

தென் கொரிய நிறுவனமான ஹுண்டாய், இந்தியாவில் விற்பனையாகும் நான்கு சக்கர வாகனங்களில் முன்னிலையில் இருக்கிறது. இதன் தயாரிப்புகளில் மிகவும் புகழ்பெற்ற மாடல் என்றால் ஐ10 மாடலை சொல்லலாம். இது 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஹுண்டாய் ஐ10 இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் பெருமை மிகு கார் என்றே சொல்லலாம்.
அடக்கமான, ஸ்டைலான குடும்பத்தினருக்கு ஏற்ற வகையிலான காராக ஐ10 இருப்பதே அதன் வரவேற்புக்கு காரணங்கள். ஆறு வருடங்கள் கழித்து ஐ10 2013-ம் ஆண்டில் மேம்படுத்தப்பட்டு இரண்டாம் பரிணாமத்தில் கிராண்ட் ஐ10 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.
அதற்கும் அதிக அளவில் வாடிக்கையாளர்கள் குவிந்தனர். இப்போது அதில் இன்னும் அதிகமான அம்சங்கள் சேர்க்கப்பட்டு மூன்றாம் தலைமுறை ஐ10 என்ற புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. அதன் பெயர் ஹுண்டாய் கிராண்ட் ஐ10 ‘நியோஸ்’ என வைக்கப்பட்டிருக்கிறது. நியோஸ் என்றால் இன்னும் அதிகம் என்று அர்த்தம்.
முந்தைய மாடலான கிராண்ட் ஐ10-க்கும், கிராண்ட் ஐ10 நியோஸுக்கும் இடையேயான மிக முக்கியமான வேறுபாடு என்றால் கிராண்ட் ஐ10 நியோஸில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக, இது பிஎஸ்6 தயாரிப்பு விதிகளின்படி உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்தியாவில் விற்கப்படும் கார்கள் உட்பட அனைத்து வாகனங்களும் பிஎஸ்6 விதிகளைப் பின்பற்றி தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அரசு கூறியிருந்தது. இந்நிலையில் ஹூண்டாயின் இந்த புதிய தயாரிப்பு பிஎஸ்6 விதிகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்டு உள்ளது.
இதன் வடிவமைப்பு அளவுகளை முந்தைய கிராண்ட் ஐ10 உடன் ஒப்பிடும்போது அளவில் சற்று பெரிதாகவே இருக்கிறது. இதன் நீளம் 3805 மிமீ; அகலம் 1680 மிமீ; உயரம் 1520 மிமீ; வீல்பேஸ் 2450 மிமீ. கிட்டத்தட்ட கிராண்ட் ஐ10 விட இதன் நீளம் 40 மிமீ; அகலம் 20 மிமீ; உயரம் 25 மிமீ என்ற அளவில் அதிகமாக உள்ளது. இதனால் நியோஸில் உட்புறத்தில் கூடுதல் இடவசதி கிடைக்கிறது. இந்த இடவசதி பயணத்தின் சவுகரியத்தைக் கூட்டுவதாக இருக்கிறது.
நியோஸ் மாடலின் வடிவமைப்பை பொருத்தவரை ஹுண்டாய் நிறுவனம் தனது புதிய சான்ட்ரோ மாடலை பின்பற்றியிருக்கிறது. பெரிய காஸ்கேடிங் கிரில், புரொஜக்டர் ஹெட்லைட்ஸ், ஆங்குலர் எல்இடி டிஆர்எல் ஆகியவை உள்ளன.
ஷார்க் ஃபின் ஆண்டெனா, குரோம் ஃபினிஷிங்கில் கதவு கைப்பிடிகள், டூயல் டோன் அலாய் வீல்கள் ஆகியவையும் இதில் உள்ளன. இந்தப் புதிய கிராண்ட் ஐ10 நியோஸில் டேஷ்போர்ட் முற்றிலுமாக புதிதாக உள்ளது. 8.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டேஷ்போர்ட் பேடுகள் எல்லாம் டெக்ஷர் ஃபினிஷிங் தரப்பட்டுள்ளது. இன்டீரியரில் சில விஷயங்கள் வென்யுவில் இருப்பதுபோலவே உள்ளன. வென்யுவில் இருக்கும் புளூ லிங்க் தொழில்நுட்பமும் இதில் பயன்படுத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இதுபோக மவுன்டட் கன்ட்ரோல்களைக் கொண்ட புதிய ஸ்டியரிங், வயர்லெஸ் சார்ஜிங், டிஜிட்டல்-அனலாக் கலந்த கலவையில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல் ஆகிய வசதிகளும் இதில் உள்ளன.
டீசல் மற்றும் பெட்ரோல் என இருவகை இன்ஜின்களிலும் கிராண்ட் ஐ10 நியோஸ் வெளிவருகிறது. 1197சிசி திறனைக் கொண்டிருக்கும் இதன் பெட்ரோல் என்ஜின், 114 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையில் 83 ஹெச்பி பவரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. லிட்டருக்கு 17 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும். அதேபோல் 1186 சிசியைக் கொண்டிருக்கும் டீசல் இன்ஜின், 190 நியூட்டன் மீட்டர் இழுவிசையில் 75 ஹெச்பி பவரை உற்பத்தி செய்யக் கூடியது. டீசல் இன்ஜின் மாடலில் லிட்டருக்கு 24 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும். இது 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது.
இந்தப் புதிய கிராண்ட் ஐ10 நியோஸ் பத்து விதமான வேரியன்ட்களில் கிடைக்க இருக்கிறது. இதன் பெட்ரோல் இன்ஜின் மாடலின் விலை ரூ.5.30 லட்சம் முதல் ரூ.7.70 லட்சம் வரையிலுமாக இருக்கக்கூடும். அதேபோல், இதன் டீசல் என்ஜின் மாடலின் விலை ரூ.6.45 லட்சம் முதல் ரூ.8.20 லட்
சம் வரையிலுமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.