Published : 19 Aug 2019 11:26 am

Updated : 19 Aug 2019 17:14 pm

 

Published : 19 Aug 2019 11:26 AM
Last Updated : 19 Aug 2019 05:14 PM

யுடர்ன் 33: பஜாஜ் ஆட்டோ குட் பை ஸ்கூட்டர்!

bajaj-auto

எஸ்.எல்.வி. மூர்த்தி
slvmoorthy@gmail.com

பஜாஜ் ஆட்டோ ஊழியர்கள்,பங்குதாரர்கள் ஆகியோரின் வருங்காலத்தைக் காக்கும் அறங்காவலனாகத் தனக்கு இருக்கும் பெருஞ்சுமை ராஜீவுக்குப் புரிந்தது. ``பல்சர்” என்பது நீண்ட நெடும்பயணத்தின் முதல் அடி மட்டுமே, வரப்போகும் நாட்கள் இன்னும் கடுமையானவை. இவற்றை எதிர்கொள்ள மன அமைதியும், தெளிவும் தேவை. யோகா கற்றுக்கொண்டார். தினமும் இரண்டு, மூன்று மணி நேரங்கள் உடல், மனப் பயிற்சி. இது மனதை ஒருமுகப்படுத்தி உழைக்க உதவியது. செயல்பாடுகள் அதிவேகமாய்.

2001 – ”பல்சர்” ஏற்றுமதி முயற்சிகள் தொடக்கம்.
2002 - ”பாக்சர் AR”, ”பாக்சர் CT” மாடல்கள் அறிமுகம்.
2004 – பல்சர் 150 cc, பல்சர் 180 cc.
2005 – அவெஞ்சர் (Avenger), டிஸ்கவர் 110 மாடல்கள்.

இவற்றின் வெற்றி, உற்சாகம் தந்தது. மோட்டார் சைக்கிள்களில் காலூன்ற வேண்டுமானால், புதிய புதிய மாடல்களைத் தொடர்ந்து அறிமுகம் செய்ய வேண்டும் என்னும் எண்ண ஓட்டம். இதே சமயம், ஸ்கூட்டர்களையும் ராஜீவ் கைவிடவில்லை. “கிரிஸ்டல்” (Kristal) என்னும் மாடலை அறிமுகம் செய்தார். படு தோல்விகண்டது. ஹோண்டாவோடு போட்டிபோட முடியாது, ஸ்கூட்டர்களை மறக்கவேண்டியது தான் என்று அவர் எண்ணம் சொன்னது, 2007 – ல், உத்ரகாண்ட் மாநிலத்தில் பஜாஜ் ஆட்டோ நான்காவது தொழிற்சாலை தொடங்கினார்கள்.

அதே வருடம். டிஸ்கவர் 110–ன் இடத்தில், XCD 125 மாடலை அறிமுகம் செய்தார். முதல் மாதம் 18,000 விற்பனை. அடுத்த சில மாதங்களுக்கு, மாதம் 28,000. விரைவிலேயே, தரம் பற்றிய எதிர்மறை விமர்சனங்கள். XCD 125 விற்கவில்லை. கைகளில் இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்கப் போனதுபோல், XCD 125, டிஸ்கவர் 110 – இரண்டும் போச்சு.

‘‘பட்ட காலிலேதான் படும். கெட்ட குடியே கெடும்” என்பதுபோல், வந்தது மாபெரும் சோதனை. அமெரிக்காவில் “இரண்டாம் நிலை அடமானச் சந்தைச் சிக்கல்” (Subprime Mortgage Crisis) என்னும் நிதித்துறைச் சிக்கல் வந்தது. அப்படியென்றால்…..
2005 காலகட்டத்தில், அமெரிக்க வங்கிகள், கடன் வாங்குவோரின் திருப்பிக் கொடுக்கும் திறனை மிஞ்சிய அளவில் கடன் கொடுத்தன. வாங்கியவர்களும், தங்கள் வருமான எல்லைகளுக்கு மீறி பெரிய வீடுகள் வாங்கினார்கள், ஏராளமான குடியிருப்புகளும், வீடுகளும் விரைவாக எங்கும் கட்டப்பட்டன. 2008-ல் குமிழி வெடித்தது. கடன் வாங்கியவர்களால் கடனையும், வட்டியையும் திருப்பித் தர இயலவில்லை. வங்கிகள் வீடுகளை ஜப்தி செய்தன. இருந்தவை அதிக வீடுகள். வாங்க ஆளில்லை.

