Published : 23 Sep 2019 10:23 AM
Last Updated : 23 Sep 2019 10:23 AM

எண்ணித் துணிக: தனித்தா அல்லது கூட்டணியா?

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com

எல்லாரும் சொல்கிறார்கள் என்று கல்யாணம் செய்துகொள்கிறோம். அதனால்தானோ என்னவோ ஸ்டார்ட் அப் தொடங்கும்போது எல்லாரும் செய்கிறார்கள் என்று தொழிலுக்கும் பார்ட்னர்கள் தேடுகிறோம். திருமணம் தேவையா இல்லையா என்பதை பட்டிமன்ற தலைப்பாக்கலாம் அல்லது அவரவர் தலையெழுத்து என்று விட்டுவிடலாம். தொழில் தொடங்க பிசினஸ் பார்ட்னர் வேண்டுமா? ஸ்டார்ட் அப் என்பது பார்க்காத உலகம், செய்யாத விஷயம், போகாத ஊர், பார்க்காத பணி. தனியாய் பயணித்தால் வழி தெரியுமா, தெரிந்தாலும் புது ஊரில் பிழைக்க முடியுமா என்ற பீதி பீறிட்டடித்து பாதாதிகேசமும் படரும். தொழில் துவங்க நினைப்பதே தனிக்காட்டு ராஜாவாய் இருக்கத்தான்.

எதற்கு பார்ட்னர், துணை என்ற அடப்பங்கள். அதையும் சுமந்துகொண்டு பயணிக்க வேண்டும். மடியில் பூனையை கட்டிக்கொண்டு சகுனம் பார்க்க வேண்டும். அதையே வேறு கோணத்தில் பார்க்கும்போது பார்ட்னர் தேவை என்பதுபோல் தெரியும். தனி ஆளாய் தரணி ஆள முடியுமா. ஒத்தாசைக்கு கைவசம் பார்ட்னர் இருந்தால் பெட்டரோ என்று சபலம் தட்டும். என்ன செய்வது? ஸ்டார்ட் அப் என்ற தேர்தலில் பார்ட்னர் என்ற கூட்டணி அமைத்து போட்டியிடுவதா அல்லது சுயேச்சையாய் நின்று ஆனது ஆகட்டும் என்று ஒரு கை பார்ப்பதா? பார்ட்னர் இல்லாமல் தனி ஆளாய் பயணிப்பதில் சில சௌகரியங்கள் உண்டு.

தொழிலில் உங்களுக்கென்று நீங்கள் நிர்ணயித்திருக்கும் இலக்கை யாருக்காகவும் காம்ப்ரமைஸ் செய்ய வேண்டாம். தொழில் தொடங்க நினைப்பதே உங்கள் இலக்கை அடையத்தானே. பார்ட்னரை கூட வைத்துக்கொள்கிறோம், ஓகே. இன்று உங்களோடு இலக்கை நோக்கி பயணிப்பவர் நாளை தன் இலக்கை மாற்றித் தொலைத்தால் பிரச்சினை பிறக்கும். வாக்குவாதம் வளரும். பிரிவு வரை கூட போகலாம். தனியாய் சென்றால் சூப்பர்ஸ்டார் போல் நம் வழி தனி வழி.

தனியாய் பிசினஸ் செய்தால் எதையும் யாரையும் கேட்டு செய்ய வேண்டாம். எடுக்க வேண்டிய முடிவுகளை வோட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டாம். இதனால் வேலை சீக்கிரம் நடக்கும். உங்கள் பணித் திறன் அதிகரிக்கும். நேரம் மிச்சமாகும். தனியாய் சென்றால் வேறு யாரையும் நம்பவும் வேண்டாம். உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் எதேஷ்டம். கூடமாட ஓட, ஒத்துழைக்க ஆட்களை நியமித்தால் போதும்.

முடிவெடுக்கும் பொறுப்பு உங்களுடையதே. பிசினஸ் ராஜ்யத்தில் நீங்களே ராஜா, மந்திரி, தளபதி இன்ன பிற! தனியாய் தொழில் செய்தால் உங்கள் நேரம் உங்களுடையது. யாருக்கும் காத்திருக்க தேவையில்லை. நெகிழ்வுத் தன்மை (Flexibility) உண்டு. வியாபாரம் ஓஹோ என்று சென்று பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டினால் அதை பங்கு போட பார்ட்னர் இருக்கமாட்டார். பணத்தை தனி ஆளாய் கோணிப் பையில் கட்டோ கட்டென்று கட்டலாம்.

