Published : 21 Oct 2019 12:16 pm

Updated : 21 Oct 2019 12:16 pm

 

Published : 21 Oct 2019 12:16 PM
Last Updated : 21 Oct 2019 12:16 PM

யு டர்ன் 42: விழுவது எழுவதற்கே!

uturn

எஸ்.எல்.வி. மூர்த்தி
slvmoorthy@gmail.com

ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் பக்தை ஒருவர் தன் மகனைக் கூட்டிக்கொண்டு வந்தார்.“இவன் என் மகன். இவனுக்குப் பன்னிரெண்டு வயது. நாள் முழுவதும் ஸ்வீட்ஸ் சாப்பிடுகிறான். அடிக்கடி பல்வலி, வயிற்று வலி. பழக்கத்தை நிறுத்தச் சொன்னால், கேட்பதேயில்லை. நீங்கள் ஏதாவது வழி காட்டுங்கள்.” ராமகிருஷ்ணர் அம்மாவையும், மகனையும் பார்த்தார், “நாளைக்கு இரண்டு பேரும் இதே நேரத்துக்கு வாருங்கள்.”

வந்தார்கள். ராமகிருஷ்ணரோடு இன்னொருவரும் இருந்தார். ராமகிருஷ்ணர் சொன்னார், “இவர் கொல்கத்தாவில் மிகப் பெரிய ஸ்வீட்ஸ் கடை வைத்திருக்கிறார். உங்கள் மகனை வேலைக்கு வைத்துக்கொள்ளச் சம்மதித்திருக்கிறார். நாளை முதல் இவன் போகட்டும். ஒரு மாதத்துக்குப் பிறகு என்னை வந்து பாருங்கள்.”
அம்மாவுக்குப் புரியவேயில்லை. ஸ்வீட்ஸ் சாப்பிடும் பையனை மிட்டாய் கடை வேலைக்கு அனுப்பினால், இன்னும் கெட்டுப்போய்விடுவானே என்று பயம். அதே சமயம், ராமகிருஷ்ணர் எதைச் செய்தாலும், அதில் அர்த்தம் இருக்கும் என்னும் முழு நம்பிக்கை.

ஒரு மாதம் ஓடியது. பக்தை மகனோடு வந்தார். இருவரும் ராமகிருஷ்ணர் காலடியில் விழுந்து வணங்கினார்கள். பக்தை கண்களில் பொங்கிய கண்ணீர். அழுதவாறே சொன்னார், “ஸ்வாமிஜி, நீங்கள் என்ன மாய மந்திரம் செய்தீர்களோ தெரியவில்லை. என் மகன் இனிப்புகள் சாப்பிடுவதையே நிறுத்திவிட்டான்.”மகான் சிரித்தார்.

“இனிமேல் அவன் வேலைக்குப் போக வேண்டாம்.”ராமகிருஷ்ணர் சொல்லாமல் புரியவைத்த தத்துவம் இதுதான் – அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே திகட்டிவிடும். நம் வாழ்க்கையிலும் இப்படித்தான். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தொடர்ந்து வெற்றி மேல் வெற்றி வந்துகொண்டிருந்தால், தலைக்கனம் ஏறிவிடும், சலிப்பு வந்துவிடும். நம் திறமைகளைப் பயன்படுத்தாமல் துருப்பிடிக்க வைப்போம். இதைத் தடுக்க, நடு நடுவே தோல்விகள் வர வேண்டும். இந்தச் சவால்கள் மட்டுமே ஒவ்வொரு நாளையும் ரசித்துச் சுவைத்து வாழ வைக்கும்.

ஆமாம். ``மேடுபள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம்? பாறைகள் நீங்கினால் ஓடைக்கில்லை சங்கீதம்.” நீங்கள் சொந்த பிசினஸ் நடத்தலாம், வேலைக்குப் போகலாம். அல்லது சும்மாவே இருக்கலாம். உங்கள் வாழ்க்கைப் பாதை எதுவாக இருந்தாலும், ஏணிகளும், பாம்புகளும் மாறி மாறி வரும் பரமபதம்தான் சலிப்பைப் போக்குகிறது, சுவாசிக்கும் ஒவ்வொரு விநாடிக்கும் சுவை ஊட்டுகிறது.

நம் எல்லோருக்கும் இது தெரியும். ஆனால், தோல்விகள் வரும்போது இதை நாம் மறந்துவிடுகிறோம். நமக்கு மட்டுமே வீழ்ச்சிகள் நடக்கின்றன என்று கழிவிரக்கத்தின் உச்சிக்குப் போகிறோம். கடவுள் மேல், மனைவி மேல், குழந்தைகள் மேல், நண்பர்கள் மேல், மேனேஜர் மேல் பழி சுமத்துகிறோம். கண்களை மூடிக்கொண்ட பூனை, பூலோகமே இருட்டு என்று நினைத்ததைப் போல், நம் பொறுப்பை ஏற்க மறுக்கிறோம்.

