Published : 20 Jul 2015 10:50 AM
Last Updated : 20 Jul 2015 10:50 AM

ஒப்பந்தம் ஒன்று, பலன்கள் பல

ஈரான் மீதான தடை நீங்கியதில் ஈரான் மக்களை விட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் அமெரிக்கா, ஈரான் இடையே நிலவிவந்த பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளது என்றே சொல்லலாம்.

என்ன ஒப்பந்தம், எதற்கு சர்வதேச தடை விதிக்கப்பட்டது என்பதை சற்று பின்னோக்கி பார்த்தால் மகிழ்ச்சிக்கான காரணம் புரியும்.

அணுகுண்டுக்கு மிகவும் பிரதான மானது யுரேனியம். இதை அணு மின் நிலையத்திலும் பயன்படுத்தலாம். அணு குண்டு தயாரிக்கவும் பயன் படுத்தலாம். ஈரான் அதிக அளவில் யுரேனியத்தை செறிவூட்டியது சர்வதேச அளவில் மிகப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. 2006-ம் ஆண்டு யுரேனியம் செறிவூட்டுவதைக் குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விடுத்த கோரிக்கையை ஈரான் ஏற்கவில்லை. 20 ஆயிரம் சென்ட்ரிபியூக் இயந்திரங்கள் மூலம் யுரேனியத்தை செறிவூட்டியதால் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச தடையை விதித்தது.

சர்வதேச தடை விதிக்கப்பட்டதால் ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி முற்றிலுமாக முடங்கியது. ஈரானிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கும் அளவைக் குறைக்குமாறு சர்வதேச அளவில் நிர்பந்தம் வந்தது.

வெளிநாட்டு வங்கிகளில் ஈரானுக்கு எண்ணெய் ஏற்றுமதிக்காக செலுத்தப்பட்டிருந்த 15 ஆயிரம் கோடி டாலர் தொகையும் முடக்கப்பட்டது.

ஈரான் மீதான தடையை நீக்க வேண்டும் என்று பிற நாடுகளுக்கு நெருக்குதல் கொடுத்து வந்த அதேவேலையில், ஈரானும் தனது பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ள முன்வந்தது.

அனைத்துக்கும் மேலாக ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப் பட்டதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நாட்டின் பணவீக்கம் 50 சதவீதம் முதல் 70 சதவீத அளவுக்கு உயர்ந்தது. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5 சதவீத அளவுக்குக் குறைந்ததும் இதற்குக் காரணமாகும்.

இதனால் 2013-ம் ஆண்டிலிருந்து பல்வேறு கட்டங்களாக நடந்த பேச்சு வார்த்தை கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளோடு நடத்திய பேச்சுவார்த்தையில் யுரேனியம் செறிவூட்டுவதை குறைத்துக் கொள்ள ஈரான் சம்மதித்தது. அடுத்த 15 ஆண்டுகளில் செறிவூட்டப்பட்ட 10 ஆயிரம் கிலோ யுரேனியத்தை 300 கிலோவாக குறைத்துக் கொள்ள ஒப்புக் கொண்டது.

அத்துடன் தனது அணு உலைகளை சர்வதேச பார்வையாளர்கள் பார்வை யிடவும் அனுமதித்தது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து ஈரான் மீதான சர்வதேச தடை நீங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இந்தத் தடை நீக்கத்தை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் உடனடியாக வரவேற்றுள்ளன. பிரான்ஸ், ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் ஈரானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள் ளனர்.

வளைகுடா நாடுகளில் எண்ணெய் வளம் மிக்க நாடு ஈரான். இங்கு நார்வேயைச் சேர்ந்த ஸ்டாட்ஆயில் மற்றும் பிரான்சின் டோட்டல் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் கூட்டாக எண்ணெய் அகழ்வில் ஈடுபட்டிருந்தன. 2012-க்குப் பிறகு இவை ஈரானிலிருந்து வெளியேறின. இப்போது தடை நீங்கியதால் இந்த நிறுவனங்கள் ஈரானுக்கு மீண்டும் செல்லும்.

சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங் களான ஃபோக்ஸ்வேகன், பியூஜியாட் ஆகியன மீண்டும் அங்கு தங்களது வர்த்தகத்தைத் தொடங்கும். நிதித் துறையைப் பொறுத்தமட்டில் பன்னாட்டு வங்கிகளும் ஈரானுடனான பரிவர்த்தனையை விரும்புகின்றன. ஆனால் அதற்கு அமெரிக்க அரசு நிதி சேவை தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

இந்தியாவுக்கு…

ஈரானிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய வழி ஏற்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டிலிருந்து ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைத்துவிட்டது. ஆப்கன் விவகா ரத்தில் அமெரிக்காவின் குறுக்கீடு இன்றி ஈரானுடன் இணைந்து செயல்பட இந்தியாவுக்கு வழியேற்பட்டுள்ளது.

அனைத்துக்கும் மேலாக இந்த தடை நீங்கியதில் இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். சுங்க வரியை ஈரான் 40 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பும் இந்திய பாசுமதி அரிசி ஏற்றுமதியாளர்களுக்கு உருவாகி யுள்ளது.

இந்தியாவிலிருந்து 2013-14-ம் நிதி ஆண்டில் 14 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா விலிருந்து துபாய் வழியாக பாசுமதி அரிசி ஈரானுக்கு சென்றது. இப்போது நேரடியாக இந்தியாவிலிருந்து இறக் குமதி செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரானில் உள்ள ஷப்பார் துறை முகத்தை மேம்படுத்தும் பணியை இந்தியா துரிதப்படுத்தக்கூடும். இதனால் ஆப்கானிஸ்தானுக்ககு கடல்வழி போக்குவரத்து எளிதாகும். போடப்பட்டிருக்கும் ஒப்பந்தம் ஒன்றாக இருந்தாலும், பல நாடுகளுக்கு பல வகையில் இது பயனுள்ளதாக இருக்கும்.

பன்னாட்டு வங்கிகளும் ஈரானுடனான பரிவர்த்தனையை விரும்புகின்றன. ஆனால் அதற்கு அமெரிக்க அரசு நிதி சேவை தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x