Published : 23 Sep 2019 10:36 AM
Last Updated : 23 Sep 2019 10:36 AM

கனவு இல்லத்தை காப்பீடு செய்யலாமே!

பவதாரிணி கே.எஸ்.
bavadharini.ks@thehindu.co.in

கனவு மெய்ப்பட வேண்டும், கனவு இல்லம் அனைவருக்கும் வசமாக வேண்டும். இதுதான் இப்போது அனைவரது இலக்காக உள்ளது. சுலப தவணை திட்டங்கள் கனவு இல்லத்தை சாத்தியமாக்கியுள்ளன. இனி கனவு இல்லத்தை காப்பதற்கு திட்டமிடுவதுதான் பிரதானமாகும். அதற்கு காப்பீடு மிகவும் அவசியம். பொதுவாக வீடுகளைப் பொறுத்தமட்டில் ‘தீ காப்பீடு’ மட்டுமே அடிப்படை பாலிசியாக அளிக்கப்படுகிறது.

இது வீட்டின் கட்டமைப்புக்கு காப்பீடு செய்வதாகும். ஆனால் வீடுகளை காப்பீடு செய்வதில் ஒருங்கிணைந்த காப்பீட்டுத் திட்டங்கள் பயனுள்ளவையாக இருக்கும். அதாவது வீட்டில் திருடு நடந்தாலோ, மின்சார பிரச்சினையால் வீட்டில் உள்ள மின் சாதனங்கள் பாதிக்கப்பட்டாலோ அதற்கும் இந்த காப்பீடு உதவும். ஒருங்கிணைந்த காப்பீட்டுத் திட்டத்தை மேற்கொள்ளும் முன்பு பின்வரும் விஷயங்களை கவனிப்பது மிகவும் அவசியம்.

மொத்த காப்பீடு

அதாவது இந்த காப்பீட்டுத் திட்டத்தில் கட்டிடத்தின் மதிப்புக்கு காப்பீடு செய்வது. இது கட்டிடத்தை காக்கும்.
எஸ்ஐ அடிப்படையிலானது. இது கட்டிடத்தின் மொத்த நிர்மாணத் தொகைக்கு காப்பீடு செய்வது. அதாவது வீட்டை மறு நிர்மாணம் செய்வதற்கான தொகைக்கானது. இதில் நிலத்தின் மதிப்பு இடம்பெறாது. இதில் மதிப்பீடு கட்டிடம் அமைந்துள்ள இடத்தின் மதிப்பைப் பொறுத்தும், விற்பனை பத்திர மதிப்பு மற்றும் நடப்பு சந்தை நிலவர மதிப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

இரண்டாவது எஸ்ஐ அடிப்படையிலானது. இது கட்டிடத்தின் தேய்மான மதிப்பு. அதாவது, கட்டிடத்தின் ஆயுள்கால அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு மறு நிர்மாணத்துக்கு காப்பீட்டுத் தொகை அளிக்கப்படும். ஒப்புக்கொண்மதிப்பீடு அடிப்படையிலானது. இதுமொத்த பரப்பு (விற்பனை பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட அளவு), வழிகாட்டு விதிமுறையில் ஒரு சதுர அடி மதிப்பு அல்லது மாநில அரசு வெளியிட்டுள்ள மதிப்பு அடிப்படையில் கணக்கிடப்படுவதாகும். காப்பீடு செய்யும்போது எந்த ஒரு நிறுவனமும் இம்மூன்று பாலிசிகளையும் ஒருங்கிணைத்த அளவில் அளிப்பதில்லை.

குறிப்பாக ராயல் சுந்தரம் அளிக்கும் கிருஹ் சுரக்ஷா காப்பீட்டுத் திட்டத்தில் (ஒருங்கிணைந்த பாலிசி) கட்டிடத்தின் மதிப்பு அப்போதைய சந்தை மதிப்பு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. பஜாஜ் அலையன்ஸ் பொது காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்பவர்கள் எந்தத் தொகைக்கு காப்பீடு செய்ய விரும்புகிறார்களோ அந்த தொகைக்கு காப்பீடு அளிக்கிறது. வீடு மற்றும் வீட்டில் உள்ள புதுப்பிக்கத்தக்க பொருட்களின் மதிப்பு இவற்றுடன் கட்டிடத்தின் ஆயுள் காலம் அல்லது தேய்மானம் கழிக்கப்பட்டு மதிப்பிடப்படும்.

