

தொழில் தொடங்குவதில் உள்ள பிரச்சினைகள் அவற்றை எதிர்கொண்டு சமாளித்து வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வருவதற்கு இதுவரை கூறிய ஆலோசனைகளில் எஞ்சியிருப்பவை மூன்று சி-தான். 7 சி-க்களில் ஐந்தாவதாக வருவது Concentration எனப்படும் கவனம் பிசகாதது மிகவும் அவசியம். தொழிலில் உங்களது கவனம் வேறெதிலும் சிதறாமல் துல்லியமாக இருப்பது மிகவும் முக்கியம். ஒருமுக கவனம் என்பது நீங்கள் கட்டாயம் வளர்த்துக் கொள்ள வேண்டிய தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும்.
எந்த ஒரு தொழிலிலும் கவனம் பிசகாமலிருந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம். எதைச் செய்ய வேண்டும் என்பதை முதலில் பட்டியலிட்டு அதை செயல்படுத்த வேண்டும். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் மகாபாரதத்தில் வரும் அர்ஜுனன்தான். குருகுல வாசத்தின்போது துரோணர் அனைத்து சீடர்களிடமும், மரத்தில் அமர்ந்திருக்கும் ஒரு குருவியின் கண்ணை குறிவைத்து தாக்குமாறு கூறுகிறார்.
அவர் கூறியது குருவியின் கண்ணுக்கு குறி வைக்க வேண்டும் என்பதுதான். ஒவ்வொரு மாணாக்கராக அவர் அழைத்து கேட்டபோது ஒவ்வொருவரும் மரம் தெரிகிறது, கிளை தெரிகிறது, இலை தெரிகிறது, மரத்திலுள்ள பழம் தெரிகிறது, நீல வானம் தெரிகிறது என்று தாங்கள் பார்த்தவற்றைக் கூறினர். ஆனால் அர்ஜுனனோ குருவியின் கண் மட்டுமே தனக்குத் தெரிவதாகக் கூறினான். உடனே வில்லை எய்யச் சொன்னபோது குறி பிசகாமல் அர்ஜுனின் அம்பு குருவியின் கண்ணை தாக்கியது. அதாவது நீங்களும் உங்களுடைய தொழிலில் இலக்கை நிர்ணயித்து அதில் ஒருமுகமாக பயணிக்க வேண்டும் என்பதற்கு இதை உதாரணமாகக் கொள்ள வேண்டும்.
நான் ஆலோசகராக இருந்த ஒரு நிறுவனத்தின் நிறுவனர்கள் சிலர் சமீபத்தில் என்னைச் சந்தித்தனர். தங்களது தொழில் நன்றாக நடந்தபோதிலும் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 5 லட்சம் அளவுக்கு பற்றாக்குறை ஏற்படுவதாகக் கூறினர். அவர்களிடம் அடுத்த இரண்டு காலாண்டுக்கு என்ன இலக்கு வைத்திருக்கிறீர்கள் என்றேன். அவர்களோ புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், புதிய சந்தை வாய்ப்புகளை எதிர்நோக்கியிருப்பதாகவும் கூறினர். கடைசியாக லாபம் ஈட்ட வேண்டும் என்றனர். அவர்கள் கூற்றுப்படி 3 திட்டங்களை செயல்படுத்தப் போவதாகக் கூறினர்.
அவர்களிடம் ஏதேனும் ஒன்றை மட்டுமே மையமாகக் கொண்டு திட்டமிடுமாறு கூறினேன். அவர்களும் கடைசியாக இந்த காலாண்டில் குறைந்தபட்சம் ரூ. 1 லட்சம் லாபம் ஈட்ட வேண்டும் என்றனர். அப்படிப்பார்த்தால் புதிய பொருள் அறிமுகம் இல்லை, புதிய சந்தையை நோக்கிய பயணமும் இல்லை.
இறுதியாக அவர்களது லாப நோக்கம் என்ற இலக்கு நோக்கி பயணிக்க அறிவுறுத்தினேன். இதன்படி புதிதாக ஒரு லட்சம் செலவு செய்து சந்தையை விரிவாக்கம் செய்தால் ரூ. 5 லட்சம் லாபம் ஈட்ட வாய்ப்பிருப்பதாகக் கூறினர். அதற்கான திட்ட அறிக்கையையும் காட்டினர். அந்த இலக்கை எட்ட முடியும் என்பது அவர்களது திட்ட அறிக்கையில் தெரிந்தது. அதே இலக்காகக் கொண்டு பயணிக்குமாறு கூறினேன்.
அடுத்தது 6-வதாகக் கூறப்படும் Courage - எனப்படும் உத்வேகம், தளரா முயற்சி.
எண்ணித் துணிக கருமம், துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
என்று திருவள்ளுவரின் கூற்று இதற்கு மிகச் சரியான உதாரணம். நீங்கள் தொழிலைத் தொடங்கிவிட்டீர்கள் என்றால், எந்த சந்தர்ப்பத்திலும் அதிலிருந்து விலகவே கூடாது. எத்தகைய ஊசலாட்டமும் இதில் இருக்கக் கூடாது. பயப்படுவதோ, சஞ்சலப்படுவதோ, ஊசலாட்டமோ நிச்சயம் தொழிலை தொடர்ந்து நடத்த உதவாது. தளரா முயற்சியும், உறுதியும்தான் வெற்றியை நிர்ணயிக்கும்.
கடைசியாக Continous Action எனப்படும் 7-வது சி. எடுத்த காரியம் நினைத்தபடி முடியும் வரை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு செயலை செய்ய முடிவு செய்யும்போது, அதைச் செயல்படுத்த முடியாவிட்டால் என்ன செய்வது என்று தீர்மானிக்க வேண்டும். அதாவது பிளான் ஏ, பிளான் பி, பிளான் சி என அடுத்தடுத்து யோசித்து வைத்திருக்க வேண்டும். முதல் திட்டம் தோல்வியடைந்தால் அடுத்தது என்ன என்று கைவசம் யோசனைகள் இருக்க வேண்டும். ஒரு திட்டத்தோடு மட்டுமே எந்த செயலையும் தொடங்கக் கூடாது.
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அதில் தேக்கம் ஏற்பட்டால் அடுத்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் நமது குடியரசு முன்னாள் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் அக்கினிச் சிறகுகள் புத்தகத்தை படித்தால் புரியும். ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் தந்தை என வர்ணிக்கப்படுபவர் கலாம். ஆனால் அந்த ஏவுகணை உருவாக்கத்தில் அவர் சந்தித்த தோல்விகளும், அதிலிருந்து அவர் மீண்டு வெற்றிகரமாக உருவாக்கிய அக்கினி ஏவுணையும்தான் சான்று.
வெற்றி பெற வேண்டுமானால் இலக்கு அவசியம். அதை எப்படி எட்டுவது என்பதற்கு திட்டமிடல் அவசியம். திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தும்போதுதான் வெற்றி சாத்தியமாகும். மிகப் பெரிய வெற்றியாளராக வலம் வர இதுவரை அளித்த ஆலோசனைகள் நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருந்திருக்கும். வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வர வாழ்த்துகள் கூறி தொடரை நிறைவு செய்கிறேன்.
aspireswaminathan@gmail.com