செய்திப்பிரிவு

Published : 19 Aug 2019 11:59 am

Updated : : 19 Aug 2019 11:59 am

 

சரியும் இந்திய பொருளாதாரம் மாரடைப்புக்கு பாரசிட்டமால் உதவாது

indian-economy

பேராசிரியர் க.ஜோதி சிவஞானம்
kjothisiva24@gmail.com

ரிசர்வ் வங்கி தொடர்ந்து நான்காம் முறையாக (repo rate) வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. அதுவும் எதிர்பார்ப்புகளுக்கு மிகையாக 35 புள்ளிகள் குறைத்தது. சரிந்துகொண்டிருக்கும் பொருளாதாரத்தை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்ல, ஒட்டுமொத்த பொதுமக்களின் தேவை மற்றும் தனியார் முதலீட்டை அதிகப்படுத்தும் நோக்கில் வட்டி விகிதத்தை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்தார்.

இதே காரணத்தைக் குறிப்பிட்டுத்தான் கடந்த பிப்ரவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் நடந்த நான்கு நிதிக் கொள்கை கூட்டத்திலும் தொடர்ந்து வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. இது வரும்காலங்களிலும் தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்து வருகின்றது. ஆனால், தனியார் முதலீட்டை ஊக்
குவித்து பொருளாதார வளர்ச்சியினை உயர்த்த எடுக்கப்பட்ட இந்த வட்டி குறைப்பு முயற்சிகள் எந்த ஒரு பலனையும் இதுவரை தரவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. சொல்லப் போனால் தனியார் முதலீடும் பொருளாதார வளர்ச்சியும் மேலும் தொடர்ந்து சரிந்து கொண்டேதான் வருகின்றன. வருங்காலங்களில் நிலைமை இன்னும் மோசமாகவே இருக்கும் என்றே ரிசர்வ் வங்கி மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் கணிப்புகள் சொல்கின்றன.

சரியும் பொருளாதார வளர்ச்சி

கடந்த நிதியாண்டில் (2018-19) பொருளாதார வளர்ச்சி 6.8%, அண்மை காலாண்டு வளர்ச்சி விகிதம் 5.8%. முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் கூறுவது போல், இது 2.5% மிகைப்படுத்தப்பட்ட வளர்ச்சி என்பதை ஏற்றுக்கொண்டால், கடந்த நிதியாண்டின் உண்மையான வளர்ச்சி விகிதம் 4.3%, காலாண்டு வளர்ச்சி 3.3% ஆகும். இது நம்முடைய கடந்தகால வளர்ச்சி விகிதங்களுடன் (8 – 9%) ஒப்பிடுகையில் இந்தியா 30 - 40 வருடங்கள் பின்னோக்கி சென்றுவிட்டது என்பதுதான் நிதர்சனம். உலகளவில் GDP பட்டியலில் இந்தியா ஏழாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது சமீபத்திய நிலவரம். ஆனால், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியாவை உருவாக்குவோம் எனக் கூறிவருகிறது மத்திய அரசு.

ஒரு துறை விடாமல் எல்லா துறையும் மிகுந்த நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன. தொழில், ஏற்றுமதி/இறக்குமதி, விவசாயம், மக்களின் நுகர்வு என்று அனைத்திலும் பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இதனால் வேலையின்மையும் வெகுவாக உயர்ந்துள்ளது. சாதாரண மக்கள் பயன்படுத்தும் நுகர்வுபொருட்கள் தொடங்கி வசதியுள்ளோர் பயன்படுத்தும் கார், இருசக்கர வாகனம் போன்ற அனைத்து பொருட்களின் விற்பனை குறைந்து, இந்த நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கையும் தொடங்கிவிட்டது. மோட்டார் வாகனத் துறை அதிக சிறு தொழில்களுடன் இணைக்கப்பட்ட ஒன்று என்பதால் அதில் வேலை வாய்ப்புகள் அதிகம். ஆனால், தற்போது வாகன விற்பனை கடும் சரிவைக் கண்டதால் உற்பத்தி குறைப்பும், வேலையிழப்பும் நடந்தேறிவருகின்றன.


