

ஆப் ரோடு பயணத்துக்குப் பேர் போன ஜீப் தனது நான்காம் தலைமுறை ரேங்லர் மாடலைத் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இது கூடுதலாக சில அம்சங்கள் சேர்க்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வெளிவந்துள்ளது. 5 கதவுகளைக் கொண்ட எஸ்யுவி சஹாரா டாப் வேரியன்ட்டில் மட்டுமே உள்ளது.
வாகனத்தின் தோற்றத்தை மேலும் ஸ்டைலாக மாற்ற பெல்ட்லைன் சற்று கீழிறக்கப்பட்டுள்ளது. இதில் ஜீப் என்றாலே நினைவுக்கு வரும் செவன் ஸ்லாட் முன்பக்க கிரில், எல்இடி டிஆர்எல் உடனான ஹெட்லைட், பெரிய டெயில் லேம்ப், ரியர் விண்ட்ஸ்க்ரீன் ஆகியவை உள்ளன. பின்பக்கத்தில் வரும் வாகனங்களைத் தெளிவாகப் பார்க்கும் வகையில் டெயில் கேட்டில் ஸ்டெப்னி வீல் கீழிறக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது.
2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 270 ஹெச்பி பவர், 400 என்எம் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இன்ஜின் 8 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பிஎஸ் 4 தரத்தில்தான் இன்ஜின் உள்ளது. நாளடைவில் பிஎஸ் 6 தரத்துக்கு அப்கிரேட் செய்யப்படலாம்.
உட்புறத்தில் புதிய ரேங்லர் அதிகபட்ச இடவசதியைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்பங்களும் முன்பைவிட அட்வான்ஸ்டாக உள்ளது. 7.0 அங்குல மல்டி-இன்ஃபோ டிஸ்பிளே, 8.4 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் ஸ்க்ரீன், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்ட் ஆட்டோ, டூயல் சோன் கிளைமேட் கன்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்டிங், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகியவை உள்ளன.
இவைபோக ரியர் ஏசி வென்ட், மல்ட்டிபிள் 12 வோல்ட் சாக்கெட், யுஎஸ்பி போர்ட்ஸ் ஆகியவையும் உள்ளன.
இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளேவில் ஆஃப் ரோடு தொடர்பாக பல்வேறு விதமான தகவல்கள் தரப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அம்சங்களாக இரண்டு காற்றுப்பைகள், ஏபிஎஸ் இபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ரோல் மிட்டிகேஷன், ட்ராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகிய வசதிகள் உள்ளன.
இந்தப் புதிய ஜீப் ரேங்லர் அமெரிக்காவில் டொலெடோ ஆலையில் உற்பத்தி ஆகிறது. அரசு அனுமதித்துள்ள வரம்புகளின்படி ஆண்டுக்கு 2500 வாகனங்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.63.94 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.