செய்திப்பிரிவு

Published : 09 Sep 2019 11:05 am

Updated : : 09 Sep 2019 12:20 pm

 

குறையும் வட்டி: கடன் வாங்குவோர் கவனிக்க வேண்டியவை என்ன?

reduced-interest

ராதிகா மெர்வின் radhika.merwin@thehindu.co.in

கடந்த புதன்கிழமை ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அக்டோபர் 1 முதல் பொதுவான அளவுகோளின்படி நிர்ணயிக்க உத்தரவிட்டது. எனவே, வரும் மாதத்திலிருந்து வீட்டுக்கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன் ஆகியவற்றின் வட்டி விகிதம் குறைய உள்ளது. அதாவது வங்கிகள் ரெப்போ விகிதம், மூன்று மாத அல்லது ஆறு மாத ட்ரெஷரி பில் வருமானத்தின் அடிப்படையில் வட்டி விகிதத்தை நிர்ணயிக்க வேண்டும். இதனால் வட்டி விகிதங்கள் குறையும்.

வட்டி விகிதம் குறைவு ஒரு பக்கம் மகிழ்ச்சியான செய்தி என்றாலும், கடன் வாங்குவோர் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. புதிய வீடு அல்லது கார் கடன் மாறும் வட்டிவிகிதத்தில் வாங்குகிறீர்கள் எனில், வங்கிகள் ஒரு குறிப்பிட்ட அளவுகோளின்படிதான் உங்களுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயித்திருக்கும். தற்போதுவரை வங்கிகள் தங்களின் வைப்பு மற்றும் கடன் ஆகியவற்றின் செலவு எவ்வளவு என்பதன் அடிப்படையில்தான் வட்டிவிகிதத்தை நிர்ணயித்து வருகின்றன.

அதாவது தற்போது எம்சிஎல்ஆர் அடிப்படையில் வங்கிகள் வட்டி விகிதத்தை நிர்ணயிக்கின்றன. இந்த எம்சிஎல்ஆர் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். அதனால் வட்டிவிகிதமும் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடுகிறது. இதனால் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைத்தாலோ, உயர்த்தினாலோ, வங்கிகளின் எம்சிஎல்ஆர் விகிதமும் அதற்கேற்ப மாறும். ஆனால், வங்கிகள் ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தில் வைத்துள்ள வைப்பு அளவானது குறைந்த அளவிலான பங்களிப்பை கொண்டிருப்பதால், வங்கிகளின் எம்சிஎல்ஆர் விகிதத்தில் குறைவான மாற்றங்களே இருந்துவருகிறது. இதனால் ரெப்போ வட்டி விகித மாற்றத்தின் பலன் மக்
களுக்குக் கிடைப்பது மிக மிகக் குறைவாகவே இருந்தது.

இந்நிலையில்தான் ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளும் பொதுவான ஒரு அளவுகோளின்படி வட்டி விகிதத்தை நிர்ணயிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் ரெப்போ விகிதத்தில் ஏற்படும் மாற்றம் வங்கிகளின் வட்டிவிகிதத்திலும் கணிசமாகப் பிரதிபலிக்கும். உதாரணத்துக்கு எஸ்பிஐ ரெப்போ விகிதத்தின் அடிப்படையில் தனது வீட்டுக்கடன் திட்டத்தை ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தியது. அதன் வட்டிவிகிதம் ரெப்போ விகிதத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் ஒவ்வொரு முறை ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மாற்றி யமைக்கும்போது அதற்கேற்ப கடன்களுக்கான வட்டிவிகிதமும் மாறும். சமீபத்தில் ரிசர்வ் வங்கி 35 அடிப்படை புள்ளிகளைக் குறைத்ததால் எஸ்பிஐ வட்டி விகிதத்தை 8 சதவீதத்திலிருந்து 7.65 சதவீதமாகக் குறைத்தது. இதனால் ரூ. 75 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்கள் 8.05 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தில் கிடைக்கின்றன. வீட்டுக்கடன்கள் அதிகபட்சமாக 8.65 சதவீதத்தில் கிடைக்கின்றன. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தினால் கடனுக்கான வட்டியும் உயரும் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஆரம்பநிலை வட்டி மற்றும் ஸ்பிரெட் புள்ளிகள்