பொதுவாகவே வீட்டுக் காப்பீடை பொறுத்தமட்டில் ஒரு சதுர அடிக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை கணக்கிடப்படும். வீட்டில் உள்ள பொருட்களின் மதிப்பு அடிப்படையில் 1,000 சதுர அடி கொண்ட வீட்டுக்கான காப்பீடு ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை மதிப்பிடப்படும் என்று ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி ராகேஷ் ஜெயின் தெரிவித்தார். பொதுவாகவே தனி நபர்கள் வீட்டுக்கு காப்பீடு செய்வது 30 நாட்கள் அல்லது ஓராண்டு அல்லது 20 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளலாம். இவ்விதம் காப்பீடு எடுக்கும்போது மதிப்பீடு உயர்வு குறித்த பிரிவையும் கணக்கில் கொள்ள வேண்டும். அப்போதுதான் இழப்பீடு கோரும்போது உரிய நிவாரணம் கிடைக்கும்.

காப்பீடு செய்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கட்டிடத்தின் மதிப்புக்கேற்ப காப்பீடு செய்ய வேண்டும். இதில் பணவீக்கத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்வது சிறந்தது. இத்தகைய உள் பிரிவுகளையும் தேடிப்பிடித்து காப்பீடு செய்யாமலும் விடலாம். ஆனால் கட்டிடத்
துக்கு பேரிடர் ஏற்படும்போது பெருத்த நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். ராயல் சுந்தரரத்தின் கிரஹ் சுரக்ஷா காப்பீட்டில் ஒவ்வொரு ஆண்டும் அடிப்படை மதிப்பில் 10 சதவீத உயர்வு அளவுக்கு கணக்கிடப்பட்டு காப்பீடு செய்யப்படுகிறது. சந்தை நிலவரத்துக்கேற்ப காப்பீடு விதிமுறைகளை நன்கு தெரிந்து கொண்டு காப்பீடுசெய்வது நல்லது.

கவனிக்க வேண்டியவை

வீட்டுக் காப்பீட்டைப் பொறுத்தமட்டில் கூடுதல் என்றொரு பிரிவு உள்ளது. இதன்படி இழப்பீடு கோரும்போது நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டியிருக்கும். பஜாஜ் அலையன்ஸின் ஆல் ரிஸ்க் பாலிசியில், வாடிக்கையாளர்கள் செலுத்தும் அடிப்படை பிரீமியம் தொகைக்கு தள்ளுபடி தரப்படுகிறது. காப்பீட்டு பிரீமியமாக ரூ.10 ஆயிரம் செலுத்தினால் உங்களுக்கு 10 சதவீதம் கிடைக்கும்.

இது ரூ.50 ஆயிரமாக இருந்தால் உங்களுக்கு 35 சதவீத தள்ளுபடி கிடைக்கும். வீட்டில் உள்ள பொருட்களை காப்பீடு செய்யும்போது உங்களுக்கு ரூ.20 ஆயிரத்துக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி தரப்படுகிறது. வீட்டின் மதிப்பீடு அடிப்படையிலதான் பிரீமியம் கணக்கிடப்படுகிறது. இது ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனத்துக்கும் இடையே மாறுபடும்.

பொதுவாக எடுத்துச் செல்லும் வகையிலான பொருட்கள் காப்பீட்டில் வராது. அவ்விதம் சேர்க்க வேண்டுமாயின் கூடுதல் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். இது தவிர கூடுதல் காப்பீடு வசதிகளும் உள்ளது. அதாவது வாடகை இழப்பு, குடியிருப்போர் ஸ்டிரைக் செய்தால், வீட்டின் பூட்டு, சாவி மாற்றுவது, செல்லப் பிராணி நாய்க்கு காப்பீடு மற்றும் பர்ஸ் தொலைவது மற்றும் ஏடிஎம்-மிலிருந்து பணம் எடுத்து வரும்போது வழிப்பறியில் பணத்தை பறிகொடுத்தல் ஆகியவற்றுக்கு கூடுதல் பிரீமியம் செலுத்தலாம். அப்போது அவை காப்பீட்டின்கீழ் வரும்.

உங்கள் வீடு 30 நாட்களுக்கு மேல் காலியாக இருக்கும்பட்சத்தில் அதில் ஏற்படும் இழப்புகளுக்கு எந்த ஒரு காப்பீட்டு நிறுவனமும் இழப்பீடு வழங்காது. அதேபோல குறிப்பிட்ட காலத்துக்கும் பழமையான வீடுகளையும் காப்பீடு செய்ய முடியாது. 30 ஆண்டுக்கு மேற்பட்ட வீடுகளை கிருஹ் சுரக்ஷா திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய முடியாது. வீட்டின் கட்டுமான அமைப்பில் ஏற்பட்ட கோளாறால் கட்டிடம் இடிந்து போவது, மோசமான பராமரப்பில்லாத காரணத்தால் சேதமடைவது, தீவிரவாத செயல்களால் பாதிப்படைவது மற்றும் அணுக்கதிர் வீச்சு பாதிப்பு போன்றவற்றுக்கு வீட்டு காப்பீட்டு திட்டத்தில் இழப்பீடு கிடைக்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x