

போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக விராட் கோலியை பார்த்தவுடன், இது என்ன வித்தியாசமான தோற்றத்தில் என்று ஒரு நிமிஷம் அந்த விளம்பரத்தை பார்க்கத் தோன்றும். அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், ஆலியா பட், எம்.எஸ். தோனி, துல்கர் சல்மான், மகேஷ் பாபு, புனீத் ராஜ்குமார் என பிரபல நடிகர், கிரிக்கெட் வீரர்கள் விளம்பரங்களில் பத்திரிகையாளர், அரசியல்வாதி என அவதாரமெடுத்து அடுத்தடுத்து தோன்றும் காட்சிகள் நிச்சயம் மக்களை
ஈர்க்காமலிருக்காது. இதைச் சரியாக கணித்து தான் பிரபலங்களை தங்களது விளம்பரத்துக்கு களமிறக்கியுள்ளது பிளிப்கார்ட். இம்மாத இறுதியில் தொடங்கும் ‘பிக் பில்லியன் தின’ விற்பனைக்கான விளம்பரத்தில்தான் இத்தனை பிரபலங்களும் தோன்றி மக்களை கவர்ந்து வருகின்றனர்.
பொருளாதார தேக்க நிலையால் விற்பனை சரிவு, வேலை இழப்பு என பல்வேறு துறையினரும் அரசிடம் உதவி கேட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால், தங்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை என்பதுபோல் பிரம்மாண்டமான விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்த்து வருகின்றன ஆன்லைன் நிறுவனங்கள். அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்களிடையேதான் கடும் போட்டி. இது அமெரிக்காவில் மட்டுமல்ல உலெகங்கிலும் எங்கெல்லாம் இவை கிளை பரப்பி இருக்கின்றனவோ அங்கெல்லாம் இவை இரண்டும் மாறி மாறி சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள தீவிர போட்டியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தியாவிலும் இவ்விரு நிறுவனங்களும் கடுமையான போட்டியில் ஈடுபட்டுள்ளன. வால்மார்ட் நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த பிளிப்கார்ட்டை வாங்கியதிலிருந்து அமேசானுக்கு சவால் விடும் வகையில் சலுகைகளை அறிவித்து வருகிறது. போட்டியின் உச்சகட்டமாக இவ்விரண்டு நிறுவனங்களுமே இம்மாதம் 29-ம் தேதி மாபெரும் சலுகை தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளன. பண்டிகைக் கால விற்பனையை கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விழாவாக தள்ளுபடி சலுகையை செப்டம்பர் 29 நள்ளிரவில் தொடங்குகிறது அமேசான்.
பிளிப்கார்ட் ‘பிக் பில்லியன் டே’ விற்பனையை அதே நாளில் தொடங்குகிறது. வாடிக்கையாளரை ஈர்ப்பதற்காக சமீபத்தில் ஹிந்தி மொழி பேசுவோர் பயன்படுத்தும் எளிய முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய பொருள் வாங்க பட்ஜெட்டில் இடமில்லை என ஏங்க வேண்டாம். எவ்வித கட்டணமும் இல்லாத சுலப தவணை திட்டத்தையும் இவ்விரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன. மேலும் கேஷ் பேக் ஆஃபர்களையும் அள்ளித் தருகின்றன.
அமேசான் நிறுவனம் 600 பிரதான பொருள்கள் அடங்கிய வேன் ஒன்றை 13 நகரங்களில் உலா விட்டு மக்கள் மத்தியில் வாங்கும் ஆசையைத் தூண்டியுள்ளது.
ஆன்லைன் மூலம் வாங்கும் பொருட்களுக்கு அதிகபட்சமாக 90 சதவீத அளவுக்கு தள்ளுபடி தரப்படுகிறது. இதனால் இத்தகைய விற்பனைக்கு பொதுமக்கள் மத்தியில் மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருப்பது இயல்பே.
அந்நிய நேரடி முதலீட்டு விதிகளை ஆன்லைன் நிறுவனங்கள் மீறுவதாக வர்த்தகக் கூட்டமைப்பினர் மத்திய வர்த்தக அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். இத்தகைய விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
லாபம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் வர்த்தக நிறுவனங்கள் மத்தியில், ஆன்லைன் நிறுவனங்கள் அளித்தரும் அபரிமித தள்ளுபடி சலுகைகள் மிகுந்த வரவேற்பு பெறுவதை யாரும் தடுக்க முடியாது. இதை இந்த தள்ளுபடி விற்பனையிலும் எதிர்பார்க்கலாம்.