Published : 15 Jul 2019 07:50 AM
Last Updated : 15 Jul 2019 07:50 AM

ஜீரோ பட்ஜெட் விவசாயம் சாத்தியமா?

பேராசிரியர் ம. உமாநாத்,
umanath@mids.ac.in 

பேராசிரியர் க. தாமஸ் பெலிக்ஸ்,
felixtheeconomist@gmail.com  

பேராசிரியர் ரா.பரமசிவம்
pazhani650@gmail.com

மண்ணின் வளத்தையும், நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தையும் காக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலானோர் மனதில் இருக்கத்தான் செய்கிறது. எனவேதான், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதியமைச்சர் ‘ஜீரோ பட்ஜெட் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்’ என்று குறிப்பிட்டது பலராலும் வரவேற்கப்பட்டது. அரசு எப்படியான முக்கியத்து வத்தை வழங்கப்போகிறது என்பதை காலம் சொல்லும் என்றாலும், ஜீரோ பட்ஜெட் விவசாயம் இந்தியாவில் எந்த அளவுக்கு சாத்தியமானது என்பதைத் தெரிந்துகொள்ள
வேண்டியது அவசியம். முதலில் ‘ஜீரோ பட்ஜெட்’ என்றால் என்னவென்று பார்ப்போம்.

கனிம உரங்கள் உட்பட எந்த இடுபொருளும், உற்பத்தி செலவும் இல்லாமல் அனைத்து வகையான பயிர்களையும் சாகுபடி செய்வதே ஜீரோ பட்ஜெட் விவசாயம். அதாவது, இந்த வகை வேளாண் வழிமுறையில் ஒரு தாவரத்தின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்தும் அவற்றின் வேர் மண்டலத்தைச் சுற்றியே கிடைக்கின்றன. மண், காற்று, நீர் மற்றும் சூரிய சக்தியிலிருந்து நேரடியாகவே பயிர்கள் அதற்குத் தேவையான சத்துக்களை எடுத்துக்கொள்கின்றன. ஆகையால் வெளியில் இருந்து உரங்கள் போன்ற இடுபொருட்களை சேர்க்க வேண்டிய அவசியமில்லை.

இதற்கு உதாரணமாக காடுகளில் உள்ள செடி, கொடி, மரங்களை காட்டுகிறார்கள். அவைகளெல்லாம் எந்த தொழில்நுட்பமும் இல்லாமல்தான் வளர்கின்றன, பூக்கின்றன, காய்க்கின்றன என்கிறார்கள். ஜீரோ பட்ஜெட் வேளாண்மையின் முக்கியம் சங்களாக கருதப்படுவது, மண்ணில் நுண்ணுயிர்களின் பங்களிப்பை அதிகப்படுத்தி, நொதித்தல் போன்ற ரசாயன வினைகளைத் தூண்டி பயிருக்கு அதிக அளவு சத்துக்களை சேரச் செய்வதாகும். இதற்காக நாட்டு மாட்டின் சாணம், மாட்டு சிறுநீர், சர்க்கரை, பருப்பு மாவு போன்றவை உபயோகப்படுத்தப்
படுகின்றன. இலை, தழைக்கூளங்களை வைத்து மல்ச்சிங் (Mulching) செய்வதன் மூலம் களைகளை கட்டுப்படுத்தலாம்.இது மண்ணின் நீர் வைத்திருக்கும் திறனையும் மேம்படுத்துகிறது. மேலும் இதன் பின்னணியில் உள்ள தத்துவம் விவசாயிகளை பொருளாதார தற்சார்புடையவர்களாகவும், சுற்றுச் சூழல் தன்னிறைவுக்கானதாகவும் மற்றும் வேளாண்மை ஊரகங்களை நோக்கிய பொருளாதார வளர்ச்சி சக்தியாகவும் மாற்ற வேண்டும் என்பதே ஆகும்.

