

பெனல்லி பிராண்டிலிருந்து ரெட்ரோ ஸ்டைல் ஸ்க்ராம்ப்ளர் பைக் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதற்கு லியான்சினோ 500 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் டீசர் வெளியாகி ஏற்கெனவே டூவீலர் பிரியர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறது. ஆகஸ்ட் 5 அதாவது இன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் மூன்று விதமான வேரியன்ட்கள் கிடைக்கின்றன. ஸ்டேண்டர்ட், ஸ்போர்ட் மற்றும் டிரெய்ல். ஆனால் இந்தியாவில் ஸ்டேண்டர்ட் வேரியன்ட் மட்டும்தான் இப்போதைக்கு வர உள்ளது.
இந்த லியான்சினோ 499.6 சிசி திறன் கொண்ட இன்ஜினைக் கொண்டது. இந்த ட்வின் சிலிண்டர் இன்ஜின் 47.6 ஹெச்பி பவரை 8500 ஆர்பிஎம்மில் வெளிப்படுத்துகிறது. மற்றும் 45 என் எம் டார்க் இழுவிசையை 5000 ஆர்பிஎம்மில் வெளிப்படுத்துகிறது. இந்த பைக் 17 அங்குல சக்கரங்களில் டியூப்லார் ஸ்டீல் டிரெல்லிஸ் ஃபிரேமில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஃபோர்க் 50 யுஎஸ்டி யூனிட்டாகவும், பின்பக்கம் மோனோஷாக்குமாக உள்ளது.
இதில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. முன்சக்கரத்தில் 320 மிமீ ட்வின் டிஸ்க் நான்கு பிஸ்டன் காலிப்பருடனும், பின் சக்கரத்தில் 260 மிமீ டிஸ்க் ஒரு பிஸ்டன் காலிப்பருடனும் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த பெனல்லி லியான்சினோ 500-ன் எடை 207 கிலோ. இதன் எரிபொருள் கொள்ளளவு 13.5 லிட்டர். மற்றபடி பெனல்லிக்கே உரிய ஸ்டைல், செயல்திறன் போன்றவற்றுக்கு இந்த லியான்சினோ 500 உத்தரவாதம் தரும் என்றே நம்பலாம். சர்வதேச சந்தையில் பெனல்லி லியான்சினோ 500 மாடலின் விலை கிட்டதட்ட பெனல்லி டிஆர்கே 502 மாடலின் விலைக்கு நெருக்கமாகவே உள்ளது. ஆனால், இந்தியாவில் இதே விலை இருக்காது என்று சொல்லப்படுகிறது. இரண்டு மாடலுக்குமான விலையில் வித்தியாசம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் பெனல்லி டிஆர்கே 502-வின் டெல்லி விற்பனையக விலை ரூ.5.10 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.