Published : 07 Oct 2019 11:57 am

Updated : 07 Oct 2019 11:57 am

 

Published : 07 Oct 2019 11:57 AM
Last Updated : 07 Oct 2019 11:57 AM

எண்ணித் துணிக: மூழ்காத ஷிப் பார்ட்னர்ஷிப்

yenni-thuniga
ஓவியம்: முத்து

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com

பார்ட்னர் வேண்டும் என்று முடிவு செய்துவிட்டீர்களா. குட். ஒரே ஒரு பார்ட்னர்தான் என்றாலும் கூட்டம் சேர்த்திருக்கிறீர்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். அவரோடு தொழிலை நல்லபடியாய் நடத்திச் செல்லும் வழிகள் பற்றி பேசுவோம். கண்டவுடன் கனிய பார்ட்னர்ஷிப் காதல் அல்ல. வியாபாரம். சீரியசான மேட்டர். கஷ்டம் உண்டு. கவனம் தேவை. நேரம் எடுக்கும். நிதானம் தேவை.

எத்தனை பார்ட்னர் இருக்க வேண்டும் என்பது பலர் கேட்கும் கேள்வி. பூஜ்யம் என்று விடையளிப்பவர் உண்டு. நல்ல பார்ட்னர் படை பலம் என்பவர்கள் உண்டு. அதற்காக சகட்டுமேனிக்கு பார்ட்னர்கள் வைத்துக்கொள்ளாதீர்கள். முதலாளி ரூமே க்ரூப் ஃபோட்டோ போல் இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க மாமாங்கம் ஆகிவிடும்.
பெண் பார்த்து பஜ்ஜி போண்டா சாப்பிட்ட கையோடு பெண்ணோடு தனியாக பேச வேண்டும் என்று கூறியிருப்பீர்கள். உங்கள் ஸ்டார்ட் அப் மட்டும் என்ன பாவம் செய்தது. சேரப் போகும் பார்ட்னரோடு பேசுங்கள். உங்கள் கனவு, குறிக்கோள், பாதை, கொள்கைகள் அனைத்தையும் சப்ஜாடாய் விவரியுங்கள்.

அவரையும் மனம் விட்டு பேசச் சொல்லுங்கள். எல்லாவற்றிலும் அவரோடு ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதில்லை. எங்கு வித்தியாசப்படுகிறீர்கள் என்பது தெரியும். அதை எப்படி ஹாண்டில் செய்வது என்று சிந்திக்க அவகாசம் கிடைக்கும். யாருக்கு என்ன பங்கு, என்ன பொறுப்பு என்பதை தெளிவாக்குங்கள். ஒரே வேலையை இரண்டு பேர் செய்வது நல்லது தானே என்று நினைக்காதீர்கள். இரண்டு பேரோடு கார் ஓட்டிப் பாருங்கள். நான் சொல்வது புரியும். எல்லா முடிவுகளையும் சேர்ந்தே எடுப்போம் என்று அழிச்சாட்டியம் செய்யாதீர்கள். இன்றைய அவசர அடி அர்ஜன்ட் உலகில் வேகமே விவேகம். கூட்டணி ஆட்சிகளின் கூத்தை பார்த்திருப்பீர்களே.

ஒரு பார்ட்னர் மட்டும் முழு நேரமாய் உங்கள் ஸ்டார்ட் அப்பில் பணி செய்ய முடிவு செய்து மற்றவர்கள் பகுதி நேரம் மட்டுமே உழைப்பதாய் உத்தேசித்தால் முழு நேர பார்ட்னருக்கு சம்பளம் தர தவறாதீர்கள். அவர் இளிச்சவாயனாக இருந்தாலும் இதுதான் சாக்கு என்று அவரை டபாய்க்காமல் அவர் உழைப்புக்கு உரிய மரியாதை கொடுங்கள். உங்கள் பார்ட்னர் டைட்டானிக் ஷிப் போல் பனிமலையை முட்டாமல் பதவிசாக பவனி வரும்.

பார்ட்னரை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு இருப்பது போல் உங்கள் பார்ட்னருக்கும் பலம் பலவீனம் இருக்கும். முடியும் என்பதால் மட்டுமே அவர் பலவீனத்தை பயன்படுத்தாதீர்கள். உங்கள் பலவீனம் அவருக்கு தெரியும். நீ என் கண்ணில் அடித்தால் நான் உன் கண்ணை பிடுங்குவேன் என்று அவர் ஆரம்பித்தால் உலகமே குருடாகிவிடும் என்ற வாக்கியத்தை நினைவில் வைத்து செயல்படுங்கள். ஆபீஸுக்குள் செருப்பை கழற்றி வைத்து நுழைவது போல் ஈகோவை கழற்றி வைத்துவிட்டு நுழையுங்கள். உங்கள் பார்ட்னரையும் அப்படியே செய்யச் சொல்லுங்கள்.

