

அமேசான், என்றதுமே இப்போதைய இளைய தலைமுறையினருக்கு ஆன்லைன் வர்த்தக நிறுவனம்தான் நினைவுக்கு வரும். பள்ளி நாட்களில் பிரேஸிலில் உள்ள அமேசான் காடுகள் பற்றி படித்தது நினைவுக்கு வராது. ஆனால், தற்போது அமேசான் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிற செய்தி பரவியதும் அமேசானுக்காக ஒவ்வொருவரும் வருத்தம் தெரிவிக்கிறார்கள். ஆகஸ்ட் 10-ம் தேதி அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏற்பட்ட தீ இப்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு மிக மோசமாக பரவி வருகிறது. காட்டிலிருந்து உருவாகும் தீயால் ஏற்படும் கரும்புகை மேகம் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் சா பாலோ நகர் வரைக்கும் சூழ்ந்துள்ளது.
ஜி-7 மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மெக்ரான் முதலில் இப்பிரச்சினையை உலகத் தலைவர்கள் கவனத்துக்குக் கொண்டுவந்த பிறகுதான், இப்பிரச்சினை சர்வதேச பிரச்சினையாக உருவெடுத்தது. அமேசான் பற்றி எரிவது சர்வதேச பிரச்சினையாக உருவெடுக்கக் காரணமே, புவி வெப்பமடைவதை இது மேலும் அதிகரிக்கச் செய்யும் என்பதுதான். காடு எரிவதால் வெளியாகும் கரியமிலவாயுவின் அளவு மிகப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
அமேசான் பிரச்சினை நம்மை பாதிக்குமா என்றால் அது நிச்சயம் பாதிக்கத்தான் செய்யும். புவி வெப்பமடைந்து, கடல் மட்டம் உயரும்போது அதன் பாதிப்பால் இந்தியாவின் பல கடலோர பகுதிகள் மூழ்கிப் போகும்.
இந்தியாவில் காடுகளில் தீ ஏற்படுவது கடந்த சில ஆண்டுகளாக மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. சமீப காலத்தில் மட்டும் 28,252 தீ விபத்து சம்பவங்கள் இந்திய காடுகளில் நிகழ்ந்துள்ளன. மேலும் கோடைக் காலங்களில் காடுகளில் தீ ஏற்படுவது வழக்கமான நிகழ்வாக மாறி வருகிறது. இந்தியாவில் 7 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு வனப் பகுதி உள்ளது. ஆனால் இவற்றில் 65 சதவீத வனப்பகுதிகள் தீ விபத்துக்குள்ளாகும் ஆபத்தில் உள்ளன. 2011-ம் ஆண்டில் இந்திய காடுகளில் நிகழ்ந்த தீ விபத்துகளின் எண்ணிக்கை 13,898. இதுவே கடந்த ஆண்டில் மட்டும் 37,059 ஆக அதிகரித்துள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் ஆண்டுதோறும் தீ விபத்து ஏற்படுவது வழக்கமான நிகழ்வாக மாறி வருகிறது. 3,75,000 ஹெக்டேர் பரப்பளவு வனப்பகுதியில் இதுவரை 44,518 ஹெக்டேர் வனப்பகுதி தீயில் கருகிவிட்டன. கங்கை, யமுனை நதிப்படுகையில் 80 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி தீயில் கருகி சாம்பலாகிவிட்டது. இமாசலப்பிரதேசத்தில் 19 ஆயிரம் ஹெக்டேர் வனப்பரப்பு அழிந்துவிட்டது. மகாராஷ்டிர மாநிலத்தில் 10 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதியும் தீ விபத்தில் முற்றிலுமாக கருகிப்போனது. சமீபத்தில் தமிழகத்தில் குரங்கனி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து வெறும் செய்தியாகப் போனதோடு சரி.
வன வளம் மிகவும் அவசியமானது. வெறுமனே ஒவ்வொரு தலைவர் பிறந்த நாளுக்கும் மரக்கன்றுகளை நடுவதாக அறிவிப்பதால் வன வளம் காக்கப்படாது. நடப்படும் மரக்கன்றுகள் நன்றாக வளர்ந்து செழிக்கின்றனவா என்பதை எவருமே கவனிப்பதில்லை. இதனாலேயே நட்ட இடத்திலேயே மரக்கன்று நடுவதும், அதை ராசியான இடம் என்று கூறுவதும் வழக்கமாகிவிட்டது.
அமேசான் உலக நாடுகளுக்கு தரப்பட்ட எச்சரிக்கை. இந்தியாவிலும் வனப் பகுதி உள்ளது. அதுவும் ஆண்டுதோறும் தீ விபத்துக்குள்ளாகிறது. இதன் பின் விளைவுகள் எதிர்கால சந்ததிக்கு பெரும் ஆபத்தாக மாறும் என்பதை ஆட்சியாளர்களும், பொதுமக்களும் உணர்ந்தால் மட்டுமே வன வளம் தழைக்கும்.