

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) வரும் அக்டோபரில் நூற்றாண்டைக் கொண்டாட உள்ளது. முதல் உலகப் போர் முடிவுக்கு வந்த பிறகு 1919-ல் ஏற்படுத்தப்பட்ட ஐஎல்ஓ இதுவரையில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, தவிர்க்க முடியாத அமைப்பாக திகழ்கிறது. ஏனெனில் இதை உருவாக்கிய லீக் நாடுகள் கூட்டமைப்பு 20 ஆண்டுகள் கூட தாக்குப்பிடிக்கவில்லை.
உலகம் முழுவதும் உழைக்கும் தொழிலாளர் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து பாடுபடும் சர்வதேச அமைப்பாக இன்றளவும் ஐஎல்ஓ செயல்பட்டு வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. முதல் உலகப் போர் முடிந்த சமயத்தில் உலகம் முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டமும், வறுமையும்தான் பிரதான பிரச்சினைகளாக இருந்தன. 1930-களில் ஏற்பட்ட இரண்டாம் உலகப் போர் பிரச்சினையை மேலும் தீவிரமடையச் செய்ததே தவிர குறைக்கவில்லை.
1944-ம் ஆண்டில் போருக்குப் பிந்தைய பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கையை உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதியங்கள் கையிலெடுத்த பிறகுதான் மாற்றங்கள் தென்பட ஆரம்பித்தன என்பதை மறுப்பதற்கில்லை. அரசியல்வாதிகள் முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதில் வேலை வாய்ப்பு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்தது. இதன் காரணமாக அரசுகள் தொழில்துறையை உருவாக்கி வேலை வாய்ப்பை பெருக்க ஆரம்பித்தன.
ஐஎல்ஓ அமைப்பில் 187 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. உறுப்பினர்களாக இல்லாத நாடுகளும் ஐஎல்ஓ வகுத்த கொள்கைகளை பின்பற்றுவதே இதற்குக் கிடைத்த மிகப் பெரும் வெற்றியாகத்தான் கருத வேண்டும். ஊழியர்களின் வேலை நேரம், ஊதியம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டதில் ஐஎல்ஓ அமைப்புக்கு கணிசமான பங்கு உள்ளது.
நூறாண்டுகளில் ஐஎல்ஓ எதிர்கொண்ட பிரச்சினைகள் ஏராளம். காலனி ஆதிக்கம் முடிவுக்கு வந்தது, கம்யூனிச சித்தாந்தம் தவிடுபொடியானது. முதலாளித்துவத்தில் அவ்வப்போது காணப்படும் ஏற்ற, இறக்கங்கள் என பல்வேறு பிரச்சினைகளையும் ஐஎல்ஓ சந்தித்துதான் வந்துள்ளது. ஆனால் நூறாண்டுகளைக் கடந்த ஐஎல்ஓ-வுக்கு சமீப காலமாகத்தான் நெருக்கடிகள் அதிகரித்துள்ளதாகத் தோன்றுகிறது.
குறிப்பாக இயந்திரமயமாக்கல் மிகப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இத்துடன் புவி வெப்பமடைவதால் வேலையிழப்பு அதிகரிக்கும் அபாயமும் உருவாகியுள்ளது. சமீபத்தில் ஐஎல்ஓ மேற்கொண்ட ஆய்வில் புவி வெப்பமடைவதால் இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் 3 கோடி விவசாயிகள் மற்றும் கட்டிட பணியாளர்கள் வேலையிழப்பார்கள் என எச்சரித்துள்ளது.
சர்வதேச அளவில் புவியின் வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் இதனால் உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கும் என்றும் ஆய்வு முடிவுகள் உணர்த்துகின்றன. இதன் காரணமாக உலகம் முழுவதும் 2.2 சதவீத பணியாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும் என்று எச்சரித்துள்ளது. புவி வெப்பமடைவதால் ஏற்படும் பொருளாதார இழப்பு 24,00,000 கோடி டாலர் என மதிப்பிட்டுள்ளது. பொன்விழா ஆண்டில் (50) அடியெடுத்து வைத்தபோது ஐஎல்ஓ அமைப்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ஆனால் நூறாண்டுகளைக் கடந்த பிறகுதான் ஐஎல்ஓவுக்கு தீவிரமான சவால்களே காத்திருக்கின்றன. ஒருபுறம் இயந்திரமயமாதலால் ஏற்படும் விளைவு, மற்றொருபுறம் இயற்கையால் ஏற்படும் பாதிப்பு. இவற்றிலிருந்து சமூகத்தை காக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஐஎல்ஓவுக்கும் உள்ளது. உரிய வழிகாட்டுதலை சர்வதேச சமூகத்துக்கு ஐஎல்ஓ வழங்கத் தவறினால் இது சம்பிரதாயமான அமைப்பாகவே மாறி, கால ஓட்டத்தில் காணாமல் போவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.