ஆனால், விவசாயம், வறுமை, ஏழைகள் என்று வரும்போதெல்லாம் பெரும்பாலும் உணர்வுபூர்வமான கருத்தியலே உருவெடுக்கிறது. தவிர, நடைமுறை நிஜத்தை, கசப்பான உண்மையை பெரும்பாலானோர் கவனத்தில் எடுத்துக்கொள்வதே இல்லை. ‘ஜீரோ பட்ஜெட் விவசாயமும்’ அப்படித்தான். எல்லோருக்கும் இது நல்லமுறையாகத்தானே இருக்கிறது, எந்தவிதமான செலவும் இல்லாமல் மகசூல் கிடைப்பது சிறந்ததுதானே என்று தோன்றும். உண்மைதான், ஆனால், அது ஒரு தனி நபருக்கோ அல்லது சிறு குழுக்களாக இருக்கும்வரையில் பயனளிக்கும்.

இதுவே ஒரு பெரிய சமுதாயத்துக்கு அல்லது ஒரு நாட்டிற்கு என்று வரும்போது இந்த ஜீரோ பட்ஜெட் விவசாயம் தேவையான உணவு உற்பத்தியை கொடுக்குமா? இதன் மூலம் உணவு பஞ்சத்தை தீர்க்க முடியுமா? வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு தேவையான உணவுப்பொருளை உற்பத்தி செய்ய முடியுமா? போன்ற கேள்விகளைத்தான் இங்கு பெரும்பாலான அறிவியல் மற்றும் பொருளாதார அறிஞர்கள் எழுப்புகிறார்கள். காரணம், பசுமைப்புரட்சிக்கு முன்னர் இவ்வாறான இயற்கை உற்பத்தி முறைதான் வழக்கத்தில் இருந்தது. மாட்டுச்சாணம், இலை, வைக்கோல் மக்குகள், ஏரி, கண்மாய்களில் இருக்கும் கரம்பை போன்றவை மட்டுமே இடுபொருட்களாக பயன்படுத்தப்பட்டன.

ஆனால், இந்த உற்பத்தி முறை உணவு பற்றாக்குறையைப் போக்க வழிவகை செய்யவில்லையே! உதாரணத்துக்கு, 1900-லிருந்து 1960-க்குள், நெல் மற்றும் கோதுமைகளின் ஒரு ஹெக்டர் உற்பத்தித்திறன் சராசரியாக ஒரு டன்னுக்கும் குறைவாகவே இருந்திருக்கிறது. இதன் மூலம் ஜீரோ பட்ஜெட் பயிர் சாகுபடியின் மூலம் 1 டன்னுக்கு அதிகமாக உற்பத்தி செய்ய முடியவில்லை என்பது தெரிகிறது. நாடுமுழுவதும் ஜீரோ பட்ஜெட் வேளாண்மை செய்துகொண்டிருந்த காலத்தில்தான், இந்தியா உணவு தானிய உற்பத்தியில் பற்றாக்குறையை  சந்தித்தது. 1930-களில், மக்கள் தொகையில் 39 சதவீதம் பேர் மட்டுமே அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் பெற்று நன்கு வளர்ந்துள்ளனர், 41 சதவீதம் பேர் மோசமாக ஊட்டமளிக்கப்பட்டுள்ளனர், 20 சதவீதம் பேரின் நிலை மிகவும் மோசம். சுமார் 2.5 மில்லியன் மக்கள் ரிக்கெட் மற்றும் 3.5 மில்லியன் மக்கள் இரவு குருட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டனர் என்று J.W.D மேகவ் எனும் ஆங்கிலேய மருத்துவர் பதிவு செய்திருக்கிறார்.

நவீன சாகுபடி உத்திகள் பயன்படுத்தாத காலத்தில்தான் பஞ்சத்தின் கொடுமையை சமாளிக்க தெரியாமல் மக்கள் கொத்து கொத்தாக சாக வேண்டியிருந்தது. 19-ம் நூற்றாண்டின் இறுதியில் மட்டும், இந்தியா 24 பெரிய பஞ்சங்களை சந்திக்க நேர்ந்துள்ளது. இதன் விளைவாக லட்சோப லட்சம் மக்கள் இறந்துள்ளனர். 1876-78-ம் ஆண்டின் தென்னிந்திய பஞ்சமும், 1877-ஆம் ஆண்டின் மெட்ராஸ் பஞ்சமும் பருவமழையின் பற்றாக்குறையால் விளைந்தனவே.
மேலும், பசுமை புரட்சிக்கு முன்னர், இந்தியா அமெரிக்காவிலிருந்து பி.எல் 480 ஆல் நிதியளிக்கப்பட்ட கோதுமையை இறக்குமதி செய்துகொண்டிருந்தது.

