Published : 26 Aug 2019 11:20 AM
Last Updated : 26 Aug 2019 11:20 AM

கிரெடிட் ரிஸ்க் ஃபண்டுகளில் கவனிக்க வேண்டியவை

கே.பி.வெங்கடராமகிருஷ்ணன் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் இருக்கும் ஒரு வகை முதலீட்டு திட்டம்தான் கிரெடிட் ரிஸ்க் ஃபண்டு திட்டம். இவற்றில் அதிக ரிஸ்க் உள்ள திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்ட முடியும். இவை மாற்றவியலாத கடன் பத்திரங்கள் ஏஏ அல்லது அதற்கும் குறைவான தரநிர்ணயம் செய்யப்பட்ட கடன் பத்திரங்களில் செய்யப்படும் முதலீடுகளாகும்.

இதுபோன்ற குறைவான தரநிர்ணயம் கொண்ட கடன் பத்திரங்கள் ரிஸ்க் அதிகம் உள்ளவை என்பதால் இவற்றுக்கு அதிகபட்ச வருமானம் தரப்படுகின்றன. அதேபோல் ஃபண்டு மேனேஜர்களும் தங்களின் முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

இவை சாதாரண குறுகிய கால கடன் பத்திரங்களைக் காட்டிலும் அதிக வருமானம் தரக்கூடியவை ஆகும். ஆனால் கிரெடிட் ரிஸ்க் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது அதுகுறித்த தெளிவான புரிதலை முதலீட்டாளர்கள் கொண்டிருப்பது அவசியம். அதாவது இதில் முதலீடு செய்வதால் உள்ள ரிஸ்க் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

ரேட்டிங் கிரேடுகள்

கிரெடிட் ரிஸ்க் ஃபண்டு என்ற பெயரைக் கேட்டாலே ஒருவித பயம் உண்டாவது வழக்கம். ஏனெனில் பெரும்பாலானோருக்கு ரிஸ்க் என்ற வார்த்தையைக் கேட்டாலே சற்றே வயிற்றில் புளியைக் கரைக்கும் அல்லவா. ரிஸ்க்கா அப்போது இதில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்ற பயம் வந்துவிடும். ஆனால், கிரெடிட் ரிஸ்க் ஃபண்டுகளில் பல கிரேடுகள் உள்ளன. இந்த கிரேடுகள் ரேட்டிங் நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. ஏஏஏ ரேட்டிங் கொண்டவை அதிக பாதுகாப்பான கடன் பத்திரங்களாகும். ஏஏ அதற்கும் குறைவான ரேட்டிங் கொண்டது. அதாவது அதில் உத்தரவாதம் என்பது சற்று குறைவு. இதைத் தொடர்ந்து ஏ, பிபிபி, பிபி, பி என ரேட்டிங் கிரேடுகள் வழங்கப்படும்.

இவற்றில் பிபி அல்லது பி என்ற ரேட்டிங் உள்ள கடன் பத்திரங்கள் என்பதால் அவை திவாலாகிவிடும் என்றோ, முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்படும் என்றோ முடிவு செய்ய வேண்டியதில்லை. அதேபோல், ஏஏஏ ரேட்டிங் உள்ள பாதுகாப்பான கடன் பத்திரங்கள் திவாலாகாது என்பதற்கான உத்தரவாதமும் இல்லை. மேலும் கடன் பத்திரங்களின் ரேட்டிங் காலப் போக்கில் மாறக்கூடியது.

ஏஏஏ ரேட்டிங் கொண்ட கடன் பத்திரம் நாளடைவில் ஏஏ ரேட்டிங்குக்கு குறைக்கப்படலாம். அதேபோல் பிபிபி ரேட்டிங் கொண்ட கடன் பத்திரங்கள் ஏ அல்லது ஏஏ ரேட்டிங்குக்கு உயரவும் வாய்ப்புள்ளது. ரேட்டிங் மாற்றத்துக்கு ஏற்ப கடன் பத்திரங்களின் மதிப்பும் மாறும். கடன் பத்திரத்தின் ரேட்டிங் குறைந்தால் அதன் மதிப்பு குறையும், ரேட்டிங் உயர்ந்தால் மதிப்பும் உயரும்.

தற்போதைய சூழல்

ஐஎல் அண்ட் எஃப் எஸ் நிறுவனம் அதன் கடன் பத்திரங்களுக்கான முதிர்வு தொகையைத் தர முடியாமல் திவாலான பிறகு, கடன் ஃபண்டுகளின் நிலை மிகவும் அழுத்தத்துக்குள்ளானது. பல ஃபண்டு நிறுவனங்களின் ஃபண்டுகள் இதனால் மதிப்பு குறைந்தன. அவற்றின் என்ஏவி ஒரே வர்த்தக நாளில் பெரும் சரிவைக் கண்டது.

இந்த சரிவு முதலீட்டாளர்களிடம் பதட்டத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியது. இது போன்ற சூழலில் முதலீட்டாளர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது சில ஃபண்டு நிறுவனங்கள் தற்போது நெருக்கடிகளால் பாதிக்கப்படாமல் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பது என்பதுதான். இந்த ஃபண்ட் நிறுவனங்கள் மட்டும் எப்படி தொடர்ந்து வருமானம் ஈட்டுகின்றன என்ற கேள்வி எழலாம்.

அதற்கு சரியான பதில் அவற்றின் ரிஸ்க் மேனேஜ்மென்ட் செயல்பாடுகள்தான். கடந்த சில மாதங்களில், குறிப்பிடத்தக்க சரிவைச் சந்தித்த ஃபண்ட் திட்டங்களைக் கொண்ட ஃபண்ட் நிறுவனங்களிலிருந்து முதலீட்டாளர்கள் நன்றாக வளர்ச்சியைப் பதிவு செய்து கொண்டிருந்த ஃபண்டு நிறுவனங்களுக்கு மாறினார்கள்.

நினைவில் கொள்ள வேண்டியவை

ஃபண்டுகள் தரும் வருமானம் என்று வரும்போது இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. ஒன்று ரிஸ்க் சரிசெய்யப்பட்ட வருமான விகிதம் என்ன, இரண்டு முதலீட்டு காலம் எவ்வளவு. கடன் திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகளைப் பொருத்தவரை நல்ல ரிஸ்க் மேனேஜ்மென்ட் வரலாறு உள்ள கடன் திட்டங்களில் முதலீடு செய்வது சிறந்தது. மேலும், முதிர்வு காலத்தில் கிடைத்த வருமானத்தை மட்டுமே காரணியாகக் கொண்டு முதலீடுகளைத் திட்டமிடக்கூடாது.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x