நம்ப முடியவில்லை!

நம்ப முடியவில்லை!
Updated on
2 min read

இந்தியாவின் பொருளாதார தேக்க நிலை, கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீத அளவுக்கு சரிந்துள்ளது. ஆட்டோமொபைல் துறையில் தொடர் சரிவு, விற்பனையில் வீழ்ச்சி இப்படி திரும்பிய பக்கமெல்லாம் வீழ்ச்சியும், சரிவும்தான். சிறு, குறு நிறுவனங்கள்தான் என்றில்லை, பெரிய நிறுவனங்களும் அரசின் கடைக்கண் பார்வை தங்களுக்குக் கிடைக்காதா என்று தினசரி கோரிக்கைகளை ஏதாவது ஒரு வகையில் விடுத்துக் கொண்டே இருக்கின்றன.

வங்கிகள் இணைப்பு அதைத் தொடர்ந்து நிறுவன வரிக் குறைப்பு என சரியும் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கைகளை அரசு எடுத்தது. ரிசர்வ் வங்கியும் தன் பங்குக்கு வழக்கம்போல கால் சதவீதம் குறைத்தது. இவையெல்லாம் ஒரு புறம்.

கடந்த மாத இறுதியில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் ``கிரேட் இண்டியன் பெஸ்டிவல் சேல்ஸ்’’, ``பிக் பில்லியன் சேல்ஸ்’’ டே என மாறி மாறி தள்ளுபடி சலுகை விற்பனை தினங்களை வெளியிட்டு பல ஆயிரம் கோடி பொருட்களை விற்பனை செய்தன. செப்டம்பர் 29-ம் தேதி தொடங்கி அக்டோபர் 4-ம் தேதி வரையிலான 6 நாள் விற்பனையில் இரு நிறுவனங்களும் விற்பனை செய்த பொருள்களின் மதிப்பு ரூ.24 ஆயிரம் கோடி.

இரண்டு நிறுவனங்களின் ஆண்டு விற்பனை வளர்ச்சி 30 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது. பிளிப்கார்டை வாங்கிய வால்மார்ட் நிறுவனம் மிக அதிக அளவில் விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை 60 முதல் 62 சதவீத அளவுக்கு உள்ளது. அடுத்த இடத்தை அமேசான் பிடித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்நிறுவனம் 22 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.

இந்த சீசனில் வழக்கம்போல அதிகம் விற்பனையானது ஸ்மார்ட்போன் என்றால் அது மிகையல்ல. ஒன் பிளஸ் நிறுவனத் தயாரிப்புக்கு முதல் இரண்டு நாளில் ரூ. 500 கோடி மதிப்பிற்கு விற்பனையாகியுள்ளன. அடுத்ததாக, ஜியோமி நிறுவனத் தயாரிப்புகள் ரூ.750 கோடிக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளன. ஜியோமி நிறுவனம் 53 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது.

பொதுவாக ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போக்கு, நகர்ப்புற இளைஞர் மத்தியில் அதிகம் என்றிருந்த நிலை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. இம்முறை இரண்டாம் நிலை நகரங்களில் அதிக அளவில் பொருட்கள் விற்பனையானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏறக்குறைய 3.2 கோடி பேர் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கியுள்ளனர். இந்தியாவின் 500 நகரங்களில் 65 ஆயிரம் வர்த்தகர்கள் மூலம் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சரி இதெல்லாம் தள்ளுபடி கால விற்பனை என்றாலும், சொகுசு காரான மெர்சிடஸ் பென்ஸ் தசரா நாளன்று மட்டும் ஒரே நாளில் 200 கார்களை டெலிவரி செய்துள்ளது. இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 125 கார்களும், குஜராத் மாநிலத்தில் 75 கார்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த பண்டிகைக் கால விற்பனை மட்டும் ரூ.39 ஆயிரம் கோடியை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆன்லைன் வர்த்தகமே இத்தனை கோடி என்றால், கடைகளில் நேரடியாக பொருட்களை வாங்குவதால் நடக்கும் வர்த்தகம் எத்தனை கோடி என்று நினைக்கும்போது மலைப்பாகத்தான் இருக்கிறது.

அடுத்து, தீபாவளி விற்பனைக்குத் தயாராகிவருகிறது பிளிப்கார்ட். அடுத்தகட்ட அறுவடையை அக்டோபர் 12-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை தள்ளுபடி சலுகையை அளித்து மக்களை திக்குமுக்காட வைக்க திட்டமிட்டுள்ளது.
பொருளாதார தேக்க நிலை, பணப் புழக்கம் மந்த நிலை என்று கூறுவது இத்தகைய புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது நம்பும்படியாகவா இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in