ஆனால், 1960-களில் அமெரிக்கா இந்தியாவுக்கு செய்துவந்த கோதுமை ஏற்றுமதியை நிறுத்த முடிவு செய்த பின்பு, நாட்டில் உணவு பாதுகாப்பு ஒரு முக்கிய பிரச்சினையாக மாறியது. இந்த பிரச்சினை இந்தியாவின் வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கு உணவளிக்க முடியுமா என்கிற ஐயத்தை ஏற்படுத்தியது. பெருகிவரும் மக்கள் தொகைக்கான அரிசி மற்றும் கோதுமையின் தேவையை ஈடு செய்ய இரண்டு வழிகள்தான் உள்ளன.

1. பயிர் உற்பத்தி பரப்பை அதிகப்படுத்துதல் அல்லது 2. மகசூல் திறனை அதிகரித்தல். இதே கணக்குதான் எல்லாவிதமான பயிர்களுக்கும். மக்கள் தொகையின் அதிகரிப்பால் ஏற்கெனவே பெருமளவிலான விளை நிலங்கள் குடியிருப்புகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாறிக்கொண்டிருக்கின்றன. இந்த சூழலில், மக்கள் தொகை அதிகரித்துவிட்டது என்பதற்காக இயற்கை கருணை காட்டி அரிசியின் உற்பத்தி திறனை 1 டன்னிலிருந்து 2, 3, 4 டன்களாக தானாகவே அதிகரித்து கொள்ளுமா என்ன? பயன்பாடும், உருவாக்கமும் சமநிலையில் இருந்தால் மட்டுமே இயற்கையோடு ஒன்றி வாழ்தல் என்பது சாத்தியம்.

அந்த சமநிலையை குலைத்துவிட்ட பிறகு மனிதன் தன்னை உயிரோடு வைத்துக்கொள்ள புதிய வழிகளைத் தேடித்தான் ஆகவேண்டியிருக்கிறது. எனவே குறைந்த உற்பத்தி திறனுள்ள விதைகளை அதிக பரப்பளவில் பயிரிட்டு உற்பத்தி செய்வதை விட, அதிக மகசூல் தரும் பயிர் ரகங்களை குறைந்த பரப்பளவில் பயிரிட்டு அதிக அளவு உணவு பொருட்களை உற்பத்தி செய்துகொண்டிருக்கிறோம். சீனாவை முந்தி முதலிடம் பிடிக்க காத்திருக்கும் இந்தியா, தனது எதிர்கால மக்கள் தொகைக்கு தேவையான உணவு பொருட்களை இப்படித்தான் உற்பத்தி செய்து சமாளிக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய பெரும் சவாலுக்கு அரசியல் கொள்கையாக உதித்ததுதான் பசுமை புரட்சி என்கிற மாபெரும் அறிவியல் சித்தாந்தம். பசுமை புரட்சியின் விளைவாக நாட்டின் உற்பத்தித் திறன் மற்றும் மொத்த உணவு உற்பத்தி பெருமளவு அதிகரித்தது.

