Published : 07 Oct 2019 12:28 PM
Last Updated : 07 Oct 2019 12:28 PM

யு டர்ன் 40: சரிகம - நான் செத்துப் பிழைச்சவன்டா!

எஸ்.எல்.வி. மூர்த்தி
slvmoorthy@gmail.com

அந்தத் திட்டம் - ஹமாராசிடி.காம் (Hamaracd.com). ஒரு உதாரணம் பார்ப்போம். "எங்க வீட்டுப் பிள்ளை” படத்தில், 6 பாடல்கள்;
1. நான் ஆணையிட்டால்….
2. மலருக்குத் தென்றல் பகையானால்….
3. கண்களும் காவடிச் சிந்தாகட்டும்….
4. பெண் போனால்….இந்தப் பெண் போனால்….
5. குமரிப்பெண்ணின் உள்ளத்திலே….’
6. நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்….

இவற்றுள், உங்களுக்கு, “நான் ஆணையிட்டால்....” பாட்டு மட்டும்தான் வேண்டும். என்ன செய்வீர்கள்? ஒரு பாட்டுக்காக 120 ரூபாய் கொடுத்து CD வாங்கமாட்டீர்கள். தரம் குறைவு என்று தெரிந்தே, தெருவோரக் கடையில் காப்பி செய்துகொள்வீர்கள். ஹமாராசிடி.காம். இணையதளத்துக்குப் போனால், “எங்கவீட்டுப் பிள்ளை” மட்டுமல்ல, “அன்பே வா”, “பச்சை விளக்கு”, “பாவ மன்னிப்பு” எனப் பல்வேறு படங்களிலிருந்து உங்களுக்குப் பிடிக்கும் சுமார் 20 பாடல்களைத் தேர்வு செய்யலாம்.

ஒரு பாடலுக்கு 12 ரூபாய் என்னும் விலையில் ஆர்டர் செய்யலாம். ஒலிப்பதிவு செய்து சரிகம கம்பெனி வீட்டுக்கே CD அனுப்புவார்கள். எம்.ஜி. ஆர். பாடல்கள், சிவாஜி பாடல்கள், சந்திரபாபு பாடல்கள், எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்த பாடல்கள், டி.எம்.எஸ். பாடல்கள், பி.சுசீலா பாடல்கள், எல்.ஆர். ஈஸ்வரி பாடல்கள் என உங்கள் ஒருவருக்கு மட்டுமான ஸ்பெஷல் சி.டி. உருவாக்கிக்கொள்ளலாம்.

சினிமாப் பாடல்கள் மட்டுமல்ல, தெய்வீகப் பாடல்கள், கர்நாடக இசையில் எம்.எஸ். அம்மா, மகாராஜபுரம் சந்தானம், செம்பை வைத்யநாத பாகவதர், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் என இசை உலகமே உங்கள் முன்னால். தங்கச் சுரங்கமாகத் தங்களிடம் இருந்த அற்புதக் கலைஞர்களின் படைப்புகளைப் பயன்படுத்த சஞ்சீவ் கண்ட மாபெரும் யுக்தி. ஹமாராசிடி.காம் மாபெரும் வெற்றி. இரண்டே வருடங்களில், பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சங்களைத் தாண்டியது.

2001. சஞ்சீவ், அமெரிக்காவின் பிரபல மேனேஜ்மென்ட் ஆலோசகர்கள் மெக்கின்சி அன்ட் கம்பெனியின் (McKinsey & Co) உதவியை நாடினார். அவர்கள் வழிகாட்டலில் பல மாற்றங்கள். பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களின் இசை உரிமையை மட்டுமே வாங்குவது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளில் தமிழ் சினிமாப் பாடல்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள். இதைப் பயன்படுத்த, தமிழ் சினிமா இசையில் தீவிரமாக ஈடுபடுதல். நாட்டின் பல பாகங்களில் FM ரேடியோ ஸ்டேஷன்கள் பிரபலமாகிக் கொண்டிருந்தன. இவற்றின் தேவைகளை அறிந்து, புரிந்து, பூர்த்தி செய்யத் தனி இலாகா.