தவறு செய்தால் முதல் காரியமாய் பார்ட்னரிடம் ஒப்புக்கொள்ளுங்கள். சால்ஜாப்பு சொல்லிக்கொண்டு நேரம் கடத்தாதீர்கள். செய்த தவறை மறைக்க முயலாதீர்கள். சிறு சந்தேக துளி பெரு வெள்ள அபாயம். ஒளிவுமறைவு இல்லாமல் சேர்ந்து தொழில் செய்து பாருங்கள், பார்ட்னருக்கு உங்கள் மீது பரிவு வரும், மரியாதை கூடும். அப்படி இல்லாமல் உங்கள் தவறை அவர் சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தால் அவர் பார்ட்னராய் இருக்கவே தகுதியில்லாதவர். கழட்டி விடுங்கள். முடிந்தால் துரத்தி அனுப்புங்கள்! இத்தனை சொல்வதால் ஆபிஸே அமைதிப் பூங்கா

வாக மாறி, தொழிலில் தேனும் தினை மாவும் பெருக்கெடுத்து ஓடி உங்கள் காலமே பொற்காலமாக இருக்கும் என்றெல்லாம் பொய் சொல்லமாட்டேன். கருத்து வேறுபாடுகள், மனஸ்தாபங்கள், ஏமாற்றங்கள், விரக்திகள் வாசல் வழியாய் வந்து வந்து போகும். சமயங்களில் வக்கனையாய் வந்து மடியிலேயே அமரும். பேசினால் தீராத பிரச்சினை இல்லை. ரூமில் மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டிருந்தால் தொழில் உங்களை கீழே இறக்கி வைக்கும்.

சந்தேகங்களை, சங்கடங்களை மனதிலேயே போட்டு வளர்க்காதீர்கள். மற்றவரிடம் பேசாத மவுனம் அதற்கு நீங்கள் இடும் உரம். அது வளர்ந்து உங்களோடு உங்கள் தொழிலையும் நிம்மதியையும் கெடுக்கும். வளரவிடாதீர்கள். எதையும் வெளிப்படையாக பேசவும் என்று கழுத்தில் போர்டு எழுதி தொங்கவிடாத குறையாக பார்ட்னரோடு பழகுங்கள். மனைவி, நண்பன், பார்ட்னர் என்று வாழ்க்கையில் பழகப் பழகத்தான் மற்றவர்களைப் புரிந்துகொள்ள முடியும். அவசரப்படாதீர்கள்.

‘அண்டை வீட்டுக்காரன் மீது அன்பு செலுத்து. ஆனால், வெளியே போகும் போது வீட்டை பூட்டிக்
கொண்டு போ’ என்று ஒரு ஆங்கில பழமொழி உண்டு. பார்ட்னரோடு பேசிவிட்டேன் என்று பேச்சோடு
நிறுத்தாதீர்கள். பேசிய, புரிந்துகொண்ட, வாய் வழி செய்துகொண்ட ஒப்பந்தங்களை எழுத்தில் பதிவு செய்யுங்கள். முடிந்தால் லீகலாய் எழுதி அதை சட்ட பூர்வமாக பதிவு செய்தாலும் பயனே. பிற்காலத்தில் உங்கள் ஜாதகத்தில் அஷ்டமத்து சனி அமர்ந்து பார்ட்னர் ரூபத்தில் அது உங்கள் மீது படையெடுத்தால் உங்களை பாதுகாத்துக்கொள்ள பயன்படும்.

உலகிலேயே சிறந்த பார்ட்னர்ஷிப்புகள் நிலைக்கக் காரணம் அவை தழைத்து வரும் வெற்றிகளால் அல்ல, அவை பிழைத்து எழும் தோல்விகளால். தோல்வி வந்தால் பார்ட்னர் சட்டை காலரை பிடித்து சண்டை போடாதீர்கள். அப்பொழுதுதான் உங்கள் அனைவரின் ஒற்றுமையான உழைப்பு தொழிலுக்கு தேவைப்படுகிறது. வெற்றியைக் கூட தனித் தனியாக கொண்டாடலாம். தோல்வியை சேர்ந்து மட்டுமே சந்திக்க வேண்டும். செய்து பாருங்கள். விலாசம் விசாரித்துக்கொண்டு வெற்றி உங்கள் வீடு தேடி வரும்!


எண்ணித் துணிகமூழ்காத ஷிப்பார்ட்னர்ஷிப்வியாபாரம்டைட்டானிக் ஷிப்ஸ்டார்ட் அப்கூட்டணி ஆட்சிகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author