Published : 02 Sep 2019 10:34 AM
Last Updated : 02 Sep 2019 10:34 AM

யு டர்ன் 35: கிரைஸ்லர்- நீயா, நானா?

எஸ்.எல்.வி. மூர்த்தி
slvmoorthy@gmail.com

லீஅயக்கோக்கா இத்தாலி நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து வந்திருந்த நிக் கோலே, அன்ட்டோனியட் ஆகியோரின் மகன். 1924 ல் பிறந்தார். நிக்கோலே, தன் பண்ணி ரெண்டாம் வயதிலேயே, குடும்ப வறுமை காரண மாகப் பெற்றோரால், அமெரிக்காவுக்குச் சொந்தக் காரர்களிடம் அனுப்பப்பட்டவர். நிலக்கரிச் சுரங்கத்தில் வாழ்வைத் தொடங்கினார். பின், செருப்பு தைத்தார். கடும் உழைப்பாளி. தொழில் முனைப்பும் கொண்டவர். சேமித்த பணத்தில் உணவு விடுதி தொடங்கினார். அடுத்து, சினிமா தியேட்டர்கள், கார்கள் வாடகைக்கு விடுதல். தொட்டவை அனைத்தும் துலங்கின.

1929 ல் அமெரிக்காவில் பெரும் பொருளாதார வீழ்ச்சி. ஒரே வருடத்தில், குடும்பச் சொத்துகள் அத்தனையும் கனவாய், பழங்கதையாய் மறைந் தன. துணிச்சலோடு இதை அப்பா ஏற்றுக் கொண்டார். அவர் அடிக்கடி சொல்லுவார், “சுற்றிலும் இருட்டா? கவலைப்படாதீர்கள். சீக்கிரமே சூரியன் உதயமாகப் போகிறது என்று அர்த்தம்.” அயக்கோக்கா மனதில் ஆழமாகப் பதிந்தன இந்த வார்த்தைகள்.

சிறுவயது முதலே, குடும்ப பாரத்தைச் சுமக்கத் தன்னால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்னும் மனப்போக்கு. பத்து வயது. நண்பர்களோடு அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் போவார். கஸ்டமர்களின் சாமான்களைத் தூக்கிவைக்க உதவுவார். கிடைக்கும் சில்லறை டிப்ஸ் அம்மா கைகளுக்குப் போகும். ஊரில் ஒரு பழக்கடை இருந்தது. அதன் சொந்தக்காரர் அதிகாலையில் சந்தைக்குப் போவார். அவரோடு போகும் அயக் கோக்கா, தன் தலையில் மூட்டையைச் சுமந்து வரு வார். இரண்டு டாலர்கள் கிடைக்கும். பிறகு கொஞ்ச நாட்கள் ஒரு செருப்புக் கடையில் எடுபிடியாக.

நாம் ஆங்கிலம் பேசும்போது, உச்சரிப்பில் தமிழ் வாசம் வரும். அடிப்படையில் இத்தாலியரான அயக்கோக்கா பேச்சிலும், தாய்மொழி நெடி. இத னால், சக மாணவ, மாணவிகள் கேலி செய்வார் கள். அயக்கோக்கா காயப்பட்டார். பதிலடி கொடுக்க நல்ல வழி கண்டுபிடித்தார். அவர்களை முந்தவேண்டும். படிப்பில் தீவிரம். எப்போதும் முதல் அல்லது இரண்டாவது ரேங்க் வாங்கினார்; பேஸ்பால் விளையாட்டிலும், டிரம்ப்பெட் என்னும் இசைக்கருவி வாசிப்பிலும் ஜொலித்தார். ஒரு ஆசிரியை, மேடைப்பேச்சில் பயிற்சி தந்தார். இதன் மூலம், சக மாணவர்களால் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தன் வாழ்வை மாற்றிய சக்திகளில் பேச்சுத்திறமை முக்கிய மானது. ஜெயிக்க விரும்பும் ஒவ்வொருவரும் இந்தக் கலையில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அயக்கோக்கா நம்பினார். பின்பற்றினார்.

பொறியியல் படிப்பை முடித்தார். அவருக்குச் சிறுவயது முதலே, கார்களின் மீது தனி ஈடுபாடு. படிப்பை முடித்த காலகட்டத்தில், ஃபோர்ட், ஜெனரல் மோட்டார்ஸ், கிரைஸ்லர் ஆகிய மூவரும் உலகக் கார்த்தொழிலின் முடிசூடா மன்னர்கள். 1946. ஃபோர்ட் கம்பெனியில் பயிற்சி பொறியாளராக (Trainee Engineer) சேர்ந்தார். கொஞ்ச நாட்களிலேயே, நாள் முழுக்க எந்திரங்களோடு நேரம் செலவிடுவதில் சலிப்பு வந்தது. மார்க்கெட்டிங் துறைக்கு மாறினார். கஸ்டமர்களோடும், டீலர் களோடும் பழகும் நட்புமுறை வெற்றிமேல் வெற்றி வந்து குவிந்தது.