1960-லிருந்து 2000-க்குள், இந்தியா போன்ற வளரும் நாடுகளில், கோதுமை மற்றும் அரிசி போன்றவற்றின் உற்பத்தி திறன் முறையே 208, 109 சதவீதம் அதிகரித்துள்ளன. இதனால் 1990-க்கு முன்னமே உணவு தானிய உற்பத்தி
யில் இந்தியா தன்னிறைவு பெற்றுவிட்டது. மட்டு மல்லாமல் அடுத்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்
அளவுக்கு உணவு உற்பத்தி பெருகியது. இந்த அதிக உற்பத்தியின் காரணமாக உணவு பொருட்களின் விலை கணிசமாக குறைந்து ஏழைமக்களும் வாங்கும் நிலை உருவானது. ஒருகாலத்தில் பெரும் பணக்காரர்களுக்கான உணவாக இருந்த அரிசி எல்லோருக்குமானதாக மாறியது. இதே காலகட்டத்தில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்களின் பங்கும் கணிச மாக சரிந்தது. பிறக்கும்போதே குழந்தைகளின் ஆயுட்காலம் இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும், குழந்தை இறப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய மாபெரும் மாற்றத்தை உண்டாக்கிய பசுமைப்புரட்சிக்கு மாற்றாக ‘ஜீரோ பட்ஜெட் விவசாயம்’ ஒருபோதும் இருக்க முடியாது. ஏனெனில், அதிக மகசூல் தரும் பயிர் ரகங்களுக்கு அதிகளவு நுண்ணூட்டங்கள் உட்பட நவீன தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன. இது ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் சாத்தியமில்லாத ஒன்று.
மேலும், இந்தியாவைப் பொருத்தவரை, இன்னமும் ஊட்டச்சத்து, நுண்ணூட்டசத்து குறைபாடு போன்றவை ஒரு பெரும் சுமையாகவே உள்ளன. குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் இந்த ஊட்டச்சத்து குறைபாடு
பிரச்சினைகளால் அடிக்கடி பாதிக்கப்படுகின்றனர்.

மிதமாக உழைக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கே சராசரியாக ஒரு நாளைக்கு 2730-லிருந்து 2230 கிலோ கலோரி வரை ஆற்றல் தேவைப்படுகிறது. ஆனால் ஊரக, நகர்ப்புற குடும்பங்கள் இன்னும் தேவைக்கு குறைவாகவே உட்கொண்டிருப்பதை தேசிய மாதிரி புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் அறிக்கை, 2017-ன்படி, சுமார் 15 சதவீத மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர், 39 மற்றும் 20 சதவீத ஐந்து வயத்திற்குட்பட்ட குழந்தைகள் முறையே குள்ளமாகவும், உயரத்திற்கேற்ற எடையை பெறாமலும் இருக்கின்றனர்.

மேலும், இளம் பருவத்தினரிடையே ஊட்டச்சத்து பற்றாக்குறை கணிசமாக குறைந்திருந்தாலும், ஆண் குழந்தைகளிடையே அதிக எடை பிரச்சினை 1999 ல் 1.8 சதவீதத்திலிருந்து 2015 -ம்
ஆண்டில் 7.5 சதவீதமாகவும் மற்றும் பெண் குழந்தைகளுக்கு 1.9 சதவீதத்திலிருந்து 6.1 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. இதேபோல், உடல் பருமன், நீரிழிவு மற்றும் அதிக ஊட்டச்சத்து பிரச்சினைகள் அனைத்து வகையான மக்களையும் அதிகம் பாதித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் உணவு உற்பத்தியை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டாலும், பெரும்பாலான ஊர்புற மக்கள் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பில் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மொத்தத்தில், இந்தியாவின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கினர் இன்னும் நீண்டகால பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 2017 உலகளாவிய பசி குறியீட்டில் 119 நாடுகளில் இந்தியா 100-வது இடத்தில் உள்ளது. இது நாம் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பில் இன்னும் கடக்கவேண்டிய தூரங்கள் நிறைய இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.
இந்தியாவில் மக்கள் தொகை ஆண்டுக்கு 1.1 சதவீதம் என்ற விகிதத்தில் அதிகரித்து வருகிறது. இது உணவு பொருட்களின் தேவையை இப்போது இருப்பதைவிட 70 சதவீதம் அதிகரிக்கும். இதை பூர்த்தி செய்யவேண்டுமானால், தானிய உற்பத்தி ஆண்டுக்கு குறைந்தது 4.2% ஆக இருக்க வேண்டும், ஆனால் இது தற்போதைய விகிதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும். மேலும், மக்கள்தொகை பெருக்கத்தினால், நீர், நிலம் போன்ற இயற்கை வளங்களுக்காக, விவசாயத் துறை மற்ற துறைகளான தொழில், கட்டுமானம், சாலைகள் அமைத்தல் ஆகியவற்றோடு அதிகமாக போட்டி போடவேண்டிருக்கும். மேலும் காலநிலை மாற்றம், நிலத்தடி நீர் குறைவு போன்றவையும் விவசாயத்துக்குப் பெரும் சவாலாக இருக்கும்.

