Published : 02 Sep 2019 10:39 am

Updated : 02 Sep 2019 10:39 am

 

Published : 02 Sep 2019 10:39 AM
Last Updated : 02 Sep 2019 10:39 AM

எண்ணித் துணிக: பிசினஸ் மாடல் கேன்வாஸ் தயாரா?

business-model-canvas
ஓவியம்: முத்து

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com

ஸ்டார்ட் அப் தொடங்க ஐடியாவை முடிவு செய்துவிட்டீர்கள். வாடிக்கையாளரின் ஏதோ ஒரு தேவையை தெளி வாய் புரிந்து சரியாய் தீர்த்து பயன் தரும் சூட்சமத்தை நிர்ணயித்து விட்டீர்கள். அந்தப் பயனை போட்டி யாளர் யாரும் தராமல் இருப்பதை உறுதிசெய்துவிட்டீர்கள். புதிய பொருளை எப்படி தயாரிப்பது, எப்படி விநியோகம் செய்வது, யாரிடம், எப்படி விற்பது போன்ற விஷயங்களை அறுதியிட்டுவிட்டீர்கள். பிசினஸ் மாடலையும் மடமடவென்று வடித்து விட்டீர்கள். பலே, கையை கொடுங்கள். கங்கிராஜுலேஷன்ஸ்.

இப்பொழுது காதைக் கொடுங்கள். அடுத்த வேலை ஒன்று இருக்கிறது. ஆபீஸுக்கு அட்வான்ஸ் தந்து ஃபாக்டரிக்கு இடம் தேடி, கோடவுன் எங்கு வைப்பது என்று அலைவதற்கு முன் உங்கள் ஸ்டார்ட் அப்புக்கு கோனார் நோட்ஸ் ஒன்றைத் தயாரிக்க வேண்டும். உங்கள் தொழில் கட்டமைப்பை மேப் போட்டு, படம் வரைந்து, பாகங்களைக் குறிக்க வேண்டும். அதைப் பேசுவோம். காதை கேட்டேனே, ரெடியா!

வீடு கட்ட புளூபிரின்ட் எத்தனை முக்கியமோ அதுபோல் ஸ்டார்ட் அப் தொடங்க ஒரு புளூபிரின்ட் முக்கியம். ‘என் அப்பாவும் தாத்தாவும் புளூபிரின்ட் வரைந்தா அந்தக் காலத்தில் வீடு கட்டினார்கள், அது இத்தனை நாள் நிலைக்கலையா’ என்று நீங்கள் கேட்கலாம். திட்டமிடாமல் புளூபிரின்ட் இல்லாமல் நீங்களும் பேஷாய் ஸ்டார்ட் அப் தொடங்கலாம். உங்கள் முன்னோர் வீடு போல் அதுவும் ஒரு வேளை நின்று நிலைத்து தழைக்கலாம். ரிஸ்க் எடுத்து, ஒரு சான்ஸ் பார்த்து, தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டு பிளான் இல்லாமல் வீடு கட்டும் தைரியம் இருப்பவர்கள் தாராளமாய் புளூபிரின்ட் இல்லாமல் ஸ்டார்ட் அப் தொடங்கலாம். எதற்கு ரிஸ்க், சரியான முறையில் ஏற்கனவே தொழிலில் இறங்கி வென்றவர்கள் தொழில் தொடங்க திட்டமிட்ட வழி யிலேயே நானும் தொடங்குகிறேன் என்பவர்கள் தொடர்ந்து படிக்கவும்.

என்னிடம் ஸ்டார்ட் அப்புக்கு சூப்பர் ஐடியா இருக்கிறது என்று சொன்னால் மட்டும் பத்தாது. அந்த ஐடியாவை மொத் தமாய் செயல்படுத்தும் திட்டம் ரெடியாய் இருக்கிறது என்று கூறும் தன்மையும் அதை கண்ணை மூடிக்கொண்டு நம்பும் தைரியமும் அவசியம். அப்படிப்பட்ட செயல் திட்டம்தான் ‘பிசினஸ் மாடல் கேன்வாஸ்’. 2010-ல் ‘அலெக்ஸாண்டர் ஆஸ்டர்வால்டர்’ என்ற ஸ்விஸ் நாட்டு பிசினஸ் எழுத்தாளர் மற்றும் தொழிலதிபர் படைத்த சித்தாந்தம். இது ஒரு காட்சி விளக்கப்பட அமைப்பு (visual chart). தொழில் முனைவோர் களை பொருள் சார்ந்த பார்வையோடு மட்டும் தொழிலை அணுகாமல் வியா பாரம் சார்ந்த பார்வையோடு அணுகச் செய்யும் வழி.

