Published : 16 Sep 2019 11:40 AM
Last Updated : 16 Sep 2019 11:40 AM

மாற்றம் எண்களில் மட்டும்தானா?

நரி இடது பக்கம் போனால் என்ன, வலது பக்கம் போனால் என்ன, மேலே விழுந்து நம்மை கடிக்காமல் இருந்தால் சரி என்ற மனோபாவம்தான் மக்கள் மத்தியில் பரவலாக உருவெடுத்துள்ளது.

காரணம் அரசின் ஒவ்வொரு கொள்கை முடிவுகளும் தங்களை எந்த வகையில் பாதிக்கப் போகிறதோ என்ற அச்சத்திலேயே வாழும் நிலைதான் தற்போது அதிகரித்து வருகிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கை அதைத் தொடர்ந்து சரக்கு மற்றும்சேவை வரி போன்ற அடுத்தடுத்த பிரச்சினைகளை எதிர்கொண்ட பொதுமக்களுக்கு, அரசின் புதிய அறிவிப்புகள் எப்போதுமே பெரிய அலர்ஜியை ஏற்படுத்துவதாகத்தான் இருக்கிறது.

சமீபத்திய வங்கிகள் இணைப்பு அறிவிப்பும் அப்படியானதுதான். மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய அங்கமாக மாறிவிட்ட வங்கிகளின் செயல்பாடுகளில் சாதாரணமாக செய்யப்படும் சிறு மாற்றம் கூட மக்களைப் பெரிய அளவில் பாதிப்பதாக இருக்கிறது. எனில், வங்கிகள் இணைப்பு என்ற மாற்றம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் நாம் பேச வேண்டியிருக்கிறது.

வங்கிகள் இணைப்பு குறித்த அறிவிப்பு மக்கள் மத்தியில் கவலையையும், கலவரத்தையும் உண்டு பண்ணியிருக்கிறது என்றால் அது மிகையல்ல. ஏன் இந்த இணைப்பு என்பதற்கு அரசு கூறும் காரணங்களும், முந்தைய வங்கி இணைப்புகளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் எட்டப்பட்டதா என்பதையும் ஆராய்ந்தாலே இணைப்பு நடவடிக்கையின் பலன் என்னவாக இருக்கும் என்பது தெளிவாகப் புரியும்.

1969-ம் ஆண்டு இந்திரா காந்தி வங்கிகளை தேசியமயமாக்கினார். அப்போது இருந்த பொதுத் துறை வங்கிகளின் எண்ணிக்கை 14. அடுத்த சில ஆண்டுகளில் பொதுத் துறை வங்கிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 27 ஆனது. இப்போது காலச் சக்கரம் பின்னோக்கி சுழன்று எண்ணிக்கை 12 ஆகக் குறையப் போகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் ஒன்றாக இணைக்கப்படுகின்றன. இம்மூன்று வங்கிகளும் இணைவதன் மூலம் இவை கையாளும் வர்த்தகத்தின் அளவு ரூ. 18 லட்சம் கோடியாக இருக்கும். அதேபோல 11,437 கிளைகளுடன் இரண்டாவது பெரிய வங்கியாக இக்கூட்டணி திகழும்.

அடுத்து கனரா வங்கி, சிண்டிகேட் வங்கி இணைவதால் ரூ.15.2 லட்சம் கோடி வருமானம் கொண்ட வங்கியாக உருவெடுக்கும். ஒன்றிணைந்த இந்த வங்கிக்கு 10,324 கிளைகள் இருப்பதால் மூன்றாவதாக பெரிய வங்கியாக இக்கூட்டணி திகழுமாம். யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கிகள் இணைக்கப்படும்போது அவை கையாளும் வர்த்தக அளவு ரூ.14.6 லட்சம் கோடியாகவும், கிளைகளின் எண்ணிக்கை 9,609 ஆகவும் இருக்கும். இதனால் இது நான்காவது பெரிய வங்கியாக திகழும். இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி சேரும் பட்சத்தில் இருவர் கூட்டணியின் வர்த்தக வருமானம் ரூ.8.08 லட்சம் கோடியாகும்.

இந்த வங்கிகள் இணைப்பு மூலம் இவை கையாளும் வர்த்தக அளவானது மொத்த வங்கித் துறை கையாளும் அளவில் மூன்றில் இரண்டு பங்காக இருக்கும். இணைப்பை அறிவித்த கையோடு வங்கிகளில் ரூ. 55,250 கோடி அரசு முதலீடு செய்யும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அந்த வகையில் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.16 ஆயிரம் கோடி, யூனியன் வங்கிக்கு ரூ.11,700 கோடி, கனரா வங்கிக்கு ரூ.6,500 கோடி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.3,800 கோடி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு ரூ.3,300 கோடி, பாங்க் ஆஃப் பரோடாவுக்கு ரூ. 7 ஆயிரம் கோடி, இந்தியன் வங்கிக்கு ரூ.2,500 கோடி, யூகோ வங்கிக்கு ரூ.2,100 கோடி, யுனைடெட் வங்கிக்கு ரூ.1,600 கோடி, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கிக்கு ரூ.750 கோடி கிடைக்கும்.