பார்ட்னர் இல்லையெனில் பிரச்சினைகளும் உண்டு. முதலீட்டை மொத்தமாய் நீங்கள் ஒருவரே போட வேண்டும். டப்பு இருந்தால் ஓகே. இல்லாதவர்கள் இருப்பவர்களை தேட வேண்டும். பிசினஸ் தழைத்தால் தேவலை. இளைத்தால் ரிஸ்க்கை பங்கு போட பார்ட்னர் இருப்பது பெட்டர். பள்ளிக் காலத்தில் பாடத்தில் பெயில் ஆகும்போது பக்கத்தில் இருப்பவனும் பெயிலானால் ஒரு அல்ப திருப்தி இருக்குமே, அதுபோல! கை தர, தோள் கொடுக்க பார்ட்னர் சைக்காலஜிகல் சப்போர்ட். பலருக்கு இருட்டில் நடக்கவே பயமாயிருக்க, புரியாத பிசினஸ் பாதையில் பயணிக்க பார்ட்னர்கள் இருந்தால் அட்லீஸ்ட் பேச்சுத்துணை இருக்கும். அவர் உதவினால் போனஸ்!

எல்லாருக்கும் எல்லா திறமைகளும் வாய்ப்பதில்லை. ஆனால் பிசினஸ் பிழைக்க, தழைக்க, செழிக்க பல திறமைகள் தேவைப்படுகின்றன. திருப்பித் தருகிறேன் என்று கூறி பணத்தை கடன் வாங்கலாம். திறமையை வாங்க முடியாது. உங்களிடம் இல்லாத திறமையை அது அபரிமிதமாக இருக்கும் ஒருவரை பார்ட்னராக்கினால் உங்கள் திறமையோடு அவர் திறமையும் சேர்ந்து இரண்டும் இரண்டும் ஸ்டார்ட் அப்பில் அஞ்சாகும். இரண்டு கை தட்டினால் தான் சத்தம். சமயத்தில் வேலை பளு கூடி தனி ஒருவனால் ஸ்டார்ட் அப்பின் அனைத்து பணிகளையும் ஒரு சேர செய்ய பிரம்ம பிரயத்தனம் தேவைப்படும். வேலை பளுவை குறைக்க எக்ஸ்ட்ரா கைகள் இருப்பது சவுகரியம்.

நம் முகம் நமக்கு அழகாய் தெரியும். கண்ணாடிக்குத்தான் தெரியும் அந்த கண்றாவி. அதுபோல் உங்கள் ஐடியா உங்களுக்கு சூப்பராகத்தான் தெரியும். அதை அப்படியே பிரயோகித்து அது பீஸ் பீஸாய் போகும் போதுதான் அதிலுள்ள தவறுகள் தெரியும். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் பயனளிப்பதில்லை. பார்ட்னர் இருந்தால் உங்கள் ஐடியாவை கூறி அதன் தரத்தை அவர் கொண்டு எடை போடலாம்.

கூடைப்பந்து ஆடும் போது ஆட்டக்காரர் பந்தை எப்பொழுதும் நேராக கூடையில் போடுவதில்லை. கூடையின் பின் உள்ள பேக்போர்ட்டை பயன்படுத்தி அதன்மீது பந்து பட்டு கூடைக்குள் செல்லும் வகையில் பந்தை எறிவார். பாயின்ட் பெறுவார். அதுபோல் நல்ல பார்டனர்கள் இருந்தால் அவர்கள் மனதை உங்கள் பேக்போர்டாக்கி உங்கள் ஐடியாவை எறிந்து சீர் தூக்குவது சிறந்தது. உங்கள் பிசினஸுக்கும் பாயின்ட்!
‘என்னதான் சொல்ல வருகிறாய், நான் பார்ட்னர் வைத்துக்கொள்வதா, தனியாய் தொழில் துவங்குவதா’ என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. யோசித்துப் பார்த்து அடுத்த வாரம் சொல்கிறேன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x