ரெப்போ விகிதத்தின்படி நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதம், தற்போதைய எம்சிஎல்ஆர் அடிப்படையிலான வட்டி விகிதத்தை விட குறைவாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். இதில் இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஒன்று, பொதுவான அளவுகோளின்படி வங்கிகள் தங்களின் வட்டி விகிதத்தை நிர்ணயித்தாலும், ஆரம்பநிலை வட்டிவிகிதம் வங்கிகளுக்கு வங்கி மாறுபடலாம். உதாரணத்துக்கு எஸ்பிஐ, ஐடிபிஐ இரண்டு வங்கிகளை எடுத்துக்கொள்ளலாம். இரண்டு வங்கிகளும் தங்களின் வீட்டுக் கடன் வட்டிவிகிதங்களை ரெப்போ விகிதத்தின்படி நிர்ணயித்துள்ளன. ஆனால், அவற்றின்
ஆரம்பநிலை வட்டிவிகிதங்கள் வித்தியாசப்படுகின்றன.

எஸ்பிஐ வங்கி 7.65 சதவீதத்திலும், ஐடிபிஐ வங்கி 8.3 சதவீதத்திலும் நிர்ணயித்துள்ளன. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தினாலோ, குறைத்தாலோ அந்தந்த வங்கிகளுக்கு ஏற்பவே வட்டிவிகித மாற்றங்கள் இருக்கும். இந்த ஆரம்ப நிலை வட்டிவிகிதம் வித்தியாசப்படுவதால் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் வட்டி
விகிதத்திலும் மாற்றங்கள் இருக்கும். எனவே கடன் வாங்குவோர் வங்கிகளின் வட்டிவிகிதங்களை ஒப்பிட்டுப் பார்த்து தேர்ந்தெடுக்கலாம்.

இரண்டாவது, வங்கிகள் பொதுவான அளவு கோளின்படி வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும்போது கடன் வாங்குவோரின் கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் ஸ்பிரெட் அல்லது மார்க்-அப் புள்ளிகளை வரையறுக்கும். இதனால், வட்டி விகிதத்தில் வித்தியாசங்கள் ஏற்படும். எஸ்பிஐ தனது ஸ்பிரெட் புள்ளிகளை 40 அடிப்படை புள்ளிகளாக வரையறுத்துள்ளது எனில், ஐடிபிஐ இதைவிட அதிகமான புள்ளிகளை வரையறுத்திருந்தால் இரண்டுக்குமான வட்டிவிகிதத்தில் வேறுபாடுகள் இருக்கும். இதிலும் எஸ்பிஐ வங்கியின் வட்டிவிகிதம் குறைவாக இருக்கும்.

ஆனாலும், கடன் வாங்குவோர் ஸ்பிரெட் அல்லது மார்க்-அப் புள்ளிகளைக் குறித்தும் கவனிக்க வேண்டும்.ரிசர்வ் வங்கி கடன் வாங்குவோரின் கிரெடிட் ஸ்கோர் மதிப்பீட்டில் மாற்றங்கள் இருந்தால் தவிர வங்கிகள் தங்களின் ஸ்பிரெட் புள்ளிகளை மாற்றக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. ஆனால், கடந்த காலங்களில் வங்கிகள் ஸ்பிரெட் புள்ளிகளில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. எனவே கடன் வாங்குவோர் கவனிப்பது அவசியம்.

மாற்றங்களுக்கான விதிகள்

எம்சிஎல்ஆர் அடிப்படையிலான வட்டி நிர்ணய முறையில் மாற்றங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிகழ்த்தப்படும். உதாரணத்துக்கு, ஒரு வருட எம்சிஎல்ஆர் அடிப்படையில் வட்டி நிர்ணயிக்கப்பட்டால், வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மாற்றியமைக்கப்படும். ஆனால், பொது அளவுகோளின்படி வட்டி நிர்ணயம் செய்யும் முறையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி விகிதங்களை மாற்றியமைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் மாத தவணையிலும் மாற்றங்கள் இருக்கும்.

வழக்கமான வீட்டுக் கடனை அதாவது எம்சிஎல்ஆர் அடிப்படையிலான வட்டி விகிதத்தில் உங்களுடைய மாத தவணை நிலையாக இருக்கும். ஏனெனில் வங்கிகள் மாத தவணையில் மாற்றங்கள் செய்யாமல், கடனை திரும்பச் செலுத்தும் கால அளவில் மாற்றங்களைச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. நீங்கள் கோரிக்கை செய்தால் மட்டுமே அதற்கேற்ப மாற்றங்கள் செய்யப்படும்.

ஆனால் ரெப்போ விகிதத்தின் அடிப்படையிலான வட்டி விகித முறையில் குறைந்தபட்சம் 3 சதவீத அசல் தொகை ஒவ்வொரு ஆண்டும் திருப்பிச் செலுத்தப்படும் வகையில் மாத தவணை திட்டமிடப்படும். ஒவ்வொரு மாதத்துக்கான வட்டியும் கணக்கிடப் பட்டு வசூலிக்கப்படும். எனவே ஒவ்வொரு மாதமும் உங்களுடைய மாத தவணை மாறும். இப்போதுவரை பிற வங்கிகள் எப்படி தங்களின் வட்டி விகிதங்களை பொது அளவுகோளின்படி நிர்ணயிக்க இருக்கின்றன என்பது தெளிவாக தெரியவில்லை.

கடன் மாற்றம்

எம்சிஎல்ஆர் அடிப்படையிலான வட்டி விகிதத்தில் கடன் வாங்கியவர்கள் தங்களின் கடனை பொது அளவுகோளின்படியான வட்டி விகிதங்களுக்கு எந்த வித கட்டணமும் இல்லாமல் மாற்றிக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. எம்சிஎல்ஆர் முறையைக் காட்டிலும் புதிய முறையில் வட்டி குறைவு என்பதால் அதே வங்கியிலேயே மாற்றிக்கொள்ளலாம். ஆனால், அதில் ஏதேனும் மறைமுக கட்டணம் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். சட்ட ரீதியிலான/நிர்வாக ரீதியிலான கட்டணங்களை வசூலிக்க ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்துள்ளது. மேலும் புதிதாகக் கடன் வாங்குவோருக்கு நிணயிக்கப் படும் வட்டி விகிதத்திலேயே உங்களுடைய கடனுக்கான வட்டி விகிதமும் உள்ளதா என்பதையும் பாருங்கள்.

உங்களுடைய கடன் முடியும் தருவாயில் இருந்தால் மாற்றம் செய்வது அர்த்தமற்றதாகும். உங்களுடைய மாத தவணையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பதைப் பற்றி பெரிதாகக் கவலை இல்லையெனில், வட்டி விகித மாற்றம் என்பது பலனுள்ளதாக இருந்தால் மட்டும் புதிய முறைக்கு மாற்றுவது குறித்து யோசிக்கலாம்.
மேலும் ஒரே வங்கிக்குள் மாற்றம் செய்தால் கட்டணங்கள் ஏதும் இல்லை. வேறு வங்கிக்கு மாற்றினால் குறிப்பிட்ட கட்டணங்கள்
உண்டு.

வீட்டுக் கடன்கவனம்குறையும் வட்டிபுதிய வீடுரிசர்வ் வங்கிரெப்போ விகிதம்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author