Published : 02 Sep 2019 10:42 AM
Last Updated : 02 Sep 2019 10:42 AM

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200: சாகச பயணங்களுக்கு சரியான பைக்

இருசக்கர வாகனங்களில் இன்று எத்தனையோ விதமான மாடல்கள், பலவிதமான அம்சங்களுடன் பல பிராண்டுகளில் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. குறைந்த தூர பயணம், தினசரி பயணம், நெடுந்தூர பயணம், சாகசப் பயணம் என ஒவ்வொரு தேவைக்கும் விதவிதமான பைக்குகள். அதில் சமீபத்திய வரவான ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 சாகசப் பயணங்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது.

இம்பல்ஸ் 150 பைக்குக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே ஹீரோ நிறுவனம் எக்ஸ்பல்ஸ் 200 என்ற மாடலை அறிமுகப்படுத்தியது. கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்பல்ஸ் தற்போது ஷோரூம்களில் விற்பனைக்கு இருக்கும் நிலையில், தனது வாடிக்கையாளர்களுக்கு சாகசப் பயணத்தின் அனுபவத்தைத் தருவதற்காக எக்ஸ் ட்ராக்ஸ் என்ற ஆஃப் ரோட் டிரைவிங் நிகழ்வை ஹீரோ நிறுவனம் நடத்தியது. எக்ஸ்பல்ஸ் எந்த அளவுக்கு ஆஃப் ரோடில் தாக்குப் பிடிக்கிறது, அதன் செயல் திறன் எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் நேரடியாக அனுபவித்து தெரிந்துகொள்ள முடிந்தது.

விலை குறைவான ஆஃப் ரோட் பைக் என்ற பெருமையை ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன்தான் இதுவரை வைத்திருந்தது. அந்த இடத்தை தற்போது எக்ஸ்பல்ஸ் தட்டி பறிக்கிறது. ஹிமாலயனை விட ரூ.75 ஆயிரம் விலை குறைவு. எக்ஸ்பல்ஸ் ஹிமாலயனை முன்வைத்தே உருவாக்கப்பட்டிருக்கிறது என்றுகூட சொல்லலாம். அளவுகளில் கிட்டதட்ட எந்த மாற்றமும் இல்லை. தோற்றத்திலும் செயல்திறனிலும்தான் இரண்டும் வித்தியாசப்படுகின்றன. முன்பக்க சக்கரம் பின்பக்க சக்கரத்தைவிட அளவில் பெரிதாக இருந்தாலும் அது எந்த வகையிலும் வாகனத்தின் அமைப்பையும் தன்மையையும் பாதிக்கவில்லை.

எக்ஸ்பல்ஸ் வடிவமைப்பைப் பொருத்தவரை ஆஃப்ரோட் பைக் தான் என்றாலும், டிசைனிலும் கணிசமான மெனக்கெடல் தெரிகிறது. ஆஃப்ரோட் பைக் என்றாலும்கூட இது கிட்டத்தட்ட ஸ்டைலிலும் மிக நன்றாகவே இருக்கிறது. இருக்கையின் உயரம், ஹேண்டில்பார் உயரம் மற்றும் அகலம் என அனைத்தும் எந்த உயரமும், எத்தகைய உருவமும் கொண்டவருக்கும் எளிதான ஓட்டும் அனுபவத்தைத் தரும் வகையில் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக இதில் எல்இடி ஹெட்லைட்டை வழங்கியுள்ளது ஹீரோ நிறுவனம். அதேபோல் புளூடூத் அல்லது மொபைல் ஆப் மூலம் மொபைலுடன் இணைத்துக்கொண்டால் நேவிகேஷன் வசதியும் இதில் எளிதில் கிடைக்கிறது.

அதுமட்டுமல்லாமல் இதில் எல்லாவிதமான சாலைகளுக்கும் ஏற்ற வகையிலான சியட் நிறுவனத்தின் டூயல் ஸ்போர்ட் டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சேறு, சகதி மற்றும் மணல் என அனைத்திலும் டயர்கள் மிக நன்றாகவே தாக்குப்பிடிக்கின்றன. நல்ல கிரிப்புடன் இருப்பதால் பெரிதாக வழுக்கிச் செல்வதோ, சறுக்குவதோ இல்லை. இதனால் புதிதாக ஆஃப்ரோட் பைக் ஓட்டுபவர்கள் கூட பயமில்லாமல் துணிந்து ஓட்டுவதற்கான தைரியத்தைத் தருவதாக இதன் செயல்திறன் இருக்கிறது. முன்பக்க சக்கரம் 21 அங்குலமும், பின்பக்க சக்கரம் 18 அங்குலமும் உள்ளன. பைக்கின் இருக்கை உயரம் 823 மிமீ என்ற அளவில் உள்ளது. இதனால் ஓட்டுபவர்களின் உயரம் ஒரு குறையாக இல்லை. அதேபோல் கிரவுண்ட் கிளியரன்ஸும் நன்றாகவே உள்ளது.

பாதுகாப்பைப் பொருத்தவரை இதில் முன்பக்கத்தில் 276 மிமீ பெடல் டிஸ்க் பிரேக்கும், 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் மட்டும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதி தரப்பட்டுள்ளது.

ஆஃப் ரோட் டிரைவிங்கை பொருத்தவரை மிக முக்கியமான தேவையான அம்சம் சஸ்பென்ஷன். ஆஃப்ரோட் சாகசப் பயணங்களில் அதிகபட்ச அழுத்தங்களை உடலின் பல பாகங்கள் உணர வேண்டியிருக்கும். முதுகு, தண்டுவடம், கழுத்து மற்றும் இடுப்பு உள்ளிட்ட இடங்களில் அதிகபட்ச அழுத்தங்கள் உண்டாகும். எக்ஸ்பல்ஸில் சஸ்பென்ஷன் சிறப்பாக உள்ளதால் பெரிய அளவில் வலியோ, அசதியோ இல்லை. முன்பக்கத்தில் 190 மிமீ சஸ்பென்ஷனும், பின்பக்கம் 170 மிமீ மோனோஷாக் சஸ்பென்ஷனும் சிறப்பாக செயலாற்றுகின்றன.

ஹீரோ எக்ஸ்ட்ரீமில் இருக்கும் அதே இன்ஜின்தான் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 199.6 சிசி திறன் கொண்ட இந்த இன்ஜின் அதிகபட்சமாக 17.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையுடன் 8000 ஆர்பிஎம்மில் 18 பிஹெச்பி சக்தியை வெளிப்படுத்துகிறது. வாகனமும் தேவையில்லாமல் அதிக சத்தத்தை எழுப்பவில்லை.

எக்ஸ்பல்ஸ் முழுக்க முழுக்க டிஜிட்டல் கிளஸ்டரைக் கொண்டுள்ளது. 80-85 கி.மீ. வேகம் வரை ஹீரோ எக்ஸ்பல்ஸ் பிரமாதமாக இருக்கிறது. அதற்கும்மேல் வேகத்தைக் கூட்டினால்தான் சத்தமும் அதிர்வும் அதிகமாக இருக்கின்றன. வண்டியும் திணறுகிறது. ஆன் ரோடில் 110 கிமீ வேகத்தில் செல்ல முடியும்.

உச்சகட்ட செயல்திறனில் ஹிமாலயனோடு போட்டிபோட முடியாது என்றாலும் விலை குறைவான அட்வென்ச்சர் பைக் என்ற வகையில் எக்ஸ்பல்ஸ் தனித்துவம் பெறுகிறது. மொத்தத்தில் சாகசப் பயணங்களை விரும்புபவர்களுக்கு சரியான பைக்காக ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x