Published : 05 Aug 2019 10:22 AM
Last Updated : 05 Aug 2019 10:22 AM

எண்ணித் துணிக: லிஃப்ட்டா, படிக்கட்டா? தீர்மானிக்க வேண்டியது நீங்களே!

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com

ஸ்டார்ட் அப் ஐடியா கிடைத்தவுடன் பலர் முதல் வேலையாய் அந்த ஐடியாவிற்கு ஏற்கனவே மார்க்கெட் இருக்கிறதா என்று தேடுகிறார்கள். கேட்டால் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்கிறார்கள். போதாக் குறைக்கு சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் என்பார்கள். இப்பழமொழிகள் வாழ்க்கைக்கு வேண்டுமானால் பொருந்தும், வியாபாரத்துக்கு அல்ல. தொழிலில் சித்திரம் வரைய வரையத் தான் சுவர் எழும்பும்.

அகப்பையில் அள்ள அள்ள தான் சட்டி அட்சய பாத்திரமாய் மாறும்! தமக்காக தோன்றாவிட்டாலும் மற்றவர் புதிதாக ஒரு ஐடியா கூறினால் ‘இதற்கு மார்க்கெட் உண்டா? எத்தனை பெரிசு? எத்தனை வாடிக்கையாளர்கள் இருப்பார்கள்’ என்று அவரிடமே கேட்டு குடைந்து, இவரிடம் எதற்கு வேலை மெனெக்கெட்டு ஐடியா தந்தோம் என்றாகிவிடும் கூறியவருக்கு. ஏற்கெனவே உள்ள பொருள் பிரிவில் நுழைய நினைத்தால் அதன் மார்க்கெட் சைஸ் கிடைக்கும். ஆனால், புதிய பொருள் பிரிவு ஒன்றை உருவாக்கும் வகையில் ஐடியா கிடைத்தால் அதற்கு மார்க்கெட் தேடினால் எப்படி கிடைக்கும். 

அது புதிய பொருள் பிரிவாயிற்றே. இனிமேல் தானே மார்க்கெட்டையே உருவாக்க வேண்டும். உருவாக்குவது புதிய பொருள் பிரிவு எனில் அதுவரை அதுபோன்ற பொருள் மார்க்கெட்டில் இல்லை எனும்போது நீங்கள்தான் முதல் பிராண்ட். நீங்கள் உருவாக்கப் போவதுதான் மார்க்கெட். இல்லாத மார்க்கெட்டின் அளவை தேடி அது
இல்லை இது இல்லை என்று நுழையாமல் இருப்பது மடமை அல்லவா!

மார்க்கெட்டில் இன்று கலக்கி கல்லா கட்டும் பல ஸ்டார்ட் அப்ஸ் செய்தது சாட்சாத் இதைத்தான். இல்லாத மார்க்கெட்டில் நுழைந்தார்கள். புதிய பொருள் பிரிவை உருவாக்கினார்கள். அதில் நம்பர் ஒன்னாய் திகழ்கிறார்கள். ‘அமேஸான்’ என்ற ஐடியா துவங்கப்பட்ட போது ஆன்லைன் மார்க்கெட் அளவு என்ன? பூஜ்யம். அதில் லாக் இன் செய்து அமேஸான் ஒரு மார்க்கெட்டையே உருவாக்கியது. ‘ஓலா’ உருவாக்கப்பட்டபோது அதன்
மார்க்கெட் சைஸ் என்ன? சைபர்.

அதில் ஓலா ஓடி ஓடி ஒரு சாம்ராஜ்யத்தையே நிறுவியது. ‘பைஜு’ ஆரம்பிக்கப்பட்டபோது ஆன்லைன் கோச்சிங் மார்க்கெட்டின் மதிப்பு என்ன? ஸீரோ. பைஜூ படித்து படித்து ஒரு புதிய பொருள் பிரிவையே படைத்தது! வெற்றி பெற்ற ஸ்டார்ட் அப்-களைப் பட்டியலிடுங்கள். அவர்கள் கையில் டேப்பை வைத்துக்கொண்டு மார்க்கெட்டின் அளவை அளந்து கொண்டு நிற்கவில்லை என்பது புரியும். வாடிக்கையாளர் தேவையைத் தெரிந்து கொண்டு, அவர்கள் உபயோகிக்கும் பொருளை மேம்படுத்தும் வழியை புரிந்துகொண்டு அதற்கு தீர்வாய் புதிய பொருள் ஒன்றை அறிமுகப்படுத்தி ஒரு புதிய பொருள் பிரிவை உருவாக்கினார்கள். தங்கள் பிராண்டோடு பொருள் பிரிவையும் சேர்த்து விரிவாக்கினார்கள். விலாவரியாய் வெற்றி பெற்றார்கள்!