வளர்ச்சியின் முக்கிய அங்கம் முதலீடு. முதலீடு இல்லாமல் வளர்ச்சியை அடையவே முடியாது. ஆனால், இந்தியத் தொழில்துறைக்கான முதலீடு கடந்த பத்து ஆண்டுகளாக தொடர் சரிவை சந்தித்து வருகின்றது. கடந்த பத்து ஆண்டுகளில் 34 சதவீதத்திலிந்து 27 சதவீதமாகக் குறைந்துள்ளது. இப்படி தொடர்ந்து தனியாரின் தொழில்துறை முதலீடுகள் சரிந்து வருவதின் விளைவு உற்பத்தி திறன் (excess productive capacity) தேக்கமடைந்து வருகின்றது. உற்பத்தி திறன் தேக்கம் அதிகரித்து வருவதால் புதிய முதலீடுகள் உடனடியாக வர வாய்ப்பில்லாத சூழல் உருவாகியிருக் கின்றது.

அடுத்து விவசாயத் துறையும், ஒட்டுமொத்த ஊரகத் துறையும் அனைத்து முறைசாரா துறையும், சிறு மற்றும் குறுந் தொழில்கள், சிறு வணிகர்கள் அனைவரும் பல்வேறு கடுமையான சவால்களை சந்தித்து வருகின்றார்கள். விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையால் வறட்சி எனும் பேராபத்தில் இருக்கிறார்கள். மறுபக்கம் வெள்
ளம், புயல் போன்ற இயற்கை சேதங்களையும் சந்திக்கும் நிலை. இதுபோக அதிக உள்ளீட்டு செலவுகள், விளைபொருளுக்கு மிகக் குறைந்த
விலை, பொய்த்துப் போகும் விதைகள், செலுத்த முடியாத கடன் என்று அடுக்கிக்கொண்டே போக
லாம். இதனால் சிலர் தற்கொலை விளிம்புக்குத் தள்ளப்படுவதையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இரண்டு இலக்கங்களில் உயர்ந்து வந்த கிராமப்புற ஊதியங்கள் 5 சதவீதத்துக்கும் கீழாக வீழ்ச்சியடைந்துள்ளன. இவை அனைத்தும் அவர்களின் வாங்கும் சக்தியை வெகுவாக குறைத்ததோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதித்துள்ளன.

வெளிநாட்டு வர்த்தகம்

உள்நாட்டு வர்த்தகம்தான் இப்படி எனில், வெளிநாட்டு வர்த்தகமும் குறைந்துவருகிறது. 2007 – 08 உலக பொருளாதார மந்த நிலைக்குப் பிறகு இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி இறக்குமதி பெரிய வீழ்ச்சியை கண்டுள்ளது. மொத்த தேசிய வருவாயில் 2012ல் 43.04 சதவீதமாக இருந்த ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் 2016-ல் 27.57 சதவீதமாகக் குறைந்துள்ளது. உள்நாட்டு தொழில் துறை வளர்ச்சி பாதிக்கப்பட்டதால், தொழில் துறைக்கு தேவையான இயந்திரப் பொருட்களின் இறக்குமதியும் வெகுவாக குறைந்துள்ளது. அதாவது GDPயில் கிட்டத்தட்ட பாதியளவுக்கு பங்களித்த வெளிநாட்டு வர்த்தகம் கால் பங்காக குறைந்துள்ளது. மேலும் ஏற்றுமதி வெகுவாகக் குறைந்ததால் நடப்பு கணக்குப் பற்றாக்குறை (Current Account Deficit) GDPயில் 2.6 சதவிகிதத்தை எட்டியுள்ளது.

சவாலாகும் வேலைவாய்ப்பின்மை

நாட்டின் வளர்ச்சி விகிதமும், முதலீடும் தொடர்ந்து குறைவதால் வேலைவாய்ப்பின்மை கடுமையாக உயர்வது தடுக்க முடியாததாக இருக்கிறது. NSSO மதிப்பீட்டின்படி வேலைவாய்ப்பின்மையின் உயர் விகிதம் 6.1 சதவீதம் என்று
கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வேலையின்மையாகப் பதிவாகியிருக்கிறது. 2019 ஜூன் மாத நிலவரப்படி வேலையின்மையின் விகிதம் மேலும் கடுமையாகி 7.9 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று C.M.I.E-ன் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.