கடந்த 41 வார யூ டர்ன் கட்டுரைகளின் இலக்கு, இந்த மனப்போக்கை மாற்றுவதுதான். ஆப்பிள் கம்பெனி, இந்தியன் ரெயில்வே, ஐ.பி.எம், தெர்மாக்ஸ், ஜெனரல் எலெக்ட்ரிக், டி.டி.கே. குழுமம், ஜெராக்ஸ் கார்ப்பரேஷன். ஐடிசி கம்பெனி, லெகோ, டி. ஐ. சைக்கிள், டொயோட்டா, பஜாஜ் ஆட்டோ, கிரைஸ்லர் கார்ப்பரேஷன், சரிகம ஆகிய 14 கம்பெனிகளின் அனுபவங்களைப் பார்த்தோம். ஒவ்வொருவரும், யூ டர்ன் அடிக்க எடுத்த பாதைகள் வெவ்வேறு.

# ஆப்பிள் கம்பெனியில், ஸ்டீவ் ஜாப்ஸ், கஸ்டமர்களுக்குச் சுகானுபவம் தரும் நவீனத் தயாரிப்புப் பொருட்கள் தந்து ஆனந்த அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
# இந்திய ரெயில்வேயில், லல்லு பிரசாத் வருமானத்தை அதிகமாக்கும் புத்தம் புது வழிகளைச் செயல்படுத்தினார்.
# ஐ.பி.எம். தொழில்நுட்ப முன்னணிக் கம்பெனி. திவாலாகும் நிலை வந்தபோது, சி.இ.ஓ. பதவியேற்ற லூ கெர்ஸ்ட்னர் (Lou Gerstner) அனுபவம் முழுக்க, முழுக்க பிஸ்கெட் தயாரிப்பில். தொழில்நுட்ப அரிச்சுவடி கூடத் தெரியாது. எனக்கு எல்லாம் தெரியும் என்று பாவ்லா காட்டவில்லை. தன்முனைப்புப் பாராமல் அனைவரிடமும் கற்றுக்கொண்டார். கற்றதைச் செயல்படுத்தினார். ஜெயித்தார்.
# அனு ஆகா (Anu Aga) வின் தந்தை தெர்மாக்ஸ் கம்பெனி தொடங்கினார். சிறு வயது முதலே, அனுவுக்குப் பெற்றோர்கள் காட்டிய வழி, “பெண்களுக்கு பிசினஸ் தோதுப்படாது. அவர்கள் கடமை, திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்வது மட்டுமே. வேலைக்கு ஆசைப்பட்டால், டாக்டர், நர்ஸ், பள்ளி ஆசிரியை ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்.” ஆனால், விதி காட்டியதோ, வேறு வழி. 30 வயதில் முதல் குழந்தை. அவன் இதயத்தில் ஓட்டை. அவனுக்கு அடிக்கடி வரும் மூச்சுத் திணறல். 40 வயதில், தெர்மாக்ஸை நடத்திய கணவருக்கு இதய அறுவை. பக்கவாதம். ஓரிரு வருடங்களில் மரணம். கம்பெனியைச் சுரண்டிய உயர் அதிகாரிகள். வேறு வழியின்றிக் கம்பெனியின் சி.இ.ஓ. பொறுப்பேற்றார். தலையில் இறங்கியது அடுத்த பேரிடி. 25 வயது மகன் கார் விபத்தில் மரணம். இத்தனைக்கும் மத்தியில், தெர்மாக்ஸ் கம்பெனியை நஷ்டத்திலிருந்து மீட்டுவந்த இரும்புப் பெண்மை. நமக்கு உற்சாகப் பாடம்.
# ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பெனியைத் திசை திருப்ப, ஜாக் வெல்ஷ் (Jack Welch) 1,12,000 பேரை வேலை நீக்கம் செய்து காட்டிய அபாரத் துணிச்சல்.
# டி.டி.கே. குழுமம். தாத்தா தொடங்கிய கம்பெனியைக் கரையேற்றுவதற்காக அமெரிக்கப் படிப்பைப் பாதியில் விட்டுவந்த ஜகன்னாதனின் தியாகம், ஒரு பைசா பாக்கி வைக்காமல், முழுக் கடனையும் தீர்த்த நேர்மை.
# ஜெராக்ஸ் கார்ப்பரேஷனின் சரிவுக்கான காரணங்களை சி.இ.ஓ. ராபர்ட் காம்ப் (Robert Camp) கண்டுபிடித்தார். இந்தப் பல
வீனப் பகுதிகளில் உலகிலேயே மிகச் சிறந்த கம்பெனிகளைத் தொடர்பு கொண்டு, அவர்களின் நடைமுறைகளைப் பின்பற்றினார். இந்த யுக்திக்குப் பெஞ்ச்மார்க்கிங் (Benchmarking) என்று பெயர் வைத்தார். உலகெங்கும் லட்சக்கணக்கான முன்னணி நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் சித்தாந்தம் இது.
