

என்னதான் ஜாவா திரும்பி வந்தாலும், கேடிஎம், பெனல்லி, ஹார்லே போன்ற பிராண்டுகள் போட்டிக்கு வந்தாலும் ராயல் என்ஃபீல்ட் விற்பனையில் தனித்து விளையாடுகிறது.
சந்தையில் தனது பிராண்டை நிலைநிறுத்த தொடர்ந்து ஏதாவது ஒரு அப்டேட்டுடன் வந்துவிடுகிறது. கடந்த மாதம்தான் புல்லட்டில் 350 மற்றும் 350 இஎஸ் என இரண்டு புதிய மாடல்களை வெளியிட்டது. தற்போது புதுவரவாக ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 எஸ் என்ற மாடலை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ஆச்சரியப்படும் வகையில் உள்ளது ரூ. 1.45 லட்சத்துக்கு இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ராயல் என்ஃபீல்ட் வழக்கமாக இரண்டு சேனல் ஏபிஎஸ் என இல்லாமல் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் வருவதால் 350 எஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது ஸ்டேண்டர்டு கிளாசிக் 350 மாடலைக் காட்டிலும் ரூ.9 ஆயிரம் குறைவு. இந்த மாடல் தற்போது தமிழகம் மற்றும் கேரளத்தில் மட்டுமே கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் புதிய மாடல் பியூர் பிளாக் மற்றும் மெர்குரி சில்வர் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். இந்த மாடலில் பெட்ரோல் டேங்கில் உள்ள லோகோ புதிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. 19.8 ஹெச்பி பவர், 28 என் எம் டார்க் இழுவிசையைத் தரக்கூடிய 346சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின்தான்.
ராயல் என்ஃபீல்ட் இதோடு நிற்கவில்லை, அடுத்த தலைமுறை கிளாசிக் மாடலை விரைவில் அறிமுகப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக உள்ளது.