செய்திப்பிரிவு

Published : 09 Sep 2019 09:56 am

Updated : : 09 Sep 2019 09:57 am

 

விமானத்துக்கு சவால் விடும் புகாட்டி சிரோன்

bugatti-chiron

விண்வெளி வீரரை விண்வெளிக்கு வழி அனுப்பி வைப்பதுபோல் சாதனைக் கனவுடனும், பதட்டத்துடனும், அந்தக் குழு அவரை வழி அனுப்பி வைக்கிறது. அவர் அந்தக் காரில் அமர்கிறார். குழு நிசப்தம் கொள்கிறது. விநாடிகள் எண்ணப்படுகின்றன. த்ரீ... டூ... ஒன்... ஸ்டார்ட்! கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களது பார்வையில் இருந்து மறைகிறது அந்தக் கார். இருமருங்கிலும் மரங்கள் அடர்ந்து காணப்படும் அந்தச் சாலையின் நடுவே அந்த கார் சீறிச் செல்கிறது. அதன் மறு எல்லையில் குழுவினர் எதிர்பார்ப்புடனும், பதட்டத்துடனும் காத்திருக்கின்றனர்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதன் வருகையும் காணப்படவில்லை. சரியாக ஒரு மணி நேரம் கழிகிறது. குழுவினர்
கள் இடையே உற்சாக கூச்சல். அந்தக் கார் எல்லையை அடைகிறது. குழுவினர் சாதனை! சாதனை! என ஆர்ப்பரிக்கின்றனர். ஆம், அது சாதனைதான். விமானத்தின் வேகத்தில் பாதியை தரையில் சாத்தியப்படுத்தி இருக்கிறது அந்தக் கார். ஒரு மணி நேரத்தில் 490 கிலோ மீட்டர். கிட்டத்தட்ட சென்னைக்கும் கோவைக்கும் இடையிலான தூரம், ஒரு மணி நேரத்தில் கடக்கப்பட்டு இருக்கிறது.

இந்தப் புதிய சாதனையை நிகழ்த்தி இருப்பது அனைவருக்கும் நன்கு தெரிந்த நிறுவனமான புகாட்டி. அதன் ‘புகாட்டி சிரோன்’ என்ற மாடலே இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. வாகன உலகில் புகாட்டியின் இடம் தனித்துவமானது. வடிவைமைப்பு, வேகம், விலை என அனைத்திலும் தனக்கான இடத்தை தானே உருவாக்கி இருக்கிறது. தற்போது அந்நிறுவனத்தின் சாதனைப் பட்டியலில் மேலும் ஒரு எண்ணிக்கை கூடி இருக்கிறது.
2016-ம் ஆண்டு புகாட்டி நிறுவனம் சிரோன் என்ற அதிக வேக காரை அறிமுகம் செய்தது. அதன் வேகம் அப்போது புழக்கத்தில் இருந்த மற்ற கார்களை விட அதிகம்.

அதாவது, அது 2.3 நிமிடத்தில் 96 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இந்நிலையில் புகாட்டி நிறுவனம் யாரும் இதுவரை தொட்டிராத புதிய சாதனையை படைக்க திட்டமிடுகிறது. அதற்கேற்ற வகையில் சிரான் காரின் வடிவமைப்பை மாற்ற முடிவெடுக்கப்படுகிறது. இத்தாலியைச் சேர்ந்த புகழ்பெற்ற வாகன உதிரி பாக தயாரிப்பு நிறுவனமான டல்லாரா மற்றும் டயர் தயாரிப்பு நிறுவனமான மிச்சலின் ஆகிய இருநிறுவனங்களுடனும் கலந்தாலோசனையில் ஈடுபடுகிறது புகாட்டி. முந்தைய சிரோனில் இருந்த பின்புற விங்க், ஏர் பிரேக் போன்றவை நீக்கப்படுகின்றன. இதன் மூலம் சிரோனின் இழுவிசை அதிகரிக்கப்படுகிறது.

இதற்கென்று பிரத்யேகமான டயர்கள் உருவாக்கப்படுகின்றன. 500 கிலோ மீட்டர் வேகத்திலும் வெடித்து விடாத அளவுக்கு இதற்கான டயர்கள் தயார்செய்யப்பட்டன. இதன் சக்கரங்கள் ஒரு நிமிடத்துக்கு 4,100 முறை சுழலும். அப்படியென்றால் அதன் வேகத்தை ஊகித்துக் கொள்ளுங்கள். ஆறு மாத தொடர் உழைப்புக்குப் பிறகு உருவாகியது, புதிய சிரோன். 7,933 சிசி திறனில், 16 சிலிண்டர்களைக் கொண்டிருக்கும் இதன் இன்ஜின் 1,578 ஹெச்பி பவரை உற்பத்தி செய்யக் கூடியது. அதேபோல், ஏழு கியர்களைக் கொண்டிருக்கும்.

இந்தச் சாதனைக்கான நிகழ்வு ஜெர்மனியில் உள்ள எஹ்ரா லெஷியன் என்ற சோதனை ஓட்டக் களத்தில் ஆகஸ்ட் 2 அன்று நடத்தப்பட்டது. பந்தயக் கார் வீரர் ஆன்டி வால்ஸ் இந்த சோதனை ஓட்டத்தை நிகழ்த்தி உள்ளார். அதன்படி அவர் புகாட்டி சிரோன் மூலம் 490 கிலோ மீட்டரை 1 மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார். கடந்த 2017-ம்
ஆண்டு கோனிசெக் அகெரா ஆர்எஸ் என்ற கார் 447 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு புதிய சாதனையை உருவாக்கி இருந்தது.

அந்த சாதனையைத் தற்போது புகாட்டி சிரோன் முறியடித்துள்ளது. இந்தப் புதிய புகாட்டி சிரோன் விற்பனைக்காக உருவாக்கப்பட்டது அல்ல. அதிக வேக சாதனையை நிகழ்த்துவதற்கென்றே பழைய புகார்டி சிரோன் மறுவடிமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. இதன் தயாரிப்பு விலை கிட்டத்தட்ட ரூ.20 கோடி ஆகும்.

விமானம்புகாட்டி சிரோன்விண்வெளி வீரர்சாதனைக் கனவுடயர்கள்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author