

கடந்த வாரத்திய நிகழ்வுகளில் பிரதானமானது காஷ்மீர் விவகாரம் மற்றொன்று, ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைப்பு நடவடிக்கை. இவை இரண்டையும் பின்னுக்குத் தள்ளும் விதமாக இந்தியாவுடனான வர்த்தக உறவை துண்டிப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது விவாதப் பொருளானது.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் இந்த விஷயம் எதிர்பார்த்ததுதான். ஆனால் இத்தகைய முடிவை எடுப்பதற்கு முன் பாகிஸ்தான் சில விஷயங்களை திரும்பிப் பார்த்திருந்தால் தனது முடிவை மறு பரிசீலனை செய்திருக்கும்.
2018-19-ம் நிதி ஆண்டில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதியான பொருட்களின் மதிப்பு 206 கோடி டாலர். பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியான பொருட்களின் மதிப்பு 49 கோடி டாலர்.
இரு நாடுகளிடையிலான வர்த்தகத்தில் முறையான ஏற்றுமதி, இறக்குமதியை தவிர்த்து வேறு வழிகளில் நடைபெறும் ஏற்றுமதி, இறக்குமதி சற்று அதிகம். அதாவது பிற நாடுகள் வழியாக இத்தகைய ஏற்றுமதி இறக்குமதி நடைபெறும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும். இதே வழியை இந்திய நிறுவனங்களும் பின்பற்றும். இரு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் வரி விதிப்பை தவிர்ப்பதற்காக இத்தகைய வழிகளைக் கையாள்கின்றன.
எப்படியிருப்பினும் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றமதியாகும் பொருட்கள்தான் அதிகம்.பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பொருட்கள் அளவில் மிக மிகக் குறைவு. இந்தியாவிலிருந்து ரசாயனம், ஜவுளி பொருட்கள் அதிகம் ஏற்றுமதியாகின்றன. பாகிஸ்தானிலிருந்து கனிமம் சார்ந்த பொருட்கள் இறக்குமதி ஆகின்றன. இந்தியாவின் பொருளாதாரம் 2,90,000 கோடி டாலர். பாகிஸ்தானின் பொருளாதாரம் வெறும் 27,300 கோடி டாலர் தான்.
பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி 3.3 சதவீதம் மட்டுமே. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதம். எந்த வகையில் பார்த்தாலும் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை விட இந்தியப் பொருளாதாரம் 9 மடங்கு அதிகமானது என்பது கண்கூடு. அந்நியச் செலாவணி கையிருப்பு விஷயத்தில் பாகிஸ்தானின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அதன் அந்நியச் செலாவணி இருப்பு 1,740 கோடி டாலர். இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு 42,000 கோடி டாலராகும்.
பாகிஸ்தானின் அறிவிப்பால் இந்தியாவுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. மேலும் கடந்த பிப்ரவரி மாதமே பாகிஸ்தானுக்கு அளித்து வந்த மிகவும் விரும்பத்தக்க நாடு (எம்எஃப்என்) அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துவிட்டது. இதனால் பாகிஸ்தானுடனான வர்த்தகத்தின் மூலம் இந்திய நிறுவனங்களுக்கு கிடைத்து வந்த பலனும் கிடைக்காது. இதனால் பாகிஸ்தானுடனான வர்த்தகம் நிறுத்தப்பட்டதை ஏற்றுமதி நிறுவனங்கள் ஒரு பொருட்டாகவே கருதாது என்பது தெளிவான ஒன்றாகும்.
இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் பாகிஸ்தானுடனான வர்த்தக அளவு வெறும் 0.1 சதவீதம் மட்டுமே. பாகிஸ்தான் பெரும்பாலும் சீனா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) உள்ளிட்ட நாடுகளை நம்பியே இருக்கிறது. இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் 45 கோடி டாலர் மதிப்பிலான ஜவுளி மற்றும் பார்மா பொருட்களால் அந்நாட்டின் இரண்டு தொழில்களுமே ஸ்தம்பிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவுடனான வர்த்தக உறவை துண்டிப்பதால் பாகிஸ்தானுக்குத்தான் நஷ்டம். தூதரை திரும்ப அழைத்ததன் மூலம் பேச்சுவார்த்தைக்கான கதவையும் பாகிஸ்தான் மூடிக் கொண்டுவிட்டது. பல சமயங்களில் ஆத்திரத்தில் எடுக்கும் அவசர முடிவு ஆபத்தில் விளையும். இதை பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.