புதிய வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவை கிடைக்கச் செய்வது, வங்கிக் கிளைகளை ஒருங்கிணைப்பது, கடன் வழங்குவதற்கான முடிவுகளை உடனடியாக ஒருங்கிணைந்து எடுப்பது, வங்கி மூலதனத்தை சிறப்பாகக் கையாள்வது உள்ளிட்ட இலக்குகளை நோக்கமாகக் கொண்டு வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் ஐந்து துணை வங்கிகள் மற்றும் மகிளா வங்கிகள் இணைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பாங்க் ஆஃப் பரோடாவுடன் விஜயா வங்கி, தேனா வங்கிகள் இணைக்கப்பட்டன. ஹெச்டிஎப்சி வங்கியோடு செஞ்சூரியன் வங்கியும், கோடக் வங்கியோடு ஐஎன்ஜி வைஸ்யா வங்கியும் இணைக்கப்பட்டன. அப்போது சொல்லப்பட்ட இலக்குகள் எட்டப்பட்டதா?

பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகள் இணைக்கப்பட்ட பிறகு அதன் கடன் சுமை அளவு அதிகரித்தது. வாராக் கடன் அளவைக் குறைப்பதற்காக மிகப்பெரும் அளவிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இது ஸ்டேட் வங்கியின் லாபத்தை பெருமளவு பதம் பார்த்தது. மூலதனமும் குறைந்தது, கடன் வழங்கும் அளவும் வெகுவாக சரிந்தது. கடந்த ஆண்டு பேங்க் ஆஃப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கிகள் இணைந்தன. தேனா வங்கியின் நஷ்டம், பாங்க் ஆஃப் பரோடாவின் லாபத்தை பின்னுக்குத் தள்ளியதுதான் மிச்சம்.

ஊழியர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?

வங்கிகள் இணைப்புக்கு ஊழியர் சங்கங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என நிதியமைச்சர் உறுதி அளித்தும் அவர்கள் ஏற்பதாயில்லை. காரணம், வங்கிகளை ஒருங்கிணைப்பதால் ஊழியர் எண்ணிக்கை அதிகப்படியாகத்தான் இருக்கும். இதனால் விருப்ப ஓய்வு (விஆர்எஸ்), வங்கிக் கிளைகளை மூடுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதவையாக மாறலாம்.

அதேசமயம் வங்கிகள் இணைக்கப்படுவதால், புதிய வேலை வாய்ப்புகளுக்கான சூழல் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் தனித்தனியாக இருந்தவரை புதிய பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேவைப்பட்டனர். இப்போது வங்கிகள் இணைக்கப்படும்போது ஏற்கெனவே பணியில் இருப்பவர்களே தொடர்வார்களா என்ற நிலை இருக்கும்போது புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது என்பது குதிரைக் கொம்புதான்.

அதுமட்டுமல்லாமல், இணைப்புக்குப் பிறகு வங்கிகளில் ஒருவிதமான பணிச்சூழலே இருக்கும். வங்கிகள் ஒன்றிணைக்கப்படும்போது, பணியாளர்களின் பணித்திறன் மாறுபடலாம். இதனால் பணியாளர் உற்பத்தி அதிகரிப்பதற்கான வாய்ப்பும் குறையும். மேலும் சிறிய வங்கியில் மூத்த பதவியில் இருக்கும் வங்கி ஊழியர், ஒன்றிணைக்கப்பட்ட பிறகு அதே பதவியில் நீடிப்பாரா என்பதும் சாத்தியமில்லை. இதுபோன்ற பல பிரச்சினைகளை ஊழியர்கள் வங்கிகள் இணைப்புக்குப் பிறகு சந்திக்க நேரிடலாம்.

வாடிக்கையாளர்களின் சிரமம்

வாடிக்கையாளராகிய பொதுமக்களுக்கும் வங்கிகள் இணைக்கப்படுவதால் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. தாய் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பிரச்சினை இருக்காது. ஆனால் இணைக்கப்படும் சிறிய வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களின் வங்கிக் கணக்கு, ஐஎஃப்எஸ்சி கோட் உள்ளிட்டவை மாறும்.

அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற பிரதமரின் கனவு நனவாகியிருந்தாலும், வங்கிச் சேவை குறித்த விஷயங்கள் இன்னும் படிக்காத பாமர மக்களுக்கு கைகூடவில்லை. அப்படியிருக்க அவர்களின் கணக்கு விவரங்கள் மாறும்போது சில சிரமங்களைச் சந்திக்க வேண்டிவரும். கிளைகள் குறைக்கப்படும்பட்சத்தில் வீட்டுக்கு அருகிலேயே வங்கிக் கிளை இருந்த வாடிக்கையாளர்கள் சிலருக்கு அது இல்லாமலும் போகலாம்.

உண்மையான மாற்றம் எது?

