

உலக அளவில் சமீப காலங்களில் வலிமையான பொருளாதார நாடாக விளங்கிவருகிறது சீனா. இந்தியா உட்பட பல உலக நாடுகள் சீனாவின் பொருளாதார வளர்ச்சி பாதையைப் பார்த்து வியந்து அதை பின்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சீனாவின் பொருளாதாரம் பல்வேறு நெருக்கடிகளைச் சந்திக்க தொடங்கியிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். முக்கியமாக சீனாவின் பலமாகக் கருதப்படும் ஏற்றுமதி சவால்களைச் சந்தித்துவருவதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
கடந்த பல வருடங்களாக நிலையான வளர்ச்சியை அடைந்துவந்த சீனாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கடந்த சில காலாண்டுகளில் குறைய ஆரம்பித்துள்ளது. 27 ஆண்டுகளில் இல்லாத அளவில் இரண்டாம் காலாண்டில் 6.2 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது. மட்டுமல்லாமல் 2018-ம் ஆண்டில் 6.6 சதவீதமாக இருந்த ஜிடிபி வளர்ச்சி இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 6.4 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இரண்டாம் காலாண்டில் 6.2 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. தொடர்ந்து வளர்ச்சி விகிதம் குறைந்துவருவதே பொருளாதார வல்லுநர்களின் எச்சரிக்கைக்குக் காரணமாக உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா சீனா மீது தொடுத்துள்ள வர்த்தகப் போர். வர்த்தகப் போரினால் இருநாடுகளும் மாறி மாறி அறிவித்துக்கொண்ட வரி விதிப்புகளால், இந்த இரு நாடுகள் மட்டுமல்லாமல், சர்வதேச வர்த்தக சந்தையும் நிலைகுலைந்துள்ளது. இரண்டு மிகப்பெரிய இராணுவங்கள் மோதிக்கொண்டால் ஏற்படும் விளைவுகள், இரண்டு பெரிய பொருளாதார நாடுகள் வர்த்தக ரீதியில் மோதிக்கொண்டால் ஏற்படும் விளைவுகளுக்கு எந்த வகையிலும் குறைவில்லை என்பதை அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் நிரூபித்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் சமரச பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருந்தாலும், இதுவரையிலும் இருநாடுகளின் சுமூக நிலையை எட்டுவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
இதனால் சீனாவின் ஏற்றுமதி சந்தை பெரிய அளவில் பாதிக்காவிட்டாலும், கணிசமாகப் பாதிக்கத்தான் செய்திருக்கிறது. இதன் பின்விளைவுகளாக வளர்ச்சி பாதிக்கப்பட்டு, முதலீடுகள் குறைய ஆரம்பித்துள்ளன. இதனால் வேலைவாய்ப்புகளும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கு சந்தையின் மீது நம்பிக்கை இருந்தால் மட்டுமே தொடர்ந்து உற்சாகமாக முதலீடு செய்வார்கள். சந்தை நெருக்கடியில் இருக்கும்போது முதலீடு செய்வதைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், போட்ட முதலீடுகளையும் எடுக்கப் பார்ப்பார்கள். இதனால் முதலீட்டுச் சந்தையும் பாதிக்கும். ஒட்டுமொத்த வளர்ச்சியில் ஏற்றுமதியைப் பெரும்பான்மையாக நம்பியிருக்கும் சீனா எல்லா நாடுகளோடும் சுமூகமான உறவைப் பேண வேண்டியது அவசியமாகிறது.
அதேசமயம் உள்நாட்டு சந்தையை ஸ்திரப்படுத்தும் வகையிலும், முதலீடுகளைத் தொடர்ந்து தக்கவைக்கும் வகையிலும் சீன அரசு சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. வட்டிவிகித குறைப்பு, வரி சலுகைகள், அரசு முதலீடு, வங்கிகளுக்கான வரம்புகளில் தளர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் பரவலாக முன்வைக்கப்படுகின்றன.
சீனா, அதன் மக்கள் தொகை நுகர்வு சந்தை அடிப்படையிலும், குறைந்த ஊதியத்தில் பணியாளர்கள் என்ற அடிப்படையிலும் பலமாக இருக்கிறது. ஆனால், இவை மட்டுமே நாட்டின் வளர்ச்சிக்கு உதவிவிடாது.
மேலும், ஜிடிபி வளர்ச்சி விகித எண்கள் மட்டுமே ஒருநாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சியைப் படம் பிடித்துக் காட்டுவதில்லை என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே சீன அரசு தனது பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளித்து மீண்டும் ஏற்றத்தை நோக்கி பயணிக்க என்ன செய்யப் போகிறது என்பதைத்தான் உலக நாடுகள் உற்றுநோக்கிக்கொண்டிருக்கின்றன.