ஸ்டார்ட் அப்-க்கு அடிப்படைத் தேவை மார்க்கெட் அல்ல, வாடிக்கையாளர் மனம். அந்த மனம் குளிரும் வகையில் அவர் தேவையை பூர்த்தி செய்யும் பொருளை அவருக்கு விற்றால் மார்க் கெட் தானாய் உருவாகும். ‘க்ளோஸ் அப்’ என்ற ப்ராண்ட் ஜெல் என்ற பொருள் பிரிவைத் தேடிச் செல்லவில்லை. ஏனெனில், அந்த பிராண்ட் நுழைந்த போது ஜெல் என்ற மார்க்கெட்டே இல்லையே. க்ளோஸ் அப் முதல் ஆளாய் நுழைந்து புத்துணர்ச்சி ஜெல் என்ற மார்க்கெட்டை உருவாக்கியது. அதில் தனி ஆவர்த்தனம் ஆரம்பித்து இன்று வரை தனிக்காட்டு ராஜாவாய் பவனி வருகிறது!
இதை உணராதவர்கள்தான் கிடைக்கும் வாய்ப்பை மார்க்கெட் சைஸ் கொண்டு அளக்கிறார்கள். மனதையும் மனதில் உள்ள தேவையின் அளவையும் அளக்க மறுக்கிறார்கள்.

பெரிய கம்பெனிகள் பெரிய மார்க்கெட் எங்கே என்று தேடுவதில்தான் கவனம் செலுத்துகிறார்கள். இங்குதான் ஸ்டார்ட் அப் தன் சித்து வேலையை காட்ட முடியும். பெரிய கம்பெனிகள் பார்க்காத, பயணிக்காத புதிய திசையில் சென்று புதிய பொருள் பிரிவுகளை உருவாக்கி பெரிய கம்பெனிகளையே உருத்தெரியாமல் உருக்குலைக்க முடியும்.
உங்கள் ஸ்டார்ட் அப்பின் ஐடியாவை ஆராயுங்கள். புதிய ஐடியா தீர்க்க முயலும் தேவை பெருவாரியான வாடிக்கையாளர் மனதில் இருக்கிறதா என்று தேடுங்கள். அந்த தேவையை பூர்த்தி செய்யும் புதிய பொருளை உருவாக்கி அழகான பிராண்டாக்கி அதை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துங்கள்.

இப்படி சொல்வதால் வாடிக்கையாளர் மனதில் தேவையை உருவாக்கலாம் என்று சொல்லவில்லை. இதைப் பற்றி இப்பகுதியில் ஏற்கெனவே நாம் பேசியது நினைவிருக்கலாம். நீங்கள் அறிமுகப்படுத்த நினைக்கும் பொருளுக்கு மார்க்கெட் இல்லை என்றாலும் வாடிக்கையாளர் மனதில் தேவை இருக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள். தேவை இருக்கும் பட்சத்தில் உங்கள் புதிய பொருளை தைரியமாக மார்க்கெட்டில் இறக்குங்கள். மார்க்கெட் தானாய் உருவாகும். உங்கள் பொருள் ஜோராய் விற்கும். சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியும்! ஸ்டார்ட் அப் தொடங்கி வெற்றி பெற விரும்புவர்கள் புதிய பொருள் ஒன்றை அறிமுகப்படுத்தி படிக்கட்டில் கூட்டத்தோடு கூட்டமாக ஏறி உயர முயற்சிக்கலாம். அல்லது புதிய பொருள் பிரிவு ஒன்றையே உருவாக்கி
தனி ஆளாய் லிஃப்ட்டில் சென்று இலக்கை அடையலாம். சாய்ஸ் இஸ் யுவர்ஸ்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x