பொதுத்துறை வங்கிகளில் என்னென்ன மாற்றம் செய்யப்பட வேண்டும் என மக்களிடம் அரசு கருத்து கணிப்பு நடத்தினால் சரியான பதில் கிடைக்கும். அந்த அளவுக்கு மாற்றங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், வங்கிகளை இணைப்பதால் பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்கள் நிகழும் எனச் சொல்லிக்கொண்டிருக்கிறது அரசு.

இந்திரா காந்தி தனியார் வங்கிகளை தேசிய மயமாக்கக் காரணம் வங்கிகள் மக்களுக்கான சேவையாக இருக்க வேண்டும் என்பதனால், ஆனால் பொதுத் துறை வங்கிகள் எப்படி செயல்பட்டன என்பதை தனியார் வங்கிகளின் ஆதிக்கம் அதிகரித்தபோது மக்கள் உணர்ந்துகொண்டார்கள். அரசு வங்கிகளுக்கும் தனியார் வங்கிகளுக்கும் மிகப் பெரும் வேறுபாடுகள் உண்டு என்று சொல்வார்கள். அதாவது தனியார் வங்கிகளுக்கு லாபம் மட்டுமே குறிக்கோள்.

பொதுத்துறை வங்கிகளுக்கு மக்களின் சேவையும் பிரதானம். ஆனால், பொதுத்துறை வங்கிகளில் மக்களுக்குத் தரப்படும் சேவைகள் எப்படி இருக்கும் என்பது அனுபவித்த வாடிக்கையாளர்களுக்கு நன்றாகவே தெரியும். அலைக்கழிப்புகளுக்கும், அலட்சியங்களுக்கும் பேர் போன பொதுத் துறையின் செயல்பாடுகளில் மாற்றம் வரும்வரை உண்மையான மாற்றத்தை எந்தவொரு நடவடிக்கையாலும் கொண்டுவந்துவிட முடியாது என்பதை அரசு உணர வேண்டும்.

வங்கிகள் ஒன்றிணையும்போது அவற்றின் செயல்திறன் மேம்படும் என்ற வாதம் சரியாக இருக்கும் என்றே தோன்றவில்லை. அதே வங்கிப் பணியாளர்களைக் கொண்டு திறனை எப்படி மேம்படுத்த முடியும்? வங்கிப் பணியாளர்களின் மனோ நிலையில் மாற்றம் வராதவரை, அவர்களது அணுகுமுறையில் மாற்றம் ஏற்படாதவரை இது சாத்தியமேயில்லை.

மொத்தத்தில் சர்வதேச அளவுக்கு இந்திய வங்கிகளை வலுவானவையாக உருவாக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் சரியாக இருந்தாலும். வங்கிகளின் செயல்பாடு, கட்டமைப்பு வசதி இவை எதையும் கருத்தில் கொள்ளாமல் அவசர கதியில் இணைப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை. வெறுமனே கட்டிடங்களை இணைப்பதுபோல வங்கிகளை இணைக்கும் நடவடிக்கையைப் பார்க்க முடியாது.

வங்கிகளின் செயல்பாடுகள் பொதுமக்களும் நாட்டின் பொருளாதாரமும் சார்ந்த விஷயம். இதில் எங்கு தவறு நிகழ்ந்தாலும் அதன் பாதிப்பு பொதுமக்களுக்குத்தான் என்பதே நிதர்சனம். மட்டுமல்லாமல், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டின் ஜிடிபி கடுமையாக குறைந்துள்ள நிலையில், வங்கிகளின் இணைப்பு பொருளாதார வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருக்குமா என்பது சந்தேகமே.

மக்கள் பணம் மக்களுக்கே!

வங்கிகளின் மக்கள் சேவைக் கண்ணோட்டம் இப்போது படிப்படியாக மாறி லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற திசையை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டது. வங்கிகளில் இப்போது அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் என்றாகிவிட்டது. குறைந்தபட்ச சேமிப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய கட்டாயமும் மக்களுக்கு எழுந்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் பொதுத் துறை வங்கிகளில் குறைந்தபட்ச சேமிப்புத் தொகையை பராமரிக்காத காரணத்தால் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு விதித்த அபராதத் தொகை மூலம் வசூலான தொகை மட்டுமே ரூ.10 ஆயிரம் கோடி. விவசாயிகள், வர்த்தகர்களுக்கு ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாத ஓய்வூதியமே ரூ.3 ஆயிரம் என்ற நிலையில் இவர்கள் எப்படி தங்களது சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம் பராமரிக்க முடியும்.

கடந்த பொதுத்தேர்தலின்போது வெளிநாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்தால் ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் கிடைக்கும் என பாஜக அரசு கூறியது. முந்தைய ஆட்சிக்காலமும் முடிந்து, அடுத்த 5 ஆண்டுகளுக்கு மீண்டும் அரியணை ஏறியுள்ளது பாஜக அரசு. ஆனால், மக்களோ ரூ.15 லட்சம் வராவிட்டாலும் பரவாயில்லை.

தங்களின் சேமிப்புத் தொகையை வங்கிகள் அபராதம் என்ற போர்வையில் சுருட்டாமலிருந்தால் போதும் என்று கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது வேதனை தரும் விஷயமாக உள்ளது.

- எம். ரமேஷ்
ramesh.m@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x