ஆகவே, வீடுகளை விற்றாலும், கொடுத்த கடனைவிடக் குறைவாக வசூல். இதனால், வங்கிகள் திவாலாகும் நிலை. இந்த நோய் விரைவில் உலகம் முழுக்கப் பரவியது. இந்தியாவிலும். பெரும்பாலான கஸ்டமர்கள் டூ வீலர்களைத் தங்கள் சேமிப்பின் முழுப் பணத்திலிருந்து வாங்கவில்லை. முன்பணம் மட்டுமே கொடுத்தார்கள். மீதியை
நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கினார்கள். உலகளாவிய நிதிச் சிக்கலால், நிதி நிறுவனங்கள் கடன் தருவதைக் கட்டுப்படுத்தின. பஜாஜ் உட்பட, அத்தனை டூ வீலர் கம்பெனிகளின் விற்பனையும் அடிமட்டத்தில்.
இந்த மந்தநிலை ஒரு வருடம் நீடித்தது. 2009 –ல் நிலைமை சீராகத் தொடங்கியது. ஹீரோ ஹோண்டா இழந்த மார்க்கெட்டை உடனேயே பிடித்துவிட்டார்கள்.

இப்போது, ஹீரோவுக்கும், ஹோண்டாவுக்குமிடையே கருத்து வேறுபாடுகள். ஹோண்டாவின் ராயல்டியைக் குறைக்க வேண்டும் என்பது ஹீரோவின் குறைபாடு. உதிரி பாகங்கள் விற்பனையை ஹீரோ குடும்பக் கம்பெனியில் வைத்திருக்கிறார்கள். தங்களுக்குப் பங்கு தருவதில்லை என்பது ஹோண்டாவின் குற்றச்சாட்டு. 2011–ல் இருவரும் பிரிந்து தனிப்பாதைகள் போட்டார்கள். “ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ் லிமிட்டெட்”, “ஹீரோ மோட்டோகார்ப் லிமிட்டெட்” ஆனது. ஹோண்டாவும், தனியாக, ஹோண்டா மோட்டார் சைக்கிள்ஸ் அண்ட் ஸ்கூட்டர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் (Honda Motorcycle and Scooter India, Private Limited) ஆனது. இப்போது ராஜீவுக்கு, இரண்டுக்குப் பதிலாக மூன்று முக்கிய எதிரிகள் – ஹீரோ, ஹோண்டா, சுஸூக்கி. அத்தனை பேரும், தொழில்நுட்ப ராட்சசர்கள்.

மோட்டார் சைக்கிள்களில் முழு கவனம் செலுத்தினால் மட்டுமே, இவர்களை எதிர்கொள்ள முடியும் என்று ராஜீவ் நினைத்தார். 2009. ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாதங்களில், பஜாஜின் மொத்த ஸ்கூட்டர் விற்பனை 4,084 மட்டுமே. இந்தியாவில் 3,356. ஏற்றுமதி 728. இந்தியாவின் ஸ்கூட்டர் சக்கரவர்த்தி, 1970 - களிலேயே ஒரு லட்சம் ஸ்கூட்டர்கள் தயாரித்த கம்பெனி, சந்தித்த சோகம். முப்பத்தி இரண்டே வருடங்களில் வந்த சோக நிலை.
டிசம்பர் 9, 2009. வந்தது ராஜீவின் அதிரடி அறிவிப்பு, “எங்கள் எதிர்பார்ப்புப்படி ஸ்கூட்டர்கள் விற்பனை இல்லை.

மாதம் ஆயிரத்துக்கும் குறைவாக உற்பத்தி செய்யும் கட்டாயம். எனவே, மார்ச் 2010 – லிருந்து ஸ்கூட்டர் துறையை விட்டே முழுமையாக வெளியேறுகிறோம். இனிமேல், எங்கள் கவனம் மோட்டார் சைக்கிள்களில் மட்டும்தான். இன்று எங்களால் வருடத்துக்கு 30 லட்சம் மோட்டார் சைக்கிள்கள் தயாரிக்க முடியும். இதையே இரண்டு, மூன்று மடங்கு ஆக்க முடியும். ஆண்டவன் சம்மதித்தால், ஒரு நாள் உலகத்தின் நம்பர் 1 மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளராவோம்.”
நாடு முழுக்க எதிர்ப்புக் குரல்கள். மத்திம வயது இந்தியர்களுக்கு, ஸ்கூட்டர் என்றாலே பஜாஜ்தான்.

அத்தனை பேரும் அதிர்ச்சியில். 64 வயதுப் பாரம்பரியத்தை ராஜீவ் குழிதோண்டிப் புதைத்துவிட்டார் என்று காட்டமான விமர்சனங்கள். ஆதரவாக ஒரு குரலுமே இல்லை. துணிச்சலோடு ராஜீவ் தன் பாதையில் தொடர்ந்தார். புதிய, புதிய மாடல்களை உருவாக்கும் முயற்சி, கோடிக் கணக்கான முதலீடு. ராஜீவ் முடிவெடுத்து இன்று 10 வருடங்கள் ஓடிவிட்டன. 2018 – 19-ல் விற்பனை ரூ.30,250 கோடி. நிகர லாபம் ரூ.4,675 கோடி. சென்ற நிதியாண்டைவிட 15 சதவீதம் நிகர லாப வளர்ச்சி. அவர் முடிவு மிகச் சரியானது என்கிறார்கள் ஆதரவாளர்கள்.
முடிவு தவறானது என்று வாதாடும் எதிர்க் கட்சி எடுத்துவைக்கும் ஆதாரங்கள் இதோ:

