

பிரீமியம் கார்களில் பிஎம்டபிள்யு நடுத்தர வகுப்பினரும் வாங்கக்கூடிய விலையில் சமீபகாலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் செடான் மாடலான பிஎம்டபிள்யு 3 சீரிஸ் மாடல் ஆரம்பத்திலிருந்தே கார் பிரியர்களின் கனவுக் காராக விளங்குகிறது. இந்நிலையில் சமீபத்தில் இதன் ஏழாம் தலைமுறை மாடலை நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
முந்தைய மாடல்களுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று பார்த்தால், அளவில் சற்று பெரிதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தோற்றமும், கிரில் மற்றும் லோகோ பொருத்தப்பட்டிருப்பதும் மாறுபட்டு சிறப்பான லுக்கைத் தருகிறது. ஆறாம் தலைமுறை மாடலைக் காட்டிலும் இது 76 மிமீ நீளம் அதிகமாக உள்ளது. வீல்பேஸ் அளவும் சற்று அதிகம்தான். இதனால் உள்ளே அதிக இடவசதியை உணர முடியும். இதன் கிட்னி வடிவ கிரில் பானெட்டுடன் மடிந்த நிலையில் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.
உட்புறத்தில் இருக்கை அமைப்பு, இடவசதி, இன்ஃபோடெயின்மென்ட், நேவிகேஷன் என அனைத்தும் பிஎம்டபிள்யு பிராண்டுக்கே உரிய தனித்துவத்துடன் விளங்குகிறது. ஓட்டுவதற்கு எளிமையாகவும் ஸ்போர்ட்டியாகவும் இருக்கும் வகையில் ஸ்டீயரிங் பொசிஷன் செய்யப்பட்டிருக்கிறது. இதில் 320ஐ பெட்ரோல் மற்றும் 320டி டீசல் இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இது 190 ஹெச்பி பவர், 400 என்எம் டார்க் இழுவிசையுடன் கிடைக்கிறது.
இதில் 320டி இன்ஜினில் வழக்கமானட்வின் ஸ்க்ரோல் டர்போவுக்கு பதிலாக ட்வின் சீக்வன்ஷியல் டர்போ பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் பேஸ் வேரியன்ட் விலை ரூ.41.40 லட்சம், டாப் வேரியன்ட் ரூ.46.90 லட்சம் ஆகும்.