# சினிமா தயாரிப்பு.
# தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரித்தல். (இதன் ஒரு அம்சமாக, இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் தமிழ் சீரியல் தயாரிக்கும் “மின் பிம்பங்கள்” நிறுவனத்தை சரிகம வாங்கினார்கள்.

இந்தக் காலகட்டத்தில், இசை டிஜிட்டலாகிக் கொண்டிருந்தது. ஏராளமானவர்கள் இணையதளங்களிருந்து தங்களுக்குப் பிடித்த பாட்டுக்களை டவுன்லோட் செய்து கம்ப்யூட்டர்களில் சேமித்துக் கொண்டிருந்தார்கள். சில சமயங்களில் நேர்மையாகப் பணம் கொடுத்து, பெரும்பாலான சமயங்களில் திருட்டுத்தனமாக. இந்த ஒலிப்பதிவின் தரம் மகா மட்டம். இந்தத் திருட்டால் மியூசிக் கம்பெனிகளின் சி.டி. விற்பனை சரிந்துகொண்டிருந்தது. திருட்டுடவுன்லோடை நிறுத்தும் வழியும் அவர்களுக்குத் தெரியவில்லை.

இதற்கு, ஆப்பிள் கம்பெனியின் ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு வழி கண்டுபிடித்தார். ரெக்கார்ட் கம்பெனிகள் டவுன்லோட் செய்யும் ஏகபோக உரிமையை ஆப்பிளுக்குக் கொடுக்க வேண்டும். ஆப்பிள், ஐ ட்யூன்ஸ் என்னும் ஆன்லைன் ஸ்டோர் மூலம் இந்த வசதியை வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும்.

வாடிக்கையாளர் தரும் பணத்தை ரெக்கார்டிங் கம்பெனிகளும், ஆப்பிளும் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். பலகட்டப் பேச்சுவார்த்தைகள். மியூசிக் ரெக்கார்டிங் கம்பெனிகள் சம்மதித்தார்கள். 2003-ம் ஆண்டில் இந்தச் சேவையை ஆப்பிள் ஆரம்பித்தது. ஒரு பாட்டுக்கு டவுன்லோட் கட்டணம் வெறும் 99 சென்ட்கள் மட்டுமே. (சுமார் 7 ரூபாய்.) வசூலில் 70 சென்ட் ரெக்கார்ட் கம்பெனிகளுக்கு, 29 சென்ட் ஆப்பிளுக்கு. வசூல் கொட்டியது.

சஞ்சீவ் சரிகம.காம் என்னும் இணையதளம் தொடங்கினார். கம்பெனியிடம் இருந்த 3 லட்சம் பாடல்களை டிஜிட்டலைஸ் செய்து, கஸ்டமர்கள் டவுன்லோட் செய்யும் வசதியுடன் வழங்கப்பட்டன. ஒரு பாடலுக்கு 12 ரூபாய்.
தங்களிடம் இருக்கும் இசைப் புதையலை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று சஞ்சீவ் மூளை தொடர்ந்து திட்டமிடும். இசையில், கஸ்டமர்களின் தேவை அடிக்கடி மாறும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். 2015–ல் கருத்துக் கணிப்பு நடத்தினார்கள். பெருநகரங்கள் தவிர்த்த ஊர்களில் வாழும் 35 வயதுக்கு மேற்பட்டோர் தெரிவித்த ஒரு கருத்து புதிய கதவைத் திறந்தது.

இவர்கள், இணையதளங்கள், Apps ஆகியவற்றிலிருந்து பாடல்களைக் கேட்கவும், டவுன்லோட் செய்யவும் சிரமப்பட்டார்கள். இளைய தலைமுறையிடம் உதவி கேட்க வேண்டிய கட்டாயம். இவர்கள் விரும்பிய 1970 – 1990 காலப் பாடல்களை FM ரேடியோ ஸ்டேஷன்கள் மிகக் குறைவான நேரத்துக்கே ஒலி பரப்பினார்கள். இந்தக் கேள்விகளுக்கு சரிகம–வின் பதில், “கேரவான்” (Caravan). கருத்துக் கணிப்பின் அடிப்படையில் மூன்று வருடங்கள் நடத்திய ஆராய்ச்சி. ஸாவன் (Saavan), கானா (Gaana) போன்ற இசை Apps, FM ரேடியோ ஸ்டேஷன்கள், தொலைக்காட்சி, யூ ட்யூப் ஆகியவற்றில் பிரபலமாக இருக்கும் 1970 – 1990 காலப் பாடல்களைப் பட்டியலிட்டு, 5,000 இந்திப் பாட்டுக்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

