Published : 09 Sep 2019 10:39 am

Updated : 09 Sep 2019 10:39 am

 

Published : 09 Sep 2019 10:39 AM
Last Updated : 09 Sep 2019 10:39 AM

எண்ணித் துணிக: வெற்றிக்குப் பிரதான வழி?

success

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com

ஸ்டார்ட் அப் ஐடியா கிடைத்த கையோடு படத்துக்கு பூஜை போட்டு ஷூட்டிங் ஆரம்பித்துவிடக் கூடாது என்பதை சென்ற வாரம் பார்த்தோம். உங்கள் ஐடியாவுக்கு திரைக்கதை வசனம் எழுதி கடைசி பக்கத்தில் ‘சுபம்’ போட்டு
விட்டுத்தான் லொகேஷனை தேட வேண்டும். திட்டமிட்டு செயல்படாததால்தான் நம்மூர் படங்கள் பல திரைக்கு வரவே
திண்டாடி, தப்பித் தவறி ரீலீஸ் ஆனாலும் போட்ட பணத்தை எடுக்கப் போராடி கடைசியில் இரண்டே வாரத்தில் இந்தியத் தொலைக்காட்சியில் முதல் முறையாக டீவியில் ஒளிபரப்பாகிவிடுகின்றன!

ஹாலிவுட் படங்களிலும் சில குப்பை என்றாலும் திட்டமிடாமல் அவர்கள் `ரோல் கேமரா, ஆக்ஷன்’ சொல்வதில்லை. ஒரு முறை ஹாலிவுட் இயக்குனர் `ஸ்டீவன் ஸ்பீல்பர்க்’கிடம் ஒருவர் `உங்கள் அடுத்த படம் எத்தனை தூரத்தில் இருக்கிறது’ என்று கேட்க ஸ்பீல்பர்க் `தொன்னூறு சதவீத வேலை ஓவர், ஷூட்டிங் மட்டும்தான் பாக்கி’ என்றாராம். சினிமா முதல் ஸ்டார்ட் அப் வரை வெற்றிக்குப் பிரதான வழி திட்டமிட்டு செயல்படுவது. ஸ்டார்ட் அப்புக்கு தேவையான தொன்னூறு சதவிகித திட்டமிடும் பணிதான் பிசினஸ் மாடல் கேன்வாஸ். ஒன்பது அம்சங்கள் கொண்ட நவக்ரஹத்தின் ஒவ்வொரு முகத்தையும் முழுவதுமாய் இன்று தரிசிப்போம்.

வாடிக்கையாளர் பிரிவுகள்

தொழிலுக்கு ஆதாரம் அதன் வாடிக்கையாளர்கள். அதன் வளர்ச்சிக்கு ஆகாரமும் அவரே. மக்கள் அனைவருமே வாடிக்கையாளர்கள் என்றாலும் உங்கள் பொருள் யாருடைய தேவையை பூர்த்தி செய்கிறது என்பதை பார்த்து அவர்களை வகைப்படுத்தி உங்களின் சரியான வாடிக்கையாளர் யார் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அவர் தேவை தெளிவாய் தெரிந்தால்தான் அத்தேவையை பூர்த்தி செய்ய நீங்கள் அளிக்க வேண்டிய பயன் என்ன என்று புரிந்துகொள்ளமுடியும்.

உங்கள் வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்ய நீங்கள் தரும் பயன்களின் கலவைக்கு மார்க்கெட்டிங்கில் வேல்யூ பிராபோசிஷன் என்று அழைப்பார்கள். நீங்கள் அளிக்கும் பயன் அவர் கஷ்டத்தை போக்குவதாய் இருக்கலாம். அவர் உணர்வுக்கு ஊக்கம் அளிப்பதாய் இருக்கலாம். எது உண்டோ இல்லையோ உங்கள் வாடிக்கையாளருக்கு நீங்கள் அளிக்கும் பயன் வேறு யாரும் அளிக்கா ததாய் இருக்க வேண்டும். அப்பொழுது தான் உங்கள் பொருள் வித்தியாசமாய் தெரியும். வாடிக்கையாளரை கவரும்.

விநியோக முறை

உங்கள் பொருளை வாடிக்கையாளர் உங்கள் தொழிற்சாலைக்கே வந்து வாங்கிக்கொண்டால் சவுகரியம்தான். ஆனால், அதை எதிர்பார்ப்பது கொஞ்சம் ஓவர் என்பதால் அவர்களுக்குப் பொருளை எப்படி கொண்டு சேர்ப்பது, எப்பேர்பட்ட விநியோக முறை உசிதம், எவ்வழியில் கொண்டு சேர்ப்பது எளிதானது, மலிவானது என்பதை அலசி ஆராய்ந்து புதுமையான விநியோக முறையை முடிவு செய்ய வேண்டும்.

