

இந்தப் பொருளுக்கு நான் கியாரண்டி,'' என்று விளம்பரத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் இனிமேலும் இதுபோன்று உறுதி அளிக்க முடியாது. அவர் உத்தரவாதம் அளித்த தயாரிப்பில் ஏதேனும் தவறு இருப்பதாகப் புகார் எழுந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மட்டுமல்ல விளம்பரத்தில் நடித்த நடிகர், நடிகையரும் சிறைக்கு செல்ல வேண்டியதுதான்.
கடந்த வாரம் மாநிலங்களவையில் நிறைவேறிய நுகர்வோர் பாதுகாப்பு மசோதா, இவ்வளவு காலம் ஏன் நிறைவேறாமல் இருந்தது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஒரு பொருளை வாங்கி பயன்படுத்தும் அல்லது ஒரு குறிப்பிட்ட சேவையைப் பெறும் எந்த ஒரு தனி நபரும் நுகர்வோரே. அதேசமயம் மறு விற்பனை பொருளை பெறுவோர் அல்லது வர்த்தக ரீதியில் சேவை அளிப்போர் நுகர்வோர் அல்ல என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமோ, நேரடியாகவோ, டெலி ஷாப்பிங் மூல
மாகவோ, வீடுகளுக்கு நேரடி விற்பனை மூலமான பொருள் விற்பனையைப் பெறும் அனைத்து தரப்பினருமே நுகர்வோர் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. நுகர்வோர்தான் எங்கள் எஜமானர் என விளம்பரப்படுத்தும் நிறுவனங்கள் வெறும் வார்த்தை ஜாலங்களால் மட்டுமே இனி நுகர்வோரை ஏமாற்ற முடியாது.
நுகர்வோருக்கு பல வகையான உரிமைகளை இந்த மசோதா அளித்துள்ளது. சந்தைப்படுத்தப்படும் பொருள், சேவை எதுவாக இருந்தாலும் நுகர்வோரின் உடலுக்கு அல்லது அவரது உடமைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக இருந்தால், விற்பனை செய்யப்படும் பொருளின் அளவு, தரம், விலை ஆகியவற்றில் மாறுபாடு இருந்தால், பிற நிறுவன பொருள்கள், சேவைகள் ஆகியவற்றின் விலைகள் மற்றும் சேவைகள் கிடைக்க வகை செய்ய வேண்டும், முறையற்ற வர்த்தக நடைமுறை ஆகியவற்றுக்கு உரிய தீர்வு அளிக்கப்பட வேண்டும் ஆகியன நுகர்வோரின் பாதுகாப்பு அம்சங்களாக புதிய மசோதாவில் இடம்பெற்றுள்ளன.
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) ஒன்று ஏற்படுத்தப்படும். இது நுகர்வோரின் உரிமைகள் மற்றும் நுகர்வோரின் நலன்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுக்கும். நுகர்வோர் நலனை மீறும் நடவடிக்கையில் ஈடுபடும் நிறுவனங்கள், பொய்யான விளம்பரங்கள் ஆகியவற்றை வெளியிடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும். தவறு செய்யும் நிறுவனங்கள் குறித்து விசாரிக்க ஒரு புலனாய்வு பிரிவும் தொடங்கப்படும் என புதிய நுகர்வோர் பாதுகாப்பு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விளம்பரங்கள் அது எந்த வகையாக இருப்பினும் அதாவது தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள், விளம்பர பலகை, இ-காமர்ஸ் விளம்பரம், நேரடி மற்றும் டெலி மார்க்கெட்டிங் விளம்பரங்கள் அனைத்துமே தவறாக இருப்பின் தண்டனை விதிக்க இந்த மசோதா வகை செய்துள்ளது. பொருட்கள் மற்றும் சேவை மீதான குறையுள்ள விளம்பரங்
களாயிருப்பின், நடவடிக்கை எடுக்க முடியும். இத்தகைய பொருள் தயாரித்த நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய விளம்பரத்தில் நடித்த பிரபலங்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இதேபோல தொடர்ந்து விளம்பரங்களில் தோன்றினால் ரூ.50 லட்சம் வரை அபராதமும் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கவும் வகை செய்துள்ளது. இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியபின் இது சட்டமாக நிறைவேறும். நிறுவனங்கள் இனி பொறுப்பின்றி செயல்பட முடியாது. பணம் கிடைக்கிறதென்று எந்த விளம்பரத்திலும் நடிக்கலாம் என பிரபலங்கள் நினைப்பதற்கு கடிவாளம் போடுவதாக இந்த மசோதா அமைந்துள்ளது. அனைத்துக்கும் மேலாக நுகர்வோருக்கு நன்மை தருவதாக இந்த மசோதா அமைந்துள்ளது வரவேற்கத்தகுந்ததே.