Published : 13 Jul 2015 11:17 AM
Last Updated : 13 Jul 2015 11:17 AM

உணவுக்கு தடை!

பூச்சிக் கொல்லி உணவுகள்

நாம் உண்ணும் அனைத்து உணவுகளிலுமே உடலுக்கு கேடுதரும் ரசாயனங்கள், பூச்சிக் கொல்லிகள் கலந்திருப்பதாக உணவு ஆய்வுகள் தெரிவிக்கிறது. ஒரு ஆப்பிள் பழத்தின் மூலம் 45 பூச்சிக் கொல்லி மருந்துகளும், உருளைக்கிழங்கின் மூலம் 30 பூச்சிக் கொல்லி மருந்துகளும் நமது உடலுக்குள் செல்கிறது.

அரிசியில் கலப்படம்

அரிசியில் கலப்படம் என்றால் கல், உமி அல்லது மண் கூட இருக்கலாம். ஆனால் பிளாஸ்டிக் அரிசி கலப்பது என்பது அதிர்ச்சியோ அதிர்ச்சி. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசிகளில் இப்படியான கலப்படம் இருப்பது இப்போதுதான் இந்தியாவில் தெரிய வந்துள்ளது. இந்தோனேசிய நாட்டில் இந்த பிளாஸ்டிக் அரிசிக்கு எதிராக வர்த்தக அமைச்சகம் களமிறங்கியுள்ளது.

40 வயதுக்கு மேற்பட்டவர்களைத்தான் அதை திங்காதே இதை திங்காதே என்று எச்சரிப்பார்கள். ஆனால் இன்று எந்த உணவை எடுத்தாலும், அதை சாப்பிடலாமா வேண்டாமா என்கிற எச்சரிக்கை உணர்வு எல்லா வயதினருக்கும் வந்துவிட்டது. குழந்தைக்கு கொடுக்கும் பால் பவுடர் கூட பாதுகாப்பற்றதாக இருக்கிறது. இது போன்ற உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் உணவுகள் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உண்டு. அப்படி தடை செய்யபட்ட சில உணவுப் பொருட்கள்.

தக்காளி சாஸ்

பிட்சா, பர்க்கரில் தொட்டுக்கொள்ளும் இந்த தக்காளி சாஸை பிரான்ஸ் அரசு ஆரம்ப பள்ளிகளுக்கு கொண்டுவர தடை செய்துள்ளது. குழந்தைகள் அதிகப்படியான சர்க்கரை நோய்க்கு ஆளாவதால் இந்த தடை. பிரெஞ்சு மக்களது உணவில் கெட்சப் ஒரு அங்கம். பாரம்பரிய உணவாக இருந்தாலும் பள்ளி குழந்தைகளை பாதுகாக்க இந்த முடிவு எடுத்துள்ளது அரசாங்கம்.

அப்சிந்தி

வட ஆப்பிரிக்கா, கனடா மற்றும் அமெரிக்காவில் வளரும் ஒருவகை செடியின் பூ மற்றும் இலையிலிருந்து வடித்தெடுக்கப்படும் சாறு. மருத்துவ குணமுடையது என்றாலும், போதை தரக்கூடியது. மொராக்கோவில் இதைக் கொண்டு தேநீர் தயாரிக்கின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை செய்திருந்தன. இதை அளவுக்கதிகமாக பயன்படுத்தினால் மனநிலை பாதிக்கும் என்பதால் அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டுத்துறை அனுமதி இருந்தால்தான் இப்போது தயாரிக்க முடியும்.

ஹக்கீஸ்

ஸ்காட்லாந்து நாட்டின் பாரம்பரிய திண்பண்டம். இதை அமெரிக்காவில் தடை செய்துள்ளனர். செம்மறி ஆட்டு நுரையீரலில் இருந்து தயார் செய்யப்படுகிறது. இங்கிலாந்தில் 15 மில்லியன் டாலர் சந்தை மதிப்பை கொண்டுள்ளது. அமெரிக்க அரசோடு பேச்சுவார்த்தை நடத்தியும் தடையை நீக்க முடியவில்லை.

ஜெல்லி மிட்டாய்

ஜெல்லி மிட்டாய் தீங்கில்லாத இனிப்புதான் என்றாலும் கிட்டத்தட்ட கருணைக் கிழக்கில் கிடைக்கும் இனிப்புக்கு ஈடாக இருக்கிறது என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் இறக்குமதிக்கு தடை செய்துள்ளன. 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது என எச்சரிக்கை செய்துள்ளன. ஜப்பான் மற்றும் கிழக்கு நாடுகளில் தாராளமாகக் கிடைக்கிறது.

மர்மைட்

ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் நாடுகளில் விற்பனையாகிறது. முக்கியமாக நியூஸிலாந்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. யுனிலீவர் நிறுவனமும் இதை தயாரிக்கிறது. பியர் கழிவிலிருந்து கிடைக்கும் ஈஸ்ட்டிலிருந்து எடுக்கப்படுகிறது. பிரிட்டனில் இதன் மார்க்கெட்டிங் ஸ்லோகன் ’இதை விரும்பு அல்லது வெறுத்து விடு’ உணவுகளில் சுவை கூட்டவும், பிரெட்களில் தடவியும் சாப்பிடப்படுகிறது. போலிக் ஆசிட் அதிக அளவில் இருக்கிறது என்று டென்மார்க் அரசு தடை செய்தது. இதை தொடர்ந்து சாப்பிட்டதால் சிலர் இறந்தனர் என்றும் பேசப்பட்டது.

மாகி

இந்தியாவில் சமீபத்தில் தடை செய்யப்பட்ட இரண்டு நிமிட உடனடி துரித உணவு. அனுமதிக்கபட்ட அளவைவிட அதிகமாக ரசாயனம் கலந்து இருப்பது கண்டுபிடிக்கபட்டதால் தடைசெய்யப்பட்டது. ஆண்டுக்கு ரூ.3,400 கோடி வர்த்தக மதிப்பு கொண்டது. தடை செய்யப்பட்ட பிறகு , கடைகளிலிருந்து திரும்ப பெற்று அழிப்பதற்கான செலவு ரூ.300 கோடிக்கு அதிகமாக ஆகும் என்று கூறியுள்ளது இதன் உற்பத்தி நிறுவனமான நெஸ்லே.

அக்கி புரூட்ஸ்

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் அதிக அளவில் விளையும் ஒரு வகை பழம். குறிப்பாக ஜமைக்காவில் அதிகம் விளைகிறது. அங்கு பாரம்பரிய உணவு வகைகளில் இந்த பழத்துக்கு முக்கிய இடம் உண்டு. ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு ரூ. 2,500 கோடி வருமானத்தை கொடுக்கிறது. இந்த பழத்தை பறித்த உடன் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமான குளுகோஸ், டாக்சின் காரணமாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இந்த பழம் சேர்த்த உணவுகளுக்கு தடை விதித்துள்ளது.

சமோசா

உலகம் முழுவதும் விரும்பி உண்ணக்கூடிய சமோசாவுக்கு தடையா என ஆச்சரியப்படலாம். சோமாலியா நாட்டில் இதை தடை செய்துள்ளனர். இதற்கான காரணங்கள் எதுவும் சொல்லவில்லை. ஆனால் முக்கோண வடிவம் இஸ்லாமிய உணர்வுக்கு எதிராக இருப்பதால் இதை தடைசெய்ததாக சொல்கின்றனர் இங்கு ஆள்பவர்கள். இங்கு சமோசா சாப்பிடுவது சட்டவிரோதம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x