அலசல்: கடன் வாங்குவதெல்லாம் சாதனையா?
இந்திய அரசு வெளிநாடுகளில் கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் அந்நியச் செலாவணியில் நிதியைத் திரட்ட முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்குப் பல்வேறு பொருளாதார வல்லுநர்கள் முரண்பாடான கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டின் போது பேசுகையில் ‘இந்தியாவின் வெளிநாட்டு கடன் ஜிடிபியில் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. வெளிநாட்டு கடன் சந்தையைப் பயன்படுத்தி கணிசமாக நிதித் திரட்ட அரசு முடிவெடுத்துள்ளது’ என்றார். இந்தியா இதுவரையிலும் கடன் பத்திரங்களை வெளிநாடுகளில் வெளியிட்டதில்லை. முதன்முறையாக இந்த முயற்சியை எடுக்க உள்ளது.
அரசின் இந்த முடிவு குறித்து ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறுகையில், ‘வெளிநாடுகளில் கடன் பத்திரங்களை வெளியிடும் திட்டத்தின் மூலம் எந்தப் பலனும் இந்தியாவுக்குக் கிடைக்கப் போவதில்லை. மாறாக புதிய சிக்கல்கள்தான் வரப்போகிறது’ என்கிறார். குறைந்த அளவில் கடன் வாங்கினால் பிரச்சினை அல்ல. ஆனால், தேவைப்படும்போதெல்லாம் வாங்கிக்கொள்ளலாம் என்ற கட்டுப்பாடற்ற நிலையைப் பழக்கப்படுத்திக்கொள்ளக் கூடாது. அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஏனெனில் அந்நியச் செலாவணியில் வெளியிடப்படும் கடன் பத்திரங்களால் பெரிய அளவில் நாட்டுக்குப் பலனில்லை. பரிவர்த்தனைகளை மேற்கொள்ளப் போகும் வணிக வங்கிகளே இதனால் பலனடையப் போகின்றன என்று கூறியுள்ளார்.
இவர் மட்டுமல்ல முன்னாள் திட்டக் குழுவின் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவும் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இந்த முடிவால் இந்தியாவுக்குப் பலன்களை விட ஆபத்துகளே அதிகம் என்று எச்சரித்துள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகளை முந்தைய அரசுகள் யோசிக்காமல் இல்லை என்று கூறிய அலுவாலியா, இது பலனில்லாத நடவடிக்கை என்பதால்தான் முந்தைய காலங்களில் செயல்படுத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார். ரிசர்வ் வங்கி முன்னாள் துணை கவர்னர் ராகேஷ் மோகனும் இது ஆபத்தான முடிவு என்று கூறியுள்ளார்.
இப்படி பலரும் இந்தத் திட்டம் குறித்து எதிரான கருத்துகளைச் சொல்ல, சிங்கப்பூரைச் சேர்ந்த டிபிஎஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடுகளில் கடன் பத்திரங்கள் வெளியிட்டு நிதி திரட்டுவதால் ஏற்படும் விளைவுகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, அதற்குப் பதிலாக, உள்நாட்டில் வெளியிடப்படும் கடன் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் செய்யும் முதலீடுகளுக்கான வரம்பை உயர்த்தலாமே என்று ஆலோசனை கொடுத்துள்ளது.
பணவீக்கம் குறைவாக உள்ளது, சர்வதேச சந்தை சூழலும் சரியாக இல்லை, இந்த சமயத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கான நல்ல சந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். எனவே உள்நாட்டு கடன் பத்திரங்களில் வெளிநாட்டினரை முதலீடு செய்ய ஊக்குவிக்கலாம் என்று கூறியுள்ளது.
பொருளாதார வளர்ச்சி ஊக்கியாக அரசின் முதலீடு இருப்பது அவசியம்தான். ஆனால், அதை அந்நியச் செலாவணியில் கடனாகப் பெற்றுத்தான் முதலீடு செய்ய வேண்டுமா என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது. மேலும் இதுவரையிலும் வெளிநாட்டு கடன் அளவை குறைவாகவே வைத்திருப்பது ஏன் என்பது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும்.
ஏனெனில், அந்நிய செலாவணியில் முதலீடுகளைத் திரட்டுவது என்பது அபாயகரமானது. அதற்கான வட்டிச் சுமை என்பது ஒருபக்கம் இருந்தாலும், இந்திய நிதி நிலை என்பது அந்நிய செலாவணியின் கட்டுப்பாட்டில் விழுந்துவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்தியாவின் நிதி நிர்வாகத்தில் அனுபவம் உள்ள பல வல்லுநர்கள் இந்த முடிவுக்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ள நிலையிலும், அரசு தரப்பில் இதுகுறித்து எந்த எதிர்வினையும் இல்லை. வரும் செப்டம்பரில் ரிசர்வ் வங்கியும் அரசும் இறுதி முடிவை எடுக்க உள்ளன.
அரசின் கொள்கைகளில் தவறு இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டால் அதில் உள்ள உண்மைத் தன்மையை ஆராய்ந்து அதற்கேற்ப மாற்றங்களை மேற்கொள்வதே நல்ல அரசுக்கு அழகு. தனிநபர் ஒருவர் வாங்கும் கடன் அவரது குடும்பத்தை எப்படி பாதிக்குமோ, அதுபோலத்தான் அரசு வாங்கும் கடன் நாட்டு மக்கள் மீது விளைவுகளை ஏற்படுத்தும். எல்லாவற்றுக்கும் மேல் கடன் வாங்குவது பெருமையோ சாதனையோ அல்ல.
