

சத்யம் கம்ப்யூட்டர்ஸ், இந்தப் பெயரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல பாகங்களிலும் பரந்து வியாபித்திருந்த இந்த நிறுவனம் அதன் நிறுவனர்களின் தவறான நிதி நிர்வாகத்தால் நொடித்துப் போனது.
மத்திய அரசு தலையிட்டு நிர்வாகத்தை சீரமைத்து அதை மற்றொரு நிறுவனம் ஏற்று நடத்தும் அளவுக்கு கொண்டு வந்தது. நிலைமை சீரடைந்தவுடன் அதை மஹிந்திரா நிறுவனம் வாங்கியது. இப்போது டெக் மஹிந்திரா என்ற பெயரில் சீரும் சிறப்புமாக நடப்பதை நாடே அறியும். தங்களது வேலை காப்பற்றப்பட்டதில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் மட்டுமின்றி அதில் முதலீடு செய்த முதலீட்டாளர்களும் பெருமூச்சு விட்டதையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.
பிரச்சினை அதுவல்ல. தவறு நடந்த நிறுவனத்தில், எப்படி தவறு நடந்தது என்பதை ஆராய்ந்தபோது, நிறுவனத்தின் நிதிநிலையில் பல்வேறு குளறுபடிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நிதி நிர்வாக முறைகேடு காரணமாக நிர்வாகம் சீர் குலைந்தது ஒருபுறம் என்றாலும், நிதியை தணிக்கை செய்த நிறுவனமும் இதற்குப் பொறுப்பு என்பதை யாரும் மறுக்க முடியாது.
அவ்விதம் தணிக்கை செய்த நிறுவனங்கள் இனி பங்குச் சந்தையில் பட்டியலிட்ட நிறுவனங்களை தணிக்கை செய்யக் கூடாது என்று பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி 2 ஆண்டுகளுக்கு தடை விதித்தது. 2009-ம் ஆண்டு நடந்த இந்த விவகாரத்தில் தணிக்கை நிறுவனங்களை கண்டிக்கும் விதமாக 2017-ம் ஆண்டில் 2 ஆண்டு தடையை செபி விதித்தது. தவறு செய்யும் நிறுவனங்கள் அல்லது தவறுக்குத் துணை போகும் நிறுவனங்களுக்கு இதுதான் சரியான பாடம் என்று அப்போது பரவலாக பலராலும் இந்த தடை நடவடிக்கை வரவேற்கப்பட்டது.
ஆனால், குற்றம் சாட்டப்பட்ட பன்னாட்டு தணிக்கை நிறுவனமான பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் (பிடபிள்யூசி) நிறுவனம்
மேல் முறையீட்டு ஆணையத்தில் (எஸ்ஏடி) தடையை எதிர்த்து முறையீடு செய்தது. இதை விசாரித்த ஆணையம், செபி விதித்த
தடை செல்லாது என்று கூறி தடையை விலக்கி விட்டது.
ஆணையத்தின் தீர்ப்பை விமர்சனம் செய்யக் கூடாது என்றாலும், இந்த தீர்ப்பால் செபி-யின் அதிகாரம் கேள்விக்குறியாகியுள்ளதுதான் தற்போதைய பிரச்சினையாகும். பிடபிள்யூசி நிறுவனம் மட்டுமின்றி அதனுடன் இணைந்த 10 துணை நிறுவனங்களுக்கும் விதிக்கப்பட்ட தடை தற்போது விலக்கப்பட்டுவிட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தருண் அகர்வால் மற்றும் சிகேஜி நாயர் ஆகியோர் தங்களது தீர்ப்பில் செபி அமைப்புக்கு விதிகளை மட்டுமே வகுக்க அதிகாரம் உள்ளதாகவும், தணிக்கை நிறுவனங்களுக்கு தடை விதிக்கும் அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இத்தகைய அதிகாரம் ஐசிஐஏ எனப்படும் தணிக்கை கூட்டமைப்புக்குத்தான் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு, விதிகளை மட்டும் வகுக்கும் அதிகாரம் உள்ளது என்றால், இனி எந்த வழக்கிலும் செபி-யால் தவறு செய்யும் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.
ஒழுங்கு முறை அமைப்புகளுக்கு அதிகாரம் உள்ளது என்ற வகையில் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். இல்லையெனில் அதிகாரம் இல்லாத அமைப்பாக செபி போன்ற ஒழுங்குமுறை ஆணையங்களால் எவ்விதப் பயனும் இருக்காது. இந்த வழக்கில் செபி மேல் முறையீடு செய்து அதிகாரம் உள்ளது என்பது நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது.
இல்லையெனில் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்ட அல்லது தண்டனை பெற்ற நிறுவனங்களும் செபி அமைப்பு பல் பிடுங்கப்பட்ட பாம்பு என்று மேலும் தவறுகளை செய்யும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இது நிறுவன செயல்பாடுகள், முதலீட்டாளர்களுக்கு பெரும் பாதகமாகவே அமையும்.