பசுமை புரட்சி இப்போதைக்கு இந்தியாவை உணவுப் பற்றாக்குறையிலிருந்து மீட்டு தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றியிருந்தாலும், இதில் நெல் மற்றும் கோதுமை பயிர்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தரப்பட்டு தொடர்ந்து ஒரே நிலத்தில் பயிரிடப்பட்டது. மேலும் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டதால் மண் வளம் இழப்பு, சுற்றுச்சூழல் மாசுபாடு, நீர் மாசுபாடு, காலநிலை மாற்றம் ஏற்பட காரணமாகியிருக்கின்றன. இதன் காரணமாக கடந்த இருபது ஆண்டுகளில் உணவு உற்பத்தி திறனில் தொய்வு ஏற்பட்டிருப்பதையும் மறுக்க முடியாது. இவ்வளவு தடைகள், கட்டுப்பாடுகளை வைத்துக்கொண்டு சுற்றுசூழலை மாசுபடுத்தாமல், தேவையான உணவுப்பொருளை உற்பத்தி செய்ய சர்வரோக நிவாரணியாக எந்த வழிமுறையையும் நாம் கொண்டிருக்கவில்லை.

ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்துக்கு மாறுவது இருக்கின்ற சிக்கல்களை மேலும் வலுப்படுத்துமே தவிர ஒருபோதும் உணவு பாதுகாப்புக்கு தீர்வாகாது. இத்தகைய வழிமுறையை ஊக்குவிப்பதற்கு பதிலாக பின்வரும் பிரச்சினைகளை களைய முயற்சிகள் மேற்கொள்வதே சிறந்தது.
1. உணவு வீணாவதைக் குறைக்க வேண்டும். உணவு வீணாவதில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பங்கு உண்டு. மேலும் இந்தியாவில் 25 சதவீதத்துக்கும் அதிகமான உணவுப்பொருட்கள் விவசாயிகளிடமிருந்து நுகர்வோருக்கு செல்வதற்குள்ளாகவே வீணாகின்றன. 2. ஆரோக்கியமான, பலவகை உணவு முறைக்கு மாறுவது. ஏனெனில், அரிசி, கோதுமை முதன்மையாக கொண்ட உணவு முறை மற்ற பயிர்களான கேழ்வரகு போன்றவற்றின் பயன்பாட்டை சுருக்குகின்றன.

இவைகள் குறைந்த நீரில் வறட்சி தாங்கி வளரக்கூடியவை. 3. பயிர்களின் உற்பத்தி திறனை அதிகரித்தல், 4. கால்நடை மற்றும் மேய்ச்சல் உற்பத்தித்திறனை அதிகரித்தல்.  5. மண் மற்றும் நீர் நிர்வாகத்தை மேம்படுத்துதல், 6. நிலத்தை தரிசாக விட்டுவிடுவதைத் தவிர்ப்பது. 7.காலநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு பயிர் செய்தல். 8. வறண்ட நிலங்களை மீட்டெடுத்து பயன்படுத்துதல். 10. சரியான பயிர் மேலாண்மை மூலம் வேளாண் உற்பத்தியில் இருந்து பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல். 11. விளைச்சல் குறைந்தாலும், அதிகமானாலும் முதலில் பாதிக்கப்படுவது விவசாயி மட்டுமே, எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

சென்ற ஆண்டு நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை பால் ரோமர் சொல்வதுபோல இந்த பூமியில் நாம் எந்த வளத்தையும் புதிதாக உருவாக்கப் போவது இல்லை. அனைத்தும் இங்கு ஏற்கனவே இருக்கின்றவை. ஆனால் நாம் செய்ய வேண்டியது அவற்றின் உருவத்தை, பருமனை அல்லது அதன் பயனை நமது வசதிக்கேற்ப மறுசீரமைத்துக் கொள்வதுதான். இதற்கு புதிய எண்ணங்கள் உருவாக வேண்டும். அதன் மூலம் புதிய கண்டுபிடுப்புகளை அதிகப்
படுத்தி நமக்கு தேவையான மறுசீரமைப்புகளை செய்துகொள்ளமுடியும். மேலும், புதிய எண்ணங்களை வார்த்தெடுப்பதன் மூலம் பருவநிலை மாற்றம், உலகம் வெப்பமயமாதல் மற்றும் சுற்றுப்புறச் சூழல் மாசுபாடு போன்ற
வற்றை கட்டுப்படுத்தக்கூடிய அளவுக்கு தொழில்நுட்பத்தையும் மற்றும் புத்தாக்கத்தையும் நம்மால் உருவாக்க முடிகிறது என்கிறார்.