இவை டிஜிட்டல் முறையில் லோட் செய்யப்பட்டன. 35 வயதுக்கு மேற்பட்டோரில் பெரும்பாலானோர், டிரான்சிஸ்டர் ரேடியோவில் பாட்டுகள் கேட்டுப் பழகிய பரம்பரை. ஆகவே, இந்த டிஜிட்டல் பிளேயரை டிரான்சிஸ்டர் ரேடியோவைப் போல் வடிவமைத்தார்கள். விரைவில், தமிழ், தெலுங்கு, வங்காள மொழிப் பாடல்களின் கேரவான்களும் வந்தன.

2017–ல் அறிமுகம். முதல் ஆண்டில் 2 லட்சம் பிளேயர்கள் விற்பது இலக்கு. தொட்டதோ, 3,87,000! 2018 – 19 -ல் விற்பனை 9,03,000 கேரவான்கள். வரும் ஆண்டுகளில் இந்தப் புயல் இன்னும் வேகமெடுக்கும் என்கிறார்கள். இதுவரை கிடைத்த தகவல்படி, இந்திக்கு அடுத்தபடியாக அதிகம் விற்பவை தமிழ் கேரவான்கள்.

சமீபகாலமாகப் புதிய வேகம். 2017–ல் யூட்லீ ஃபிலிம்ஸ் (Yoodlee Films) என்னும் சினிமாத் தயாரிப்புக் கம்பெனி தொடங்கினார்கள். இது வரை, 14 படங்கள் ரிலீஸ். தமிழ்ப்படமான ‘‘அபியும் நானும்” இவற்றுள் ஒன்று. 2022–ம் ஆண்டுக்குள் பல மொழிகளில் 200 படங்கள் தயாரிக்கும் திட்டம். 1995 முதல், சரிகம ஜீ சேனலில், ‘‘சரிகமப” என்னும் பாடகர்களுக்கான ரியலிட்டி ஷோ நடத்தி வருகிறார்கள்.

இன்றும் வெற்றி நடை. தமிழிலும் “சரிகமப சீனியர்ஸ்”. “சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்” என்னும் போட்டிகள். சரிகம- வின் தொலக்காட்சித் தொடர்களுள், ‘‘பிள்ளை நிலா”, ‘‘சந்திரலேகா”, ‘‘ரோஜா”, ‘‘வள்ளி” ஆகியவை சன் தொலைக்காட்சி மூலமாக ரசிக, ரசிகைகளை அடைந்துள்ளன. இன்னும் பல சீரியல்கள் விரைவில். இந்தப் பல்முனை முயற்சிகளால், சரிகம அமோக வளர்ச்சி.

வளர்ச்சி வேகம் தொடரும் என்று முதலீட்டு நிபுணர்கள் கணிக்கிறார்கள் - இன்று சந்தையில் பங்கின் விலை 344 ரூபாய். ஒரு வருடத்தில் 452; ஐந்து வருடங்களில் 861; 1987-ல், ‘‘போர்ட் ஃபார் இன்டஸ்ட்ரியல் அன்ட் ஃபினான்ஷியல் ரீ கன்ஸ்ட்ரக்ஷன்”கால்களில் விழுந்து பண உதவி கேட்டுக் கெஞ்சிய கம்பெனியா இது? வாழ்த்
துக்கள் சஞ்சீவ். 22 வருடங்களில் சரிகம- வின் தலையெழுத்தையே மாற்றி எழுதிவிட்டீர்கள்.
(புதிய பாதை போடுவோம்!)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x