Published : 26 Aug 2019 11:09 AM
Last Updated : 26 Aug 2019 11:09 AM

அலசல்: ஒளி பெறுவது எப்போது? 

மின்சார வசதி இல்லாத கிராமங்கள் இந்தியாவில் அதிகம் என்று உலக வங்கி அறிக்கை தெரிவித்திருந்தது. 2014-ம் ஆண்டு தற்போதைய பாஜக தலைமையிலான அரசு பதவியேற்றபோது இந்தியாவில் அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அப்போதைய கணக்கின்படி 18,452 கிராமங்கள் மின் வசதி இன்றி இருப்பதாகக் கூறப்பட்டது. பதவிக்கு வந்த 1,000 நாட்களில் அதாவது 3 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களும் மின்வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

2017-ம் ஆண்டு ``பிரதம மந்திரி சகஜ் பிஜ்லி கர் யோஜனா’’- எனும் சௌபாக்யா திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கமே அனைத்து வீடுகளுக்கும் மின் வசதி அளிப்பதுதான். இதன்படி கிராமத்தில் அருகில் உள்ள மின் கம்பங்களிலிருந்து வீடுகளுக்கு மின் இணைப்பு, ஒரு எல்இடி பல்பு மற்றும் மொபைல் சார்ஜிங் வசதி அளிப்பது இத்திட்டத்தின் நோக்கம். ஒருவேளை கிராமங்களில் மின்கம் பங்களே இல்லாதிருப்பின் மின் கம்பங்களை நிறுவி மின் வசதி அளிக்க வேண்டும். இத்திட்டத்தை தீன் தயாள் உபாத்யாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்ட தினமான செப்டம்பர் 25, 2017-ல் டெல்லியில் பிரதமர் தொடங்கி வைத்தார்.

கிராமப்புற வீடுகள் அனைத்துக்கும் 24 மணி நேர தடையற்ற மின்சாரம் அளிக்கப்பட வேண்டும். இத்திட்டத்துக்கு தேவைப்படும் மின்மாற்றிகள், மீட்டர்கள் அனைத்தும் மானிய உதவியில் அளிக்கப்படும். இத்திட்டத்தை மத்திய மின் அமைச்சகம் செயல்படுத்தும் எனக் கூறப்பட்டது. இத்திட்டத்துக்கான மொத்த மதிப்பீடு ரூ.16,320 கோடி. இதற்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ.12,320 கோடி.

இத்திட்டத்தை செயல்படுத்தும் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு முழுமையான நிதி உதவியை அளிக்கும். 2018-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களும் மின் இணைப்பை பெற்றிருக்க வேண்டும் என்பதாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இதுவரை 1,417 கிராமங்கள் மட்டுமே மின்வசதி பெற்றுள்ளன. இன்னமும் 3 கோடியே 10 லட்சம் வீடுகள் இருளில்தான் மூழ்கியிருக்கின்றன.

அசாம், பிகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மட்டும் 60 லட்சம் வீடுகள் மின் வசதி இன்றி உள்ளன. மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 1 கோடியே 46 லட்சம் வீடுகள் மின்சார வசதி இன்றி உள்ளன. 2017-ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் இலக்கை 2019 மார்ச் மாதத்துக்குள் எட்டியிருக்க வேண்டும். அதாவது மாதத்துக்கு 20 லட்சம் வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மாதத்துக்கு 7 லட்சம் வீடுகளுக்கு மட்டுமே இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக சவுபாக்யா திட்டத்தை செயல்படுத்தும் மத்திய மின் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் முழுமையான இலக்கை எட்ட முடியாததற்கு திட்ட அமலாக்கத்தில் காணப்படும் குறைகளே முக்கிய காரணம். குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் துர்க்வான் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராமங்கள் 100 சதவீதம் மின் இணைப்பு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், உண்மையில் இங்குள்ள 50 வீடுகளில் மின்சார மீட்டர் மட்டுமே பொருத்தப்பட்டது. மின் இணைப்பு தரப்படவில்லை. ஓராண்டுக்கு மேலாகியும் இக்கிராம மக்கள் தங்கள் வீட்டுக்கு எப்போது மின்சார வசதி கிடைக்கும் என்று ஏங்கித் தவிக்கின்றனர்.

இக்கிராமத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள் இன்னமும் தெரு விளக்குகளைத்தான் நம்பியுள்ளனர். இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவெனில் மீட்டர் பொருத்தப்பட்ட வீடுகளுக்கு மின்சாரத்தை உபயோகித்ததற்கான பில் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே மின் வசதி இல்லாமல் ஓராண்டாக தவிக்கும் இக்கிராமத்தினர், மின்சார பில்லை பார்த்து அதிர்ச்சியாகி உள்ளனர். அரசின் திட்டங்கள் அற்புதமாக இருந்தாலும், அது கடைசி வரை செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்காதவரை திட்ட இலக்கு வெறும் காகிதத்தில்தான் எட்டப்பட்டிருக்கும். பலன் மக்களை சென்றடைந்திருக்காது!

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x