இவ்வாறு வேளாண்மை மற்றும் உணவு சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்கு போதிய கல்வி, அதனை சார்ந்த கட்டுமானங்களை செம்மைப்படுத்தினாலே பல சிக்கல்களுக்கு தீர்வுகள் கிடைக்கும். இந்த உலகில் மனித முயற்சியில் விளைந்த எந்த ஒரு பொருளும் செயற்கையானதுதான். அப்படிப்பார்த் தோமானால் உழவு தொழில் என்பது முற்றிலும் செயற்கையான ஒன்றாகும். யதார்த்தம் இப்படியிருக்கையில், அறிவியல் தொழில்நுட்பங்
களுக்கு முக்கியம்தராமல், கற் காலத்தைப்போல வேட்டையாடி, உணவு சேகரித்து இயற்கையாக வாழ்வதுதான் சிறந்தது போல மனித நாகரிகத்தை பின்னோக்கி இழுப்பது உற்பத்தி, நுகர்வு ஆகியவற்றில் பன்முகத் தன்மை
கொண்ட இந்திய தேசத்துக்கு பொருந்தாது. 

வருமானம் தரும் ஜீரோ பட்ஜெட் விவசாயம் 

என்னதான் பசுமைப்புரட்சி பஞ்சத்தை நீக்கியிருக்கிறது, பலரின் பசியைப் போக்கியிருக்கிறது என்றாலும், ரசாயனக் கலப்பால் உணவுப் பொருட்களில் நச்சு கலந்து உடல் ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதித்துக்கொண்டிருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அந்த வகையில் இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தியாகும் பொருட்களுக்குத் தற்போது பரவலான வரவேற்பு அதிகரித்துள்ளது. ஏனெனில் பலருக்குத் தங்கள் உடல் நலம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

நாம் என்ன உண்கிறோமோ அதுவே நாம் என்பது பலருக்குப் புரியத் தொடங்கியிருக்கிறது. ஆனாலும், இந்த இயற்கை விவசாயப் பொருட்களுக்கான விலை என்பது மற்றவற்றைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதால் பணம் உள்ளவர்களுக்கான பொருளாகவே மாறிக்கொண்டிருக்கிறது. நல்ல வருமானம் கிடைக்கும் சூழல் உருவாகியிருப்பதால் பல விவசாயிகள் இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கவும் தயாராகியுள்ளனர்.

நம்மாழ்வர் போன்றோர் பலகாலமாக அறிவுறுத்திய நிலையிலும் புரிந்துகொள்ளாதவர்கள்கூட அதற்கான சந்தையைப் பார்த்து இயற்கை விவசாயத்தை விரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட விதர்பாவிலும் ஒரு விவசாயி நாடறிந்த வெற்றியை இயற்கை விவசாயத்தின் மூலம் அடைந்திருக்கிறார்.

சுபாஷ் பாலேகர் என்ற அந்த விவசாயி இயற்கை விவசாயம் குறித்து பல்வேறு பயிற்சி கூட்டங்கள் மூலமும் புத்தகங்கள் மூலமும் நாடு முழுவதும் கொண்டு சேர்த்திருக்கிறார். அதற்காக அவருக்கு பத்ம  விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் அரிசி பணக்காரர்களுக்கான உணவாக இருந்தது. இன்று அது எல்லோருக்குமானதாக மாறியிருக்கிறது. அதேபோல் இயற்கை விவசாயமும் பணக்காரர்களுக்கானதாக மட்டுமல்லாமல், எல்லோருக்குமானதாக மாறுமா என்பதுதான் கேள்வி. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x