மத்திய பட்ஜெட்

2019-20 நிலைமை இப்படி இருக்கும்பட்சத்தில், அரசின் கவனமெல்லாம் எந்தத் திசையில் பயணிக்கிறது என்றே தெரியாமல்தான் இருக்கிறது. சமீபத்திய பட்ஜெட்டில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கவும், மக்களின் வாங்கும் திறனை அதிகப்படுத்தவும் கார்ப்பரேட் வரி, மோட்டார் வாகனங்கள் மீதான உயர் ஜிஎஸ்டி குறைக்கப்படும் என்றும், கிராமப்புற, சாதாரண மக்களின் நுகர்வு செலவை உயர்த்த ஜிஎஸ்டி, பெட்ரோல்/டீசல் போன்றவற்றின் மீதான வரிச்சுமைகள் குறைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல் அடிப்படை கட்டுமான செலவுகள், நீர் பாசனங்களுக்கான செலவுகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்புகளுக்கெல்லாம் நேர்மாறாக பட்ஜெட்டில் எந்த சலுகையும் அறிவிக்கப்படாதது மட்டுமின்றி, பெரும்பணக்காரர்கள், வெளிநாட்டு முதலீட்டார்கள் மீது புதிய வரிகள் விதிக்கப்பட்டன. வாகனங்களின் பதிவு கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டது.

இதன் விளைவாக, பட்ஜெட்டுக்குப் பின் பங்குச் சந்தை தொடர் வீழ்ச்சியடைந்து 2 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேலாக வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறின. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் சரிந்தது. கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் ஒட்டுமொத்த செலவு 14.2 சதவீதத்திலிருந்து 12.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த நிலை கடந்த பட்ஜெட்டிலும் தொடரக் காரணம் பொருளாதார பின்னடைவின் காரணமாக அரசின் வரி வருவாய் குறைந்து நிதிப் பற்றாக்குறை அதிகமானதுதான். 2018-19ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் ஒட்டுமொத்த செலவு ரூ.24.6 லட்சம் கோடி. ஆனால் ஒட்டு மொத்த வருவாய் ரூ.17.3 லட்சம் கோடி.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கடன் ரூ.6.3 லட்சம் கோடி. பட்ஜெட்டுக்கு வெளியே பொதுத் துறை வாங்கும் கடன் ரூ.5.6 லட்சம் கோடி. அதாவது ரூ.17.3 லட்சம் கோடி ரூபாய் வருவாய் போதாமல், கிட்டத்தட்ட ரூ.12 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக கடன் வாங்கித்தான் அரசு தனது செலவினங்களைச் சமாளித்துக்கொண்டிருக்கிறது. இதுபோன்று ஏற்கனவே வாங்கப்பட்ட கடன்கள் மட்டுமே GDP-ல் 50 சதவிகிதத்தை எட்டியுள்ளன. இந்த கடனுக்கு கிட்டத்தட்ட ரூ.6 லட்சம் கோடி வட்டி மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. இதுவே மத்திய பட்ஜெட்டில் மிகப் பெரிய செலவாகவும் உள்ளது. இந்நிலையில், வெளிநாடுகளில் பத்திரங்கள் (Sovereign Bonds) வெளியிட்டு டாலரில் கடன் வாங்க அரசு முடிவு எடுத்திருக்கிறது. இந்த முடிவு பெருமளவிலான எதிர்ப்பையும் விமர்சனத்தையும் சந்தித்துள்ள இச்சூழலில், மத்திய அரசால் எந்தப் பெரிய முதலீடுகளையும் செய்ய முடியாது. எனவேதான் ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பை மட்டுமே நம்ப வேண்டிய சூழல் எழுந்துள்ளது.

