

தற்போது இந்திய வாகனச் சந்தை மின்சார வாகனத் தயாரிப்புக்கு மாறி வரும் நிலையில் பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. போலாரிட்டி நிறுவனம் அவற்றில் ஒன்று.
புணேவை தலைமையிடமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், சமீபத்தில் அதன் 6 புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. எஸ்1கே, எஸ்2கே, எஸ்3கே, இ1கே, இ2கே, இ3கே ஆகியவைதான் அதன் ஆறு மாடல்கள். இந்த ஆறு மாடல்களும் 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பார்ப்பதற்கு சைக்கிள் போலவே இருக்கும் இந்த பைக்கில், அதன் மாடலுக்கு ஏற்ப 45 கிமீ வேகம் முதல் 80 கிமீ வேகம் வரை பயணிக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவிக்கிறது. இவற்றின் விலை ரூ.38 ஆயிரத்திலிருந்து ரூ. 1.1 லட்சம் வரையில் உள்ளது.
எஸ்1கே விலை ரூ.40,000, எஸ்2கே ரூ.70,000, எஸ்3கே ரூ.1.1 லட்சம், இ1கே ரூ.38,000, இ2கே ரூ.65,000, இ3கே ரூ.1.05 லட்சம் என்ற அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் ‘எஸ்’ வகை மாடல்கள் ஸ்போர்ட்ஸ் தன்மையையும், ‘இ’ வகை மாடல்கள் எக்சிக்யூடிவ் தன்மையையும் கொண்டிருக்கும். இவ்வாகனங்களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.