

வர்த்தக வாகனங்களில் டெய்ம்லரின் தயாரிப்புகளுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. டெய்ம்லர் வர்த்தக வாகனங்கள் நிறுவனத்தின் டிரக்குகளும், பேருந்துகளும் மற்ற பிராண்டுகளிலிருந்து வடிவமைப்பிலும், செயல்திறனிலும் வித்தியாசப்படுவதே அதற்கு காரணம்.
அதனாலேயே பெரும்பாலான பெரு நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களை அலுவலகத்துக்கு அழைத்துவரப் பயன்படுத்தும் பேருந்துகள் டெய்ம்லரின் பாரத் பென்சாக உள்ளன. டிரக்குகளும் அதனதன் தேவைகளுக்கு ஏற்ப பிரத்யேக வடிவமைப்பும், வசதிகளும் இருக்கும் வகையில் உருவாக்கப்படும் என்பதால் டிரக்குகள் விற்பனையிலும் டெய்ம்லர் குறிப்பிடத்தக்க சந்தையைத் தக்கவைத்துள்ளது.
தற்போது பிஎஸ் 6 தரத்தில் டெய்ம்லர் தனது டிரக்குகளையும், பேருந்துகளையும் உருவாக்கி உள்ளது. விரைவில் அவற்றை சந்தையில் அறிமுகப்படுத்தவும் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தியாவை பிஎஸ் 6 வாகனங்களுக்கான ஏற்றுமதி மையமாக உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.
பிஎஸ் 6 தரத்திலான வாகனங்களை உருவாக்க கூடுதலாக ரூ.500 கோடி முதலீடு செய்துள்ளது. இதன் பிஎஸ் 6 தரம், ஐரோப்பிய நாடுகளில் உள்ள யூரோ 6 தரத்துக்கு சமமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்துள்ள ஏப்ரல் 2020-க்குள் பிஎஸ் 6 தர வாகனங்கள் அறிமுகப்படுத்த தயாராக உள்ளதாகவும் டெய்ம்லர் தெரிவித்துள்ளது.
வர்த்தக வாகனங்கள் துறையில் டெய்ம்லரின் பிஎஸ் 6 தர வாகனங்களுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.