மோட்டார் சைக்கிள்கள் விற்பனையில் கம்பெனிகளின் பங்கு பஜாஜ் இரண்டாம் இடம். ஆனால், அவர்களுக்கும், நம்பர் 1 ஹீரோவுக்குமிடையே எத்தனை பெரிய இடைவெளி? “இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் ராஜீவ்?” என்று கேட்கிறார்கள்.
ஸ்கூட்டர்களில் வருங்காலமே இல்லை என்று வெளியேறினாரே ராஜீவ். அங்கே இருக்கும் நிலவரத்தையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.
ஏப்ரல் 2018 முதல், மார்ச் 2019 வரையிலான ஸ்கூட்டர்கள் விற்பனை விவரங்கள் இதோ;

1999 –ல் ஹோண்டா, “ஆக்டிவா” ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்தார்கள். கடந்த 20 வருடங்களில், இந்தியச் சாலைகளில் இரண்டரைக் கோடி ஆக்டி
வாக்கள். ஸ்கூட்டர்கள் என்றால், பொதுமக்கள் நினைவுக்கு வருவது பஜாஜ்தான். ராஜீவ்
பொறுத்திருந்திருக்க வேண்டும். மோட்டார்
சைக்கிள்களில் முயற்சிகளை ஒருமுகப்படுத்திய
தும், ஸ்கூட்டர்களிலிருந்து வெளியேறியதும் அவசர முடிவு. சுலப வெற்றியை ஹோண்டாவுக்கு ராஜீவ் தாரை வார்த்துவிட்டார்.
இவற்றுக்கு ராஜீவ் ஆதரவாளர்களின் பதில்கள்:
ராஜீவ் முன்னால் இருந்தது மூன்று பாதைகள்தாம்:
1. ஸ்கூட்டர்களில் மட்டும் தொடர்வது.
2. ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள்கள் ஆகிய இரண்டு வகை வாகனங்களும் தயாரிப்பது.
3. மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே தயாரிப்பது.
ஹோண்டாவிடம் அதிநவீனத் தொழில் நுட்பம் இருந்தது. இதனால், இதுவரை முன்னணியில் இருந்த இத்தாலி நாட்டுக் கம்பெனிகளையே பின்தள்ளியது. அதற்கு ஈடான தொழில்நுட்பக் கூட்டாளி யாரும் பஜாஜுக்கு இருக்கவில்லை. அவரும் ஹோண்டாவின் “ஆக்டிவாவுக்கு” போட்டியாக “கிறிஸ்டல்” மாடலைக் களம் இறக்கினார். இது படுதோல்வி அடைந்த பிறகுதான், தன்னால், ஹோண்டாவுடன் போட்டி போட முடியாது என்னும் தீர்மானத்துக்கு வந்தார். இது தப்புதல் அல்ல. புறமுதுகிடும் ஓட்டமல்ல, போரில் பின்வாங்கும் ராஜதந்திரம்.
ஹோண்டா கார்கள் தயாரிப்பில் உலகில் நம்பர் 1. இதனோடு ஒப்பிட்டால் அவர்களுக்கு ஸ்கூட்டர்கள் சிறிய பிசினஸ். இதனால், ஸ்கூட்டர்களின் மேம்பாட்டுக்காகக் கோடிக் கோடியாகச் செலவழிக்கும் பணபலம் இருந்தது. பஜாஜுக்கு அத்தனை பணபலம் கிடையாது. ஸ்கூட்டர்களில் மட்டுமே தொடர்ந்திருந்தால், காணாமலே போயிருப்பார்கள். எனவே, முதல் பாதை சாத்தியமானதேயல்ல.
இதுவே முடியாதபோது, இரண்டு வகை வாகனங்களுக்காக பஜாஜ் எப்படிப் பல நூறு கோடிகள் முதலீடு செய்திருக்க முடியும்? ஆகவே,
இரண்டாம் பாதையும் முடியாத காரியம்.
ஆகவே, மோட்டார் சைக்கிள்களில் முழுக் கவனம் செலுத்திய ராஜீவின் முடிவு மட்டுமே சரியானது, சாத்தியமானது.
ராஜீவ் முடிவு சரியா தப்பா? பட்டி மன்றங்கள் இன்றும் தொடர்கின்றன. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

(புதிய பாதை போடுவோம்!)


பஜாஜ்ஆட்டோயுடர்ன்ஸ்கூட்டர்ஊழியர்கள்பங்குதாரர்கள்பல்சர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

cartoon

தளை அறுந்தது!

வெற்றிக் கொடி