பிசினஸ் மாடல் கேன்வாஸ் ஒன்பது பாகங்கள் கொண்ட ஒரு சார்ட். உங் கள் தொழில் பற்றிய யூகங்களை முறைப் படுத்தி, தொழிலுக்குத் தேவையான முக்கிய விஷயங்கள், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அம்சங்கள் ஏதேனும் விட்டுவிட்டீர்களா, சரியாக திட்டமிடாமல் இருந்துவிட்டீர்களா என்று அறிவுறுத்தும் அலாரம். தொழில் செய்ய தேவையான ஒன்பது அம்சங்களை ஒருமுகப்படுத்தி ஒன்றோடு ஒன்று சரிவர சேர்ந்து செயல்படும் விதத்தை நேர்படுத்த உதவும் கைட்.

பிசினஸ் மாடல் என்று ஒன்றை சொன்னாயே, இது என்ன கேன்வாஸ் என்று யோசிப்பவர்களுக்கு. பிசினஸ் மாடல் என்பது செலவுகளையும் வரவு களையும் இனங்கண்டு கணக்கெடுத்து லாபம் ஈட்டும் வழியை நிர்ணயிக்கும் செயல். பிசினஸ் மாடல் கேன்வாஸ் என்பது தொழிலின் முக்கிய அங்கங்கள் ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று கோர்வையாய் அமைந்திருக்கிறதா என்று வரைந்து தெரிந்துகொள்ளும் வழி. கை காசை போட்டு தொழில் தொடங்கி பாதி வழியில் அதிலுள்ள தவறு களை அடையாளம் கண்டு அவஸ்தை படுவதற்கு பதில் தொழில் துவங்கும் முன்பே அதை மொத்தமாய் ஸ்கெட்ச் போட்டு பார்த்து அதிலுள்ள தவறுகளை புரிந்துகொள்வது புத்திசாலித்தனம் அல்லவா. அதைச் செய்யத் தேவை பிசினஸ் மாடல் கேன்வாஸ்.

ஒன்பது பாகங்கள் கொண்ட அந்த நவக்ரஹங்கள் இவையே: முக்கிய பார்ட்னர்கள் (முதலீடு செய்யும் பார்ட்னர் அல்ல, இது வேறு), முக்கிய நடவடிக்கைகள், தேவையான முக்கிய வளங்கள், வாடிக்கையாளருக்கான நன்மைகள், வாடிக்கையாளருடனான உறவு, விநியோக சேனல்கள், வாடிக்கையாளர் வகைகள், செலவு கட்டமைப்பு, வருவாய்க்கான வழிகள். இதை விலாவாரியாய் அடுத்த வாரம் பார்ப்போம். முதலில் பிசினஸ் மாடல் கேன்வாஸின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வோம்.

செய்ய நினைக்கும் தொழில் பற்றி நீங்கள் மனதில் ஆயிரம் விஷயங்கள் நினைத்து வைத்திருக்கலாம். உள்ளத்திலேயே அதற்கு உருவம் கூட தந்திருக்கலாம். ஆனால் அதிலுள்ள குறைகளை, வில்லங்கங்களை அறிய அதை முறையாய் அதற்கான வடிவத் தில் எழுதிப்பார்ப்பது புத்திசாலித்தனம். அப்படி செய்யும் போதுதான் அதில் உள்ள ஓட்டைகள் ஒளிவு மறை வில்லாமல் தெரியும். அதை அடைக்கும் வழியும் புரியும். மனதிலுள்ள ஐடியாவை, அதை செயல்படுத்த தேவை யான வழியை, விஷயங்களை முறைப் படி எழுத வேண்டும். அதற்கு உதவவே பிசினஸ் மாடல் கேன்வாஸ். அதன்படி உங்கள் எண்ணங்களையும் திட்டங் களையும் எழுதிப் பார்க்கும் போது ஆயிரம் கேள்வி எழும். நூறு விஷயங் களை கவனிக்காமல் இருந்துவிட்டது புரியும். இதை அணுகும் வழியை, எழு தும் முறையை ஆழமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. கிட்டத்தட்ட நவக்ரஹ ஹோமம் ஒன்றையே செய்ய வேண்டியிருக்கிறது. சிரமேற்கொண்டு, பயபக்தியுடன், கர்ம சிரத்தையாக அடுத்த வாரம் மேற்கொள்வோம்!


எண்ணித் துணிகபிசினஸ் மாடல் கேன்வாஸ்Business model canvas

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author