பாஜகவின் அரசியலும் நாட்டின் பொருளாதாரமும்

2012-லிருந்து இந்தியப் பொருளாதாரம் சரிவை சந்தித்துவருகிறது. 2014 தேர்தலில் ‘வளர்ச்சிப் பாதையில் இந்தியா’ என்று வாக்குறுதியளித்து வெற்றியும் பெற்றது பாஜக. ஆனால், பொருளாதாரத்தை சீர்செய்யும் நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல், மதம் சார்ந்த விவகாரங்களில் முனைப்பு காட்டியது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பணபதிப்பு நீக்கத்தையும் அதைத் தொடர்ந்து 6 மாதத்தில் ஜிஎஸ்டியையும் அமல்படுத்தி கீழே விழும் பொருளாதாரத்தின் வேகத்தை மேலும் அதிகமாக்கி அதளபாதாளத்தில் தள்ளியது. வளர்ச்சி இதோ, அதோ என்று சொல்லி சொல்லியே 5 ஆண்டுகள் கடந்து, 2019 நாடளுமன்றத் தேர்தல் வந்துவிட்டது.

அப்போதும், தேசத்தின் நிதிநிலை பின்னுக்குத் தள்ளப்பட்டு, தேசப்பற்று பிரதானப்படுத்தப்பட்டது. பாகிஸ்தான் மீதான மோதல் முக்கியத்துவம் பெற்று அடிப்படை பொருளாதார பிரச்சினைகள் மறக்கடிக்கப்பட்டன. எல்லோருக்கும் ‘நல்ல காலம் பொறக்குது’ (Achhe din aane waale hain), ‘விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம்’, ‘2 கோடி வேலை வாய்ப்புகள்’ என்ற வாக்குறுதிகள் எல்லாம் முழக்கமாகவே முடிந்து போயின. ஆட்சியைப் பிடித்த பிறகு ‘5 டிரில்லியன் பொருளாதாரம்’ என்ற புதிய முழக்கம் வைக்கப்பட்டது. அதில் கவனம் செலுத்துவதற்குள் காஷ்மீர் விவகாரம் சூடுபிடிக்க மீண்டும் பொருளாதாரப் பிரச்சினைகள் பின்தள்ளப்பட்டன.

மாரடைப்புக்கு பாரசிட்டமால்?

நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிபுணர்கள் கணித்திருப்பது போல, மிகவும் மோசமடைவதற்குள் அரசு விழித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. நிதியமைச்சர் தொழிலதிபர்கள், உள்நாட்டு வெளிநாட்டு முத
லீட்டாளர்கள், வங்கித் துறையினர் போன்றவர்களை சந்தித்து கலந்தாலோசித்து வருகிறார் என்பது பாராட்டத்தக்க விஷயம். மேலும், சில குறிப்பிட்ட துறைகளுக்கு ஊக்கமும் வரிச் சலுகையும் வழங்க யோசித்து வருவதாக வரும் தகவல்களும் வரவேற்கத்தக்கவையே.

ஆனால், ஆக்கபூர்வமான சீர்திருத்தங்களும், கொள்கை முடிவுகளும்தான் தற்போதைய தேவையே தவிர, வட்டிக் குறைப்பு செய்வது மட்டுமே பொருளாதாரத்தை வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுக்கும் என்று சிந்திப்பது சரியான முடிவாக இருக்காது. நிதி ஆலோசகர் பசந்த் மகேஷ்வரி கூறுவதுபோல, ‘மாரடைப்பால் அவதியுறும் நோயாளிக்கு (இந்திய பொருளாதாரத்துக்கு) இரண்டு பாரசிட்டமால் மாத்திரைகளை மட்டும் கொடுத்தால் போதுமா’ என்றுதான் அரசைப் பார்த்து கேட்கத் தோன்றுகிறது.

Indian Economyமாரடைப்புஇந்திய பொருளாதாரம்ரிசர்வ் வங்கிசரியும் பொருளாதாரம்வெளிநாட்டு வர்த்தகம்வேலைவாய்ப்பின்மைமத்திய பட்ஜெட் மத்திய பட்ஜெட்பாஜக
Popular Articles

You May Like

More From This Category

More From this Author