1956. அயக்கோக்கா, ஃபிலடெல்ஃபியா (Philadelphia) மாநிலத்தின் ஏரியா மேனேஜர். கார் கள் விற்பனையில் மந்த நிலை. ஏராளமான விற் பனைப் பிரதிநிதிகள் வேலைகளிலிருந்து நீக்கப் பட்டார்கள். அயக்கோக்கா தலைமேலும் கத்தி. உடனடியாக விற்பனையை அதிகரிக்க ஏதாவது செய்தாக வேண்டும். மூளையின் நியூரான்களை முடுக்கினார். வெட்டியது ஒரு மின்னல் “56 க்கு 56” என்னும் திட்டம். சாராம்சம் இதுதான். 1956 வருடத்தின் புதிய மாடல் கார் வாங்க விரும்புவோர், 20 சதவிகிதம் முன்பணம் கொடுத்தால் போதும். மீதியை 3 வருடங்களுக்கு, மாதம் 56 டாலர்கள் வீதம் தர வேண்டும். அப்போது, கார் அவர்களுக்குச் சொந்தம். மூன்றே மாதங்கள். ஃபிலடெல்ஃபியா மாநிலம் ஃபோர்ட் கார் விற்பனையில் முதல் இடம். நாடளாவிய திட்டமாக உயர் அதிகாரிகள் அமலுக்குக் கொண்டு வந்தார்கள். அயக்கோக்கா சூப்பர் ஸ்டார்.

1955. ஃபோர்ட் கம்பெனி நிறுவிய, நம் எல்லோருக்கும் தெரிந்த ஹென்றி ஃபோர்ட் அவர் களின் பேரன், இரண்டாம் ஹென்றி ஃபோர்ட் நிறுவனச் சேர்மெனாக இருந்தார். அவர், அப்பா பெயர் எட்ஸெல் ஃபோர்ட். அப்பாவின் பெயர் சொல்லும் மாடல் ஒன்றை உருவாக்கவேண்டும், உலகக் கார் வரலாற்றில் அது நிரந்தர இடம் பிடிக்க வேண்டும் என்று விரும்பினார். 1955 ல் வடிவமைப்பு ஆரம்பம். 250 மில்லியன் டாலர்கள் முதலீடு. ‘‘இதோ வருகிறது வருங்காலத்துக்கான கார்” என்று கஸ்டமர்கள் எதிர்பார்ப்புகளை எகிறவைக்கும் அட்டகாச முன்னறிவிப்புகள்.

செப்டம்பர் 4, 1957. எட்ஸெல் அறிமுகம். 1000 வாலாவாகத் தம்பட்டம் அடிக்கப்பட்ட பட்டாசு புஸ். விற்பனை நிறுத்தப்பட்டது. இது தன் குடும்பத்துக்கும், குறிப்பாக அப்பாவுக்கும் வந்த களங்கம் என்று இரண்டாம் ஹென்றி ஃபோர்டு நினைத்தார். இழந்த பெருமையை மீட்க வேண்டும், நஷ்டத்தை ஈடு கட்டவேண்டும். அடுத்த கார் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகவேண்டும். இதைச் சாதிக்கும் திறமை கொண்டவர் யார்? இது அயக்கோக்காவாக இருக்கலாம் என்று “56 க்கு 56” திட்டம் கோடிட்டுக் காட்டி விட்டது. 1960. ஃபோர்ட் கம்பெனி யிலேயே பெரியதும், மிகக் கெளரவ மானதுமான கார்த் துறையின் ஜெனரல் மேனே ஜராக அவரை நியமித்தார். அயக்கோக்கா திறமைக்கு அக்னிப் பரீட்சை.

சவாலே சமாளி என்று முழுமூச்சாக இறங் கினார். கார்களின் புதிய மாடல்கள் தயாரிக்க நான்கு வருடங்களும், பல கோடி டாலர்களும், ஆயிரத்துக்கும் அதிகமானோரின் உழைப்பும் தேவை. மார்ச் 1964. ‘‘மஸ்ட்டாங்” (Mustang) என்னும் புதிய மாடல் அரங்கேறியது. ஒரே வருடம். 4,18,812 ‘‘மஸ்ட்டாங்”கள் விற்பனை. கார் விற்பனையில் இதுவரை எந்த நிறுவனமும் காணாத புதிய மைல்கல்.

அடுத்த வருடங்களிலும், வெற்றி தொடர்ந்தது. ஃபோர்டே பிரமித்துப்போனார். மெர்க்குரி, லிங்கன் என்னும் இருவகை ஆடம்பரக் கார்கள் தயாரிக்கும் பிரிவு இருந்தது. நஷ்டத்தில் ஓடியது. இந்தப் பிரிவுக்கும் அயக்கோக்காவை ஜெனரல் மேனேஜராக்கினார். இங்கேயும் ஜீ பூம்பா வேலை. புதுப் புது மாடல்கள், லாபம்.

