

புவி வெப்பமடையும் பிரச்சினையில் இன்னமும் உலக நாடுகள் போதிய கவனம் செலுத்தவில்லை என்றே தோன்றுகிறது. கடந்த ஜூன் மாதம் 10-ம் தேதி தலைநகர் டெல்லியில் 48 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. கரியமில வாயு வெளியேற்றத்தினால்தான் புவி வெப்பம் அதிகரித்துவருகிறது என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. கரியமில வாயு வெளியேற்றத்தில் முன்னிலை வகிப்பவை சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள்தான். இந்த நாடுகளில் உள்ள அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியாகும் கரியமில வாயுவின் பாதிப்பு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
புவி வெப்பமடைவதால் ஏற்படும் பாதிப்புகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது. ஆனால் இதை ஆட்சியாளர்கள் உணர்ந்ததாகத் தெரியவேயில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட தொடர் மழை அதனால் ஏற்பட்ட நிலச் சரிவு. பொருளாதார இழப்போடு 500 மனித உயிர்களும் இதற்குப் பலியான சோகத்துக்கான பின்னணி வெளிவராமலேயே அன்றாட நிகழ்வு போல மறைந்துபோனதுதான் கொடுமையான சம்பவம்.
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை இரட்டை இலக்கத்துக்கு உயர்த்துவது, 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது எல்லாமே ஆட்சியாளர்கள் நிர்ணயித்துள்ள இலக்கு. இவை எல்லாம் வளர்ச்சிக்கான வழிகள் என்று வரவேற்போம். ஆனால் அதற்காக நாம் கொடுக்கும் விலை அதைவிட பல மடங்கு என்பதை உணர வேண்டிய தருணமிது.
1800-1900 காலகட்டத்தில் இருந்த புவியின் வெப்பத்தை விட தற்போது புவியின் வெப்பம் 1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இதன் வெளிப்பாடகத்தான் டெல்லி வெப்பம் 48 டிகிரி செல்சியஸைத் தொட்டது.
புவி வெப்பநிலை உயரும்போது பனிப் பாறை உருகி கடல் மட்டம் 2.8 அடி உயரும். இதனால் இந்தியாவின் கடலோரப் பகுதிகள் முழுவதும் காணாமல் போகும் என்று அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போது இந்தியாவில் 2.65 பிபிஎம் அளவுக்கு ஆண்டுதோறும் கரியமில வாயு வெளியாகிறது. 2015 முதல் 2019-ம் ஆண்டு வரையான காலத்தில் இது 412 பிபிஎம் அளவை எட்டியுள்ளது. இதே நிலை நீடித்தால் அடுத்த 15 ஆண்டுகளில் 450 பிபிஎம் அளவை எட்டும். இது 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்க காரணமாகும். இதே நிலை நீடித்தால் 2050-ல் இந்தியாவில் வெப்ப நிலை 1.5 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும்.
புவி வெப்ப நிலை உயர்விலிருந்து பாதுகாக்க நெதர்லாந்தும், சிங்கப்பூரும் இப்போதே தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கென குறிப்பிட்ட தொகையை இரு நாடுகளும் ஒதுக்கி நடவடிக்கை எடுக்கின்றன. இவ்விரு நாடுகளின் தனி நபர் வருமானம் இந்தியர்களின் வருமானத்தை விட 20 மடங்கு அதிகம். ஆனால் இயற்கை சீற்றத்துக்கு பணக்கார நாடு, ஏழை நாடு என்ற பேதம் ஏதும் கிடையாது. கடல் மட்டம் உயரும் ஆபத்து இந்தியாவுக்கு அதிகம் என்று எச்சரிக்கை எழுப்பியும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காத ஆட்சியாளர்களின் அலட்சியத்துக்கு அடுத்து வரும் சமுதாயம்தான் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.