டுவிடுவதால் ஒருவித நிலைத்தன்மையுடன் பேரங்களைச் செய்துகொள்ள முடிந்தது.

டாலருக்குக் கிடைத்த புது மரியாதையால் அமெரிக்காவைச் சேர்ந்த பெரும் தொழில் நிறுவனங்கள் முக்கியமான நாடுகளில் தங்களுடைய உற்பத்திப் பிரிவுகளைத் தொடங்கி, அந்தந்த நாடுகளில் மலிவாகக் கிடைக்கும் மூலப் பொருள்களையும், குறைந்த கூலிக்குக் கிடைத்தத் தொழிலாளர்களையும் பயன்படுத்தி உற்பத்தி செய்து குவித்தன.

பிறகு அந்தந்த நாடுகளில் வர்த்தகம் செய்வதன் மூலம் கிடைக்கும் சலுகைகளையும் லாபங்களையும் பெறும் நோக்கில் தங்களுடைய நிறுவனங்களைப் ‘பன்னாட்டு நிறுவனங்களாக’ப் பதிவு செய்துகொண்டன.

வரிச்சலுகை அதிகம் உள்ள நாட்டில் உற்பத்தி செய்து, பிற நாடுகளில் விற்று லாபத்தைக் குவித்தன. இதனாலும், அமெரிக்கா மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக உருவானதாலும் டாலர் புழக்கம் எல்லா நாடுகளிலும் அதிகரித்தது. டாலர்களைக் கையிருப்பாக வைத்திருப்பதே பாதுகாப்பாகவும் நாடுகளால் கருதப்பட ஆரம்பித்தது. தங்கத்தின் இடத்தை டாலர் பிடித்தது.

கீன்ஸின் யோசனைப்படி நாடுகள் வேலைவாய்ப்பு, உற்பத்தி ஆகியவற்றைப் பெருக்கத் தொடங்கிய பிறகு தொழிலாளர்களின் ஊதியம் மட்டுமல்ல நிறுவனங்களின் லாபங்களும் பெருகின. அதுமட்டுமல்லாமல் பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு இரண்டாவது உலகப் போர் (1.9.1939 2.9.1945) தொடங்கியது. அதற்காகவே எல்லா நாடுகளும் ஆயுத உற்பத்தியைத் தீவிரப்படுத்தியதால் தொழில் வளம் பெருகியது. ஆனால் அதற்குத் தூண்டுகோலாக இருந்தது கீன்ஸின் பொருளாதார மீட்சி நடவடிக்கைகளே என்றால் மிகையாகாது.

பழமைக்கு வேட்டு

‘பொருள்களின் விலை உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’, ‘உற்பத்தி அதிகரித்தால் விலை சரியும்’, ‘தொழிலாளர்களின் ஊதியம் உயர்ந்தால் தொழில் நிறுவனத்துக்கு லாபம் குறையும்’, ‘வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தால் அதைப் போக்க வழியில்லை’, ‘வர்த்தகச் சுழல் என்பது தானாக வரும், தானாகப் போகும்; அதை யாரும் தடுக்க முடியாது’ என்பது போன்ற பழமையான கருத்துகளைத் தகர்த்தார் கீன்ஸ்.

வேலைவாய்ப்புகள் தானாக உருவாகட்டும் என்று அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது என்றார். உற்பத்தியும் ஊதியமும் அதிகரித்தாலும் லாபம் குறையாது என்பதையும் உணர்த்தினார். வேலைவாய்ப்புக்கும் பணவீக்க விகிதத்துக்கும் எதிர்மறை உறவு இருக்கிறது என்று கீன்ஸ் கூறினார். அந்த ஒரு கோட்பாடுதான் இந்தியா போன்ற நாடுகளில் பொய்த்துவிட்டது. பொருள்களின் விலை அதிகமானால் முதலாளிகள் உற்பத்தியை அதிகப்படுத்துவார்கள் அப்போது வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்துவிடும் என்றார். அதாவது விலைவாசி உயர்வது பொருளாதாரத்துக்கு நல்லது என்றே கூறினார். இந்தியர்கள் விலைவாசி உயர்வாலும் வேலையில்லாத் திண்டாட்டத்தாலும் ஒரே சமயத்தில் பாதிக்கப்பட்டு வருகிறோம்.

பற்றாக்குறை பட்ஜெட் அவசியம்

அரசுகள் எப்போதுமே வரவையும் செலவையும் சமப்படுத்தக்கூடாது, பற்றாக்குறை பட்ஜெட் போட வேண்டும் என்று கீன்ஸ் வலியுறுத்தினார். அந்த பற்றாக்குறை வரம்புக்குள் இருக்க வேண்டும் என்று எல்லா நாடுகளுமே இப்போது ஏற்றுக்கொண்டுள்ளன.

வறுமை,வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றால் உலகின் பல நாடுகள் சீனா, ரஷியாவுடன் கம்யூனிச ஆட்சிமுறைக்கு மாறியிருக்கக்கூடும். அப்படி நேராமல் மறைமுகமாகத் தடுத்தவர் கீன்ஸ்தான். கம்யூனிஸ்ட் அரசுகளைப் போல ‘எல்லா துறைகளிலும்’ தலையிடாமல் ‘பொருளாதார நடவடிக்கைகளை மட்டும்’ கட்டுப்படுத்தினாலே மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திவிட முடியும் என்றார்.

கீன்ஸ் பரிந்துரைத்த பல நடவடிக்கைகள் இன்றைக்கும் வளரும் நாடுகளுக்குப் பொருந்தக்கூடியவை.

ஏழைகளுக்கும் தொழிலாளர் களுக்கும் வாங்கும் சக்தியை அதிகப்படுத்தினால் பொருளாதாரம் தானாக வலுவடையும் என்பதை இந் நேரத்தில் நினைவுகூர்வதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்க முடியும். நகர்ப்புற, கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை விரிவுபடுத்துவதுடன் ஊதியத்தையும் உயர்த்த வேண்டும். கல்வி, சுகாதாரத்துக்கும் அடித்தளக் கட்டமைப்புக்கும் அரசு நிறைய செலவழிக்க வேண்டும். ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற கொள்கை அப்போதுதான் வெற்றி பெறும்.

rangachari.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x