# ஐடிசி தேவேஷ்வரின் அசாத்தியச் சமுதாயப் பொறுப்பு, கடும் போட்டிகள் நிலவும் FMCG துறையில் இறங்கி, வெற்றிகள் குவித்த யுக்தி.
# திருத்த நடவடிக்கைகளில் வேகம் மட்டுமல்ல, விவேகமும் வேண்டும். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று அவசரப்படக்கூடாது என்று நிரூபிக்கும் ரிச்சர்ட் தோமனின் (Richard Thoman) லெகோ கார்ப்பரேஷன் அனுபவம். .
# மார்க்கெட்டிங் வறட்டு வேதாந்தமல்ல, ஜீவனுள்ள கொள்கை என்று நிரூபித்த டி.ஐ. சைக்கிள்ஸ் ராம்குமார்.
# தரப் பிரச்சினை பூதாகாரமாக எழுந்த போது, வெளிப்படையாகத் தவறுகளை ஒப்புக்கொண்டு, பல கோடி டாலர்கள் செலவழித்துக் கஸ்டமர்களைத் திருப்திப்படுத்திய டொயோட்டா.
# ஸ்கூட்டர் உலகில் தனிக்காட்டு ராஜாவாக இருந்த பஜாஜ் ஆட்டோ சாம்ராஜ்ஜியத்தை இழந்தது. ராஜீவ் பஜாஜ் ஸ்கூட்டர்களைக் கைவிட்டு, மோட்டார் சைக்கிள்கள் தயாரிப்பில் இறங்கினார். அப்பா உட்பட உலகமே எதிர்த்தபோதும், தன் கனவைத் தொடர்ந்த அவர் நெஞ்சுரம்.
# ஃபோர்ட் கம்பெனி சி.இ.ஓ – வாக உச்சத்தில் இருந்த அயக்கோக்கா தனிமனிதக் காழ்ப்பால், வேலையிலிருந்து துரத்தப்பட்டார். அவமானம், நண்பர்களின் உதாசீனம் ஆகிய அனைத்துத் தடைகளையும் உடைத்து, கிரைஸ்லர் (Chrysler) கார்ப்பரேஷனை உயிர்மீட்ட இவர் தன்னம்பிக்கை வாழ்க்கை, சோர்ந்த மனங்களை நிமிரவைக்கும்.
# இசைத்தட்டு, கேசெட், சிடி, டிஜிட்டல் டவுன்லோட் என வந்த மாபெரும் தொழில்நுட்ப சுனாமிகளை எதிர்கொண்டு, தலை நிமிர்ந்து நிற்கும் சரிகம கம்பெனி.
இவர்கள் ஒவ்வொருவரும், யூ டர்ன் அடிக்க எடுத்த பாதைகள் வெவ்வேறு. ஆனால், ஒரே ஒரு ஒற்றுமை – எல்லோரும் விழுந்தவுடன், துவளாமல் எழுந்தவர்கள்.
கீழே விழுபவர்கள் யார்? தூங்கித் திரியும் சோம்பேறிகளல்ல; நடப்பவர்கள், ஓடுபவர்கள். ஆகவே, தோல்விகள் முயற்சியின் அடையாளம், முன்னேறத் துடிக்கும் உணர்வின் சின்னம், பெருமைப் பதக்கம். கவிஞர் வைரமுத்துவின் வார்த்தைகளில், ‘‘சுடும் வரைக்கும் நெருப்பு, சுற்றும் வரைக்கும் பூமி, போராடும் வரைக்கும் மனிதன். “ஆகவே, விழும்போதெல்லாம், பத்து மடங்கு வீரியத்தோடு எழுங்கள். தெளிவான சிந்தனையோடு, துணிச்சலோடு அடியெடுத்து வையுங்கள். உங்களைத் தடுக்கும் சக்தி உலகத்தில் எதுவுமே இல்லை. வெற்றி நிச்சயம். வாழ்த்துகள்.

(உங்கள் ராஜபாட்டை தயார்!

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

யு டர்ன்விழுவது எழுவதற்கேUturnஸ்வீட்ஸ் கடைஆப்பிள் கம்பெனிசரிகம கம்பெனி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author