1968. கம்பெனியின் சி.இ.ஓ. பதவியில் இருந்த வர் ஓய்வு பெற்றார். தகுதி அடிப்படையில் அந்த இடம் தனக்கே என்று அயக்கோக்கா நம்பினார். முதலீட்டாளர்களும், ஊடகங்களும் கம்பெனியின் வெற்றிக்கு மூல காரணம் அயக்கோக்கா என்று கருத்துக்கள் எழுப்பினார்கள். பலருக்குப் பொறாமை. எல்லோரையும் விட ஒருவர் நெஞ்சில் இந்தத் தீ அதி தீவிரமாய். அவர் போர்ட். தன் கீழ் வேலை பார்ப்பவருக்குத் தன்னை விடப் புகழா என்னும் வக்கிர சிந்தனை. அயக்கோக்காவை மட்டம் தட்டவேண்டும், அதே சமயம், அவர் திறமை யும் தேவை. ஒரு குறுக்குவழி கண்டுபிடித்தார். நட்ஸென் (Knudesn) என்பவரை சி. இ. ஓ வாக நியமித்தார். பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழ னாக அயக்கோக்காவிடம் சொன்னார்,‘‘உனக்கு இப்போது 44 வயதுதான் ஆகிறது. ஒரு சில வருடங்கள் பொறுத்துக்கொள்.”

மனதில் தயக்கம். ஆனால், கம்பெனி முதலாளி, சேர்மெனையா சந்தேகப் பட முடியும்? தொடர்ந்தார். முன்பு போல் அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு. இரண்டே வருடங்கள். நட்ஸென் எடுத்த பல முடிவுகள் கம்பெனியைக் கீழே தள்ளின. ஃபோர்ட் சீட்டைக் கிழித்தார். அயக்கோக்காவை சி.இ.ஓ. ஆக்கினார்.

1973. உலகப் பெட்ரோலியப் பொருட்கள் தட்டுப்பாடு. ஃபோர்ட், ஜெனரல் மோட்டார்ஸ், கிரைஸ்லர் ஆகிய பிரம்மாண்டங்களின் விற்பனை வீழ்ந்தது. ஜப்பானியக் கார்களின் எழுச்சி. கம்பெனி சிறிய கார்கள் தயாரிக்கவேண்டும் என்று அயக்கோக்கா திட்டம் தீட்டினார். தனிமனிதக் காழ்ப்பால், ஃபோர்ட் இதைக் குப்பையில் போட்டார். அடுத்து வந்தன, பழிவாங்கும் நடவடிக்கைகள். சி.இ. ஓ வுக்கு எதிராகப் பல லஞ்சப் புகார்களை உருவாக்கினார். ஒன்றையும் நிரூபிக்க முடியவில்லை. அயகோக்காவுக்கு நெருக்கமான உயர் அதிகாரிகளைக் காரணமே இல்லாமல் வீட்டுக்கு அனுப்பினார். இத்தனை சித்திரவதைகள் கொடுத்தால், அயக்கோக்கா தாமாக ராஜினமா செய்துவிடுவார், அவரைத் துரத்தியதாகத் தன்மேல் பழி விழாது என்பது ஃபோர்டின் குறுக்கு புத்தி.

ஃபோர்ட் மேனேஜ்மென்ட் கமிட்டி அமைத்தார். அவர், புதிதாக நியமிக்கப்பட்ட உதவி சேர்மென், சி.இ.ஓ. மூவரும் அங்கத்தினர்கள். சேர்மென் இல்லாதபோது, அவர் அதிகாரங்கள் உதவி சேர்மெனுக்கு. அதாவது சி.இ.ஓ. அயக்கோக்கா டம்மியாக்கப்பட்டார். இத்தனை அவமானங்கள் நடந்தும், அயக்கோக்கா வேலையில் தொடர்ந்தார். அவரே காரணம் சொல்லுவார்,``என் பேராசை. பதவி, சம்பளம், வசதிகள் போய்விடுமே என்கிற பயம்.”

ஜூலை 13, 1978. அயக்கோக்கா ஃபோர்ட் அறைக்கு அழைக்கப்பட்டார்.

``லீ, நீங்கள் பதவி விலகிவிடுங்கள். அதுதான் கம்பெனிக்கு நல்லது.”

‘ஏன் இந்த முடிவு?”

“சில நேரங்களில் நமக்குச் சிலரைப் பிடிப்பதில்லை. இதுதான் காரணம்.”

32 வருட அர்ப்பணிப்பு, உழைப்பு. கோடிக் கோடியாக ஈட்டிய லாபம் அத்தனைக்கும் கம்பெனி தந்த பரிசு. நாளை ஊடகங்கள் அத்தனையும் அலறும், ‘‘அயக்கோக்கா வேலையிலிருந்து துரத்தப்பட்டார்.”

54 வயதில் வாழ்க்கையே முடிந்துவிட்டது. பொது இடத்தில் நிர்வாணமாகியதைப் போல் அவமானம். ஃபோர்டைப் பழிக்குப்பழி வாங்கவேண்டும். அவரைக் கொலை செய்ய வேண்டும். முடியாவிட்டால், தற்கொலை.

அப்போது, அப்பாவின் அசரீரிக் குரல் கேட்டது, ``சுற்றிலும் இருட்டா? கவலைப்படாதே. சீக்கிரமே சூரியன் உதயமாகப் போகிறது.”

(புதிய பாதை போடுவோம்!)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x