தொழில் துவங்கியிருக்கிறீர்களாமே, வாங்கலாம் என்று வந்தேன் என்று யாரும் உங்களைத் தேடி வரப்போவ
தில்லை. அவர்களை தேடிப் பிடித்து, மயக்கி, பொருளை வாங்க வைக்கும் வழிகளை நிர்ணயிக்க வேண்டும். வாங்க
வைத்தால் மட்டும் பத்தாது அவர்களை உங்களோடு தக்கவைக்கும் முறைகளை
யும் உங்களிடமிருந்து மேலும் பொருட்களை வாங்கச் செய்யும் சூட்சமங்களையும் நிர்ணயிக்க வேண்டும்.

வருவாய்க்கான வழிகள்

வருவாய்க்கு வழிவகுக்கும் பிசினஸ் மாடல் பற்றி சில வாரங்களுக்கு முன் நாம் இங்கு பேசியது உங்களுக்கு நினைவிருக்கும். வாடிக்கையாளருக்கு எதை, எப்படி விற்று அவரிடமிருந்து எப்படி, எப்பொழுது பணம் பெறத் திட்டம்,
வருவாய்க்கு வேறென்ன வழிகள் போன்ற கேள்விகளுக்கான விடைதான் பிசினஸ் மாடல். அதோடு உங்கள் பொருளுக்கு என்ன உத்தி கொண்டு விலையை நிர்ணயிக்கப் போகிறீர்கள் என்பதையும் தீர்மானிக்க வேண்டும்.
வாடிக்கையாளர்களுக்கு தர முடிவு செய்த பயன்களை எப்படித் தருவதாய் உத்தேசம் என்பதை விளக்கும் பிரிவு இது. என்னென்ன வளங்களை உபயோகிப்பது, எப்பொழுது, எதை, எவ்வாறு பிரயோகிப்பது, எப்படி விநி
யோகிப்பது போன்ற அனைத்து முக்கிய நடவடிக்கைகளையும் பட்டியலிட்டு அதை பிரயோகிக்கும் வழிகளையும் முடிவு செய்ய வேண்டும்.

தேவையான வளங்கள்

ஸ்டார்ட் அப் தொடங்க சில வளங்கள் தேவை. பணம் போட மாமனார் ரெடியாய் இருக்கிறார் என்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அத்தகைய கொடுப்பினை இல்லாதவர்களுக்கு பணத்தோடு சேர்ந்து நான்கு வித வளங்கள் தேவைப்படலாம். பொருள்தயாரிக்கத் தேவையான தொழிற்சாலை முதல் விநியோகம் செய்யத் தேவை
யான லாரிகள் வரை, தேவையான பணியாட்கள் முதல் அவர்களுக்குத் தேவையான திறன்கள் வரை பட்டிய
லிட்டு அதை பிரயோகிக்கத் தேவையான திட்டத்தையும் தீட்டவேண்டும்.

பணம் போட்டு உங்களோடு பக்கத்து சேரில் உட்காரும் பார்ட்னர்களை சொல்லவில்லை. நீங்கள் முடிவு
செய்திருக்கும் முக்கிய நடவடிக் கைகளை, தரவேண்டிய பயன்களை தரத் தேவையான சப்ளையர்கள் போன்ற வெளிப்புற பார்ட்னர்கள் இவர்கள். உங்கள் ஒருவரால் மட்டுமே வாடிக்கை
யாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத போது உங்களுக்கு உதவக்கூடியவர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

செலவு கட்டமைப்பு

உங்கள் தொழிலை நடத்த, நிர்வகிக்க தேவையான செலவுகளை ஒன்று விடாமல் முடிவு செய்யும் பகுதி இது. இவைகளையும் ஏற்கெனவே பிசினஸ் பிளான் எழுதும் போதே நீங்கள் முடிவு செய்துவைத்திருப்பீர்கள். உங்கள் தொழிலுக்கான சில்லறை செலவுகள் முதல் சீரியஸ் முதலீடு வரை கணக்கெடுத்து குறித்துக்கொள்ள வேண்டும். மேலோட்டமாகத்தான் கேன் வாஸ் எழுதும் முறை பற்றி இங்கு பேசியிருக்கிறோம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஸ்டார்ட் அப்புக்கு ஐடியா கிடைத்த மாத்திரம் தொழில் தொடங்க ஓடாதீர்கள் என்று எச்சரிக்கவே இந்த பிசினஸ் மாடல் கேன்வாஸ் பற்றிய அறிமுகம். அடுத்த வாரம் இன்னும் கூட கொஞ்சம் இதைப் பற்றி பேசுவோம்.


எண்ணித் துணிகவெற்றிபிரதான வழிவாடிக்கையாளர் பிரிவுகள்விநியோக முறைவளங்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author