

பெட்ரோலிய நிறுவனங்கள் பெருமளவு நஷ்டத்தை எதிர் கொண்டதற்கு முக்கியக் காரணமே மானியம்தான். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் (எல்பிஜி), மண்ணெண்ணெய் இவற்றுக்கு அளிக்கும் மானியத்தின் சுமை காரணமாக இவை நஷ்டத்தை எதிர்கொண்டு வந்தன.
பெட்ரோல் மீதான கட்டுப்பாட்டை சில ஆண்டுகளுக்கு முன்பாக நீக்கி யதால், பெட்ரோல் விற்பனையில் நஷ்டம் ஏற்படுவது குறைந்தது. அடுத்து, டீசல் மீதான கட்டுப்பாட்டை அரசு நீக்கியதும் அதன் மூலமான நஷ்டமும் குறைந்தது.
ஆனால் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அளிக்கப்படும் மானியம் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு பெரும் சுமையாக இருந்தது. ஒரு சிலிண்டருக்கு சுமார் ரூ. 200 வரை அளிக்க வேண்டியது கடும் சுமையாக இருந்தது.
காங்கிரஸ் தலைமையிலான அரசு ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆண்டுக்கு 12 சிலிண்டர் என்ற வரையறை நிர்ணயித்தது. இருப்பினும் இந்தப் பிரச்சினை அவ்வளவாக தீர்க்கப்படவில்லை.
கடந்த ஆண்டு மத்தியில் பொறுப்பேற்ற பாஜக அரசு வீடுகளுக்கு அளிக்கப்படும் சிலிண்டர் மீதான மானியத்தை வங்கிக் கணக்கில் அளிப்பதென்று முடிவு செய்தது. இதன்படி பயனாளிகள் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான முழுத் தொகையை செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். அரசு அளிக்கும் மானியத் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவித்து.
ஆறு மாதங்களாக செயல்பாட்டில் இருக்கும் இந்தத் திட்டம் அரசு எதிர்பார்த்த பலனை அளிக்கத் தொடங்கியுள்ளது.
முதல் கட்டமாக வசதி படைத்தவர்கள் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அரசு அளிக்கும் மானியத்தை விட்டுத் தரலாம் என்று அரசு பிரசாரம் செய்தது. இதன்படி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மானியம் வேண்டாம் என கூறினர். அடுத்த கட்டமாக பெரும் தொழிலதிபர்கள், வசதிபடைத்த பிரபலங்கள் என சமையல் எரிவாயு மானியம் வேண்டாம் என கைவிட்டோரின் பட்டியல் தொடர்ந்தது.
இதையடுத்து அரசு உயர் பதவியில் உள்ள அதிகாரிகளும் மானியம் வேண்டாம் என கூறத் தொடங்கினர்.
இவை அனைத்துக்கும் மேலாக வங்கியில் பணத்தை நேரடியாக செலுத்தும் நடவடிக்கை ஆரம்பித்ததால், போலியாக வீட்டு உபயோக சிலிண்டரை பயன்படுத்துவது குறைந்தது. போலி பயனாளிகள் குறைந்ததால் அரசுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி மிச்சமானது.
வீடுகளில் சமையல் எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துவதும் அதிகரித்துள்ளது. இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர் நுகர்வு கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையான காலத்தில் சிலிண்டர் பயன்படுத்துவது 7.8 சதவீத அளவுக்கு இருந்தது. இது கடந்த ஆண்டு 11.4 சதவீத அளவுக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.
வீடுகளில் பயன்படுத்தும் ஒரு எல்பிஜி சிலிண்டரின் சந்தை விலை ரூ. 626. மானிய விலையில் இது ரூ. 417-க்கு அளிக்கப்படுகிறது. இப்போது வாடிக்கையாளர்கள் முழுத் தொகையையும் செலுத்தி சிலிண்டர் பெற்றுக் கொள்ள வேண்டும். சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்ட உடன் பயனாளியின் வங்கிக் கணக்கில் ரூ. 209 தொகை மானியமாக சேர்க்கப்படும். இதன்படி ஒரு பயனாளி ஆண்டுக்கு 12 சிலிண்டரையும் பயன்படுத்தினால் அவர் பெறும் மானியம் ரூ. 2,514 ஆக உள்ளது.
இந்தியா முழுவதும் தற்போது 15.3 கோடி பேர் எல்பிஜி பயன்படுத்துகின்றனர்.
இதனிடையே மானியத்தை சந்தை விலையில் வாங்கும் சக்தி படைத்தவர்கள் மானியத்தை விட்டுத் தர வேண்டும் என்ற பிரசாரத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மார்ச் 27-ம் தேதி இந்தப் பிரசாரத்தை மோடி தொடங்கி வைத்துள்ளார்.
இதன் பலனாக நாட்டில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வேண்டாம் என கூறியுள்ளனர். இதனால் அரசுக்கு ஒட்டுமொத்தமாக மானியமாக அளிக்க வேண்டிய ரூ. 475.50 கோடி மீதமாகியுள்ளது.
போலி பயனாளிகள் ஒழிக்கப்பட்டதன் மூலம் ரூ. 10 ஆயிரம் கோடியும், மானியத்தை விட்டுத் தாருங்கள் என அரசு கேட்டுக் கொண்டதால் ரூ. 475 கோடியும் அரசுக்கு மிஞ்சியுள்ளது.
மக்கள் அனுபவித்துவரும் ஒரு பொருளுக்கு தடை விதித்தாலோ அல்லது கட்டுப்பாடு விதித்தாலோதான் கடும் எதிர்ப்பு கிளம்பும்.
அதை முறைப்படுத்தி, மக்களிடமே கேட்டுக் கொண்டால் அதற்கு சிறந்த வரவேற்பு இருக்கும் என்பதற்கு எல்பிஜி மானிய விஷயம் ஒரு மிகச் சிறந்த உதாரணம்.
இவ்விதம் மீதமாகும் மானியத் தொகையை அரசு மக்கள் நலத் திட்டங்களுக்கு செயல்படுத்தினால், இதுபோல